நான் வசிக்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி பிளாட் பாரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகே தான் அந்த பாட்டியின் இருப்பிடம். புங்கை மர நிழலில் கால் நீட்டிய படி அமர்ந்து இருக்கும். ஒரு பையில் சில துணிகள் அருகில் ஒரு தட்டு ஒரு டம்ளர் இதுதான் அந்த பாட்டியின் அசையும் அசையா சொத்துக்கள். நான் அந்த வழியாக செல்லும்போது அந்த பாட்டியை பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம். இன்று லேசாக மழை அந்த பாட்டி எங்கே தூங்கியிருக்கும் என்று சிந்தனையோடு சென்றேன்.
மாலை.... வாக்கிங் சென்று கொண்டிருந்தேன் . நான் இருக்கும் இடத்திற்கு அருகே பிரசித்தி பெற்ற கோவில் இருக்கிறது. அந்த கோவிலின் வாசலில் அந்த பாட்டி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுதான் தொழில் போல அப்போதும் நான் பார்த்துக்கொண்டேன் சென்றேன் ஓ... அது அந்த பாட்டியில்ல என்று மனதில் ஓடியது.
திரும்பி வரும்போது அந்த பாட்டியின் எதிரில் ஒரு நாய் ஏதோ கேட்கிறது பாவம் அவரே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறது அவரிடம் என்ன இருக்க முடியும் அந்த சூழ்நிலையிலும் அந்த பாட்டி அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறப்பதற்குள் அந்த நாய் வேறு இடம் சென்று விட்டது. அதை கண்ட அந்த பாட்டி சொல்கிறது. "என்னடா கோச்சுகிட்டு போயிட்டியா... என்கிட்ட இருக்கிறது இதுதான் இது புடிக்கலன்னா நான் என்ன செய்ய முடியும் , என்று முகத்தை தாழ்த்தி இரண்டு கண்களையும் மேல் நோக்கி தூரத்தில் சென்ற நாயயை பார்த்தபடி சொல்கிறது. நான் ஆச்சரியத்தோடு பார்த்தபடி அந்த பாட்டியை கடந்து சென்றேன் . இல்லாதவர்கள் எப்போதுமே இரக்க குணம் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இருப்பவர்கள் இல்லை என்று சொல்லும் வேடிக்கை மனிதராகவே இருக்கிறோம்.
No comments:
Post a Comment