//பாட்டி சொன்ன மந்திரம் //
கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் போல் பலவித இரைச்சல்களோடு நிரம்பி வழிந்தது கூட்டம், அங்குமிங்கும் பல சத்தங்களுக்கு இடையில் கேட்டது கண்டக்டரின் குரல். திருச்சி... திருச்சி... திருச்சி போறவங்கல்லாம் வண்டில ஏறுங்க.... கண்டக்டர் கத்திக்கொண்டு இருந்தார். வாங்கம்மா... திருச்சியா... வாங்க வாங்க..." வலுக்கட்டாயமாக அழைத்தர். இல்லையென கண்களால் பதில் சொல்லிய படி ஒரு டிராவல் பேக் பின்னால் இழுக்க, தோளில் மாட்டியிருந்த ஹேன்பேக் இன்னொரு பக்கம் சரிந்து கொட்ட அதை சரிசெய்துகொண்டே மன்னார்குடி பஸ் நிக்கிறதா என பார்த்துக்கொண்டே வேகமாக நடந்து சென்றாள் காவியா.. நாலைந்து பஸ்களை கடந்து மன்னார்குடி பஸ் நின்றது. டிக்கெட் வாங்கலாம் என்று அருகே சென்றால் கண்டக்டரைச் சுற்றி ஒரே கூட்டம். சார் ... கும்பகோணம் ஒன்னு, சார்... மன்னார்குடி ஒன்னு... சார் ... நீடாமங்கலம் ஒன்னு ஒருவர் மேல் ஒருவர் கைகளை நீட்டிய நின்றனர் பயணிகள். அதற்கு நடுவே கைகளை நீட்டி " சார்.. மன்னார்குடி ஒன்னு லேடிஸ் " என்றாள் காவியா. கண்டக்டர் கண்ணாடிக்கு இடையில் மேலே பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் மற்றவர்களுக்கு டிக்கொடுக்க தயாரானார். சிறிது நேர காத்திருப்புக்கு பின் பணத்தை வாங்கிக்கொண்டு சீட் நம்பர் ரெண்டுல உட்காரும்மா " என்றபடி டிக்கெட்டை கொடுத்தார்.
காவியா டிக்கெட்டை வாங்கி கொண்டு பஸ்சில் ஏறி ல்கேஜ்யை மேலே வைத்துவிட்டு கீழே பார்த்தாள் ஜன்னல் ஓர இருக்கையில் வெள்ளைத் தலையுடன் நல்ல சிவப்பு நிறத்தோடு அறுபத்தைந்து வயதுடைய பாட்டி அந்த இடத்தைப் பிடித்திருந்தார். ஏக்கத்தோடு பார்த்துவிட்டு ஒரு சின்ன புன்னகையோடு " பாட்டி இந்த பேக்கை பார்த்துகோங்க நான் போய் வாட்டர் பாட்டிலும், பிஸ்கட் வாங்கிட்டு வந்துர்றேன் " பாட்டியின் பதிலை எதிர்பார்க்காமல் பஸ்சைவிட்டு கீழே இறங்கி அருகில் இருந்த கடையில் வாட்டர் பாட்டிலும், பிஸ்கட்டும் வாங்கிகொண்டு தனது சீட்டில் வந்து அமர்ந்தாள்.
பஸ் எப்ப எடுக்குமோ தெரியல என்று நினைத்தபடி வாசற் படியை பார்த்தாள் ஒரு இளைஞன் லேசான குறுநகையோடு இவளை பார்த்தபடி தனக்கு நேர் எதிர் சீட்டில் போய் அமர்ந்தான். அவனின் கண்கள் என்னவோ பேசுகிறதே... என நினைத்தவள் தனக்குள் சிரித்துக்கொண்டாள் வேர்வை கொட்ட துடைத்துக்கொண்டு பஸ் எடுத்தாதான் காத்து வரும் என சொல்லிக்கொண்டு இருக்கையில் பக்கத்தில் இருந்த பாட்டி மெல்ல பேச்சுக்கொடுத்தார்.
" நீ எங்கம்மா போறே..."
" மன்னார்குடி பாட்டி "
"சென்னையில் வேலை பார்க்குறீயா..?"
" ஆமா பாட்டி இங்கதான் வேலை பார்க்கிறேன். நீங்க எங்க போறீங்க? " பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தாள் காவியா.
"நான் கும்பகோணத்தில் இறங்கிடுவேன் அதுதான் சொந்த ஊர். பொண்ணு போன் பண்ணி திருவிழாவுக்கு வாம்மான்னு ஒரே தொந்தரவு அதான் ஆபிஸ்ல லீவு சொல்லிட்டு வந்திருக்கேன்.." என்று லேசா தலையை ஆட்டியபடி நீட்டி முளக்கி சொன்னது.
"ஆபிஸ்ல வேலை பார்க்குறீங்களா எங்க என்ன வேலை " ஆச்சரியதோடு கேட்டாள் காவியா.
" ஆபிஸ்ல கூட்டுற வேலைதான் பார்க்கிறேன் ... காப்பி போடுறது, ரூமை கூட்டி பெறுக்குறதுதான் வேலை. எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு வேலை பார்த்துச்சு அது சரியில்லன்னுதான் என்னை கூப்பிட்டாங்க. அந்த பொண்ணு ஒரு மாதிரி அதான் வேணான்னு சொல்லிட்டாங்க. நான் இல்லன்னா பாவம் ரொம்ப கஷ்டபடுவாங்க எல்லாம் ஆம்பளபுள்ளைங்க குப்பையில கிடந்து வேலை பார்க்க முடியுமா? அதான் நான் எப்பவும் லீவு போடமாட்டேன். வேற வழியில்லாம கெஞ்சி லீவு வாங்கிட்டு வந்திருக்கேன். ரெண்டு நாள்ல திரும்பிடனும் இல்லன்னா நம்ம வேலைய யாராவது தட்டிகிட்டு போய்டுவாங்க " என்று ஒன்று விடாமல் சொன்னது. பாட்டி பேசும்போது வாய் மட்டுமல்ல கைகளும் சேர்ந்து பேசின.
" அப்போ... நீங்க சென்னையில தனியாவா இருக்குறீங்க, இங்கே வீட்டு வாடகையெல்லாம் ரொம்ப அதிகமாச்சே எப்படி சமாளிக்கிறீங்க?" என்றாள் காவியா.
"ம்...ம்... நான் தனியாதான் இருக்கேன் மாடில தான் வீடு நாலஞ்சு குடித்தனம் இருக்கு. மாசம் மூவாயிரத்து ஐநூறு வாடகை ஒரே ரூம்தான் அதுலையே சமைச்சு அதுலையே சாப்பிட்டுக்கனும். சாமான் பெருசா ஒன்னுமில்ல ஒரு கட்டில் கிடக்கு சமைச்சு சாப்பிட்டுட்டு போய் படுத்துருவேன். ரெண்டு ஆபிஸ்ல கூட்டுறேன் மாசம் மூவாயிரத்து ஐநூறு குடுக்குறாங்க மேல ஆயிரம் போட்டு நாலாயிரத்து ஐநூறா கேட்டு இருக்கேன் தர்றேன்னு சொல்லியிருக்காங்க அதுபோக மூனுவீட்டுல வீடு பெருக்கி பாத்திரம் கழுவுற வேலை ஒவ்வொரு வீட்டுலையும் மூவாயிரம் தர்றாங்க... முதியோர் பணம் ஆயிரம் வருது அத வாங்க நான் பட்ட பாடு கொஞ்சம் இல்ல, ஒருத்தன் வாங்கி தர்றேன் வாங்கி தர்றேன்னு சொல்லி என்கிட்ட. ரெண்டாயிரம் வாங்கிட்டான் ஆனா அவன் வாங்கி தரல அப்புறம் ஒரு டீச்சர் வாங்கம்மா நான் வாங்கி தர்றேன்னு கூட்டிபோய் எல்லாம் எழுதிக்கொடுத்துச்சு இப்ப ஒரு வருஷமா வாங்கிட்டு இருக்கேன்..." என்று சொல்லி முடித்தது.
காவியா கண்கள் விரிய.... என்னடா ஒவ்வொருத்தனும் தான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலையேன்னு நாயா பேயா அலைஞ்சுட்டு இருக்கான் இந்த பாட்டி இந்த வயசுல அஞ்சு இடத்துல வேலை பார்க்குதே வீட்டு வேலையில் நிறைய காசு பார்க்கலாம் போலிருக்கே என மனதிற்குள் நினைத்துக்கொண்டு "அப்பறம் பாட்டி நீங்க தனியா இருக்குறீங்க உடம்புக்கு முடியலன்னா என்ன செய்வீங்க .. பக்கத்துல இருக்கிறவங்க வந்து ஹெல்ப் பண்ணுவாங்களா.." கொஞ்சம் வருத்தத்தோடு கேட்டாள் காவியா.
" ம்...ம்... இதுவரைக்கும் எதுவும் வந்தது இல்ல, நான் யார் வீட்டுக்கும் போகமாட்டேன், அவங்களும் வரமாட்டாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க வந்து கேட்பாங்க நீங்க ஒரு ஆளுக்கு ஏன் சமைக்கிறீங்க நான் தர்றேன் சாப்பிடுங்க என்பாங்க நான் வேண்டான்னு மறுத்துடுவேன். அவங்க என்ன ஆளுங்களோ இங்கே எல்லாம் தெரியாது அதனால நான் எதுவும் வாங்கிக்க மாட்டேன். நான் அனுமார் சாமி கும்பிடுறவ எனக்கு ஒத்துக்காது நமக்கு ஒத்துகலன்னா சாப்பிடாம இருக்கிறது நல்லது தானே ..? இந்த பாட்டி எப்பவும் இப்படிதான்னு சொல்லிட்டு கோச்சுகிட்டு போய்டுவாங்க என்ன பண்றது "
" வெள்ளம் வந்துச்சே அப்ப என்ன செஞ்சிங்க வீட்டுக்குள்ள தண்ணீர் வந்திடுச்சா.... சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா போயிருக்குமே " என்றாள் காவியா.
"அந்த கதைய கேளுங்க நான் அரிசி, பருப்பு, காய்கறின்னு எல்லாமே வாங்கி வச்சுருந்தேன்.. இட்லிமாவு வேர அரைச்சு வச்சுருந்தேன். அதனால எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல, மழைக்கு முன்னாடி தக்காளி கிலோ அஞ்சு ரூபான்னு சிரிப்பா சிரிச்சுது அந்த நேரம் பார்த்து ரெண்டு கிலோ வாங்கி வச்சேன் அது சமயத்து ல உதவிச்சு. பக்கத்து வீட்டு காரவங்களுக்கு எல்லாம் நான்தான் அரிசி, காய்கறியெல்லாம் கொடுத்தேன். பாவம் புள்ளக்குட்டிகாரங்க நம்மளால முடிஞ்சது அதுதான். நாங்க மாடில இருந்ததால எங்களுக்கு தண்ணீர் வரல நிறைய பேர் உதவி செஞ்சாங்க அந்த சாப்பாடு வாய்ல வைக்க முடியல ஏதோ கொண்டு வந்து கொடுக்குறாங்களேன்னு வாங்கிட்டோம்.." எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த பேக்கை திறந்து அதிலிருந்து பொட்டலத்தை எடுத்து பிரித்தது " பூண்டு வைத்து அரைத்த மிளகாத்துவையோடு கலந்த தோசையின் வாசம் மூக்கைத் துளைத்தது அந்த வாசமே பாட்டி நல்லா சமைக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.
"மூனு தோசை கொண்டுவந்தேன் நீ ஒன்னு எடுத்துக்கம்மா..." பாட்டி பரிவோடு நீட்டியது.
" வேண்டாம் பாட்டி நீங்க சாப்பிடுங்க நான் சாப்பிட்டுதான் வந்தேன் " என்றாள் காவியா.
" எப்படிம்மா உன்னை பார்க்க வச்சுட்டு சாப்பிடுறது நீ வேண்டாம்னு சொல்றதால சாப்பிடுறேன்..." என்றபடி சாப்பிட்டுவிட்டு கை கழுவி விட்டு தாம்பரம் தாண்டிருச்சா ... பல்லிடுக்கில் மாட்டிய தோசையை நாக்கால் துலாவியபடி கேட்டுக்கொண்டே நான் தூங்குறேன் நீயும் தூங்கு என்று சொல்லிவிட்டு தூங்கிபோனது.
காவியாவுக்குதான் தூக்கமே வரவில்லை மண்டைக்குள் பாட்டியின் பேச்சு இடித்துக்கொண்டே இருந்தது. இந்த வயசுல இரண்டு ஆபிஸ்ல வேலை அது மாசம் ஒன்பதாயிரம் கிடைக்குது, மூனு வீட்டுல வீட்டு வேலை அது ஒன்பதாயிரம் கிடைக்குது எல்லாம் சேர்த்தா ஒரு மாசத்திற்கு பதினெட்டாயிரம் சம்பாதிக்குது. இந்த பாட்டியால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமெனில் படித்த இளைஞர்களால் ஏன் ஒரு வேலைக்கு கூட போக முடியவில்லை. அப்போ இவர்களின் தேடல் சரியானதாக இல்லையா அல்லது வாய்ப்புகள் இருந்தும் அவர்களுக்கு பயன்படுத்த தெரியவில்லையா...? மனசுக்குள் ஆயிரம் கேள்விகள். இனிமேல் நானும் கிடைக்கும் நேரங்களில் பார்ட் டைம் வேலைக்குச் செல்ல வேண்டும் அந்த சிந்தனையோடு லேசாக கண்ணயர்ந்தாள் காவியா...
தூரத்தில் சிறுபுள்ளியாய் ஏதோ ஒரு வெளிச்சம் பெரிதாகிக் கொண்டே வந்தது.
****************
வீ. சந்திரா
No comments:
Post a Comment