Tuesday, 30 January 2018

பள்ளிப் பருவத்திலே( 2)

            நட்பும் காதலும் கிட்டதட்ட ஒன்றுதான் காதலில் எப்படி பிரிவு , பரிவு, துன்பம்,இன்பம், அன்பு பாசம் எதிர்பார்ப்பு, ஏக்கம், சண்டை, கொஞ்சல் கெஞ்சல் இருக்கிறதோ அது எல்லாமே நட்பிலும் உண்டு ஆனால் இரண்டிற்கும் ஒரே ஒரு நூழிலை  வித்தியாசம் தான் காதலில் அசைவம் உண்டு நட்பில் அது இல்லை அதனால்தான் அது புனிதமாக சொல்லப்படுகிறது. உறவுகளைவிட உயர்வாக கருதப்படுகிறது கணவன் மனைவிக்குள் உறவு இல்லையெனில் விவாகரத்து வாங்க உரிமை உண்டென்று அரசு சொல்கிறது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு கண்வனையும் மனைவியையும்  இணைப்பது உறவு அது இல்லை என்றால் தனித்தனியே பிரிந்து போகிறார்கள் ஏனெனில் அதுதான் வாழ்க்கை என்கிறார்கள் ஆனால் நட்பில் அப்படி பந்தம் இல்லை என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறதே எப்படி அதற்கு பெயர் தான் நட்பு. இவையெல்லாம் உணர்ந்தவர்களால் மட்டுமே நட்பை வளர்க்க முடியும். ஆனால் ஆழமான நட்பில் பொறாமை வந்துவிட்டால் அதை விட கொடுமை எதுவுமே இல்லை. இவர்கள் நட்பிலும் அது வந்தது சுதாவுக்கும் கலாவுக்கு இடையிடையே ஆயிரம் சண்டைகள் வந்தாலும் கொஞ்ச நேரத்தில் சமாதானம் ஆகிவிடும் இவர்கள் இருவருக்கும் நடுவில் யாரும் வரதா வரை. ஆனால் இவர்கள் இடையில் புதிதாக ஒரு பெண் வந்தாள். இவர்கள் வீட்டிற்கு அருகிலே ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தது அங்கே புதிதாக ஒரு நர்ஸ் வந்தாள். பெயர் வள்ளி ஒல்லியான தேகம், நல்ல கருப்பு ஆனால் கலையான முகம் அதற்கு தகுந்தார் போல் கலகலவென பேச்சு சுதாவுக்கு பார்த்த உடனே அவரை ரொம்ப பிடித்து போனது தன் கூட பேசாத ஒரு ஆளைவிட கலகலவென ஒரு ஆள் பேசுவதை கேட்டதும் பிடித்து போனதோ என்னவோ இது கலாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனெனில் சுதாவிடம் பேசுவதற்காகதான் கலா அவள் வீட்டிற்கே வருகிறாள் அந்த நேரத்தில் வள்ளியும் வந்து பேசிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை அது உள்ளுக்குள்ளே பொறாமையை வளர்த்தது.          சுதாவுக்கு வள்ளியை பிடிக்க இன்னொரு காரணம் இருந்தது. இளம் வயதிலே கணவனை பிரிந்து ஒரு ஆண் குழந்தையை பிரிந்து வாழ்கிறாள் விவாகரத்திற்காக காத்திருக்கிறாள்  நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறாள் இப்போது அம்மாவோடுதான் வசிக்கிறாள் இரண்டு அண்ணன்கள் உண்டு ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. இவள் உழைத்து தான்இவள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை இத்தனை கஷ்டங்களையும் தாண்டி தன்னபிக்கையோடு வாழ்கிறதே என்ற ஒரு இரக்கம் பிறந்தது. அதோடு தன்னைவிட ஏழு வயது சிறியவளிடம்  தன்னைப் பற்றி ஒன்றும் மறைக்காமல்     கொட்டி தீர்த்து ஒரு தோழியாக நினைத்து முதல் சந்திப்பிலே சொன்னது சுதாவுக்கு பிடித்திருக்கலாம். அவளின் கதையை கேட்டு ஒரு இரக்கம் அக்கறை பிறந்தது மெல்ல. வள்ளியின் கலகலப்பான பேச்சு மட்டுமல்ல நிறைய விஷயங்கள் தெரிந்தவளாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள். இங்கிருந்து புத்தகம் அங்கே போவது அங்கிருந்து புத்தகம் இங்கே வருவது அந்த கதையை பற்றி விவாதிப்பது பல கதைகள் பேசுவது அலசி ஆராய்வது இ தெல்லாம் கலாவிற்கு பிடிக்கவே இல்லை வள்ளியின் மீது மேலும் வெறுப்பை உண்டாக்கியது. கலாவிடம் ஒரு நாவலை கொடுத்து படிக்கச்சொன்னால் ஒரு வாரத்திற்கு மேலாகும் படித்து முடிப்பதற்கு அதனால்  கலா நாவல் படிப்பதில்லை சுதாவிடம் கதை கேட்டு தெரிந்து கொள்வாள் கதையை படிப்பதைவிட சுதா சொல்லி கேட்பது பிடித்திருந்தது. இப்போது இடையில் வந்த வள்ளியால் அது குறைந்துவிட்டது என்ற கோபம் மேலும் வளர்ந்து கொண்டே போனது. சுதா கூட படிக்கிற சக பிள்ளைகளிடம் பேசினாலே கலா கடுப்பாகி முறைத்து பார்க்கும் "என்னதான் அப்படி பேசுவீங்களோ' என்று மூஞ்சை தூக்கி வைத்துக்கொள்ளும். கலாவை உசுப்பேற்றவே சில பிள்ளைகள் சுதாவை இழுத்து வைத்து பேசுவார்கள் பள்ளியிலே அப்படி என்றால் இப்போது வீட்டில் சொல்லவா வேண்டும்.

            நாட்களும் மிக வேகமாக நகர்ந்தது இருவராக இருந்தவர்கள் இப்போது மூவரானார்கள். வழக்கம் போல் டைப் ரைட்டிங் கிளாஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வாங்கிகொண்டு வந்த ஸ்நாக்சை இரண்டு பங்காக பிரித்துக்கொண்டு இருந்தாள் கலா. வாங்கிவந்த புத்தகங்களில் எதை முதலில் படிக்கலாம் என்று புரட்டி பார்த்துக்கொண்டிருந்தாள் சுதா. அப்போது தூரத்திலே வள்ளி வருது தெரிந்தது.

             "கலா... அதை மூனு பங்கா பிரி வள்ளி வர்றாங்க அவங்களுக்கு கொடு பாவம் .."என்றாள் சுதா.

             "ம்.. நீ கொடுக்கிறதுன்னா கொடு என்னால கொடுக்க முடியாது கண்டவங்களுக்கெல்லாம் நான் கொடுக்க மாட்டேன். இனிமே நான் எதுக்கு அதான் நந்தி மாதிரி வந்தாச்சே நான் போறேன் எங்க வீட்டுக்கு.." என்றபடி வெடுக்கென்று கிளம்பினாள் கலா.

            வள்ளிக்கு கலாவின் மனநிலை புரியவில்லை வீட்டுக்குள் நுழையும் போதே ஒரு சத்தத்தோடு வருவார் அதாவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பார்களே அந்த மாதிரி கொஞ்சம் சத்தமாக பேசுவது, பார்க்கின்ற பேசுகின்ற அனைவரிடமும் உறவு முறைச்சொல்லி ஈசியாக பேசக்கூடிய ஒரு குணம் வள்ளிக்கு இருந்தது பார்க்கின்றவர்களை எல்லாம் அக்கா, அண்ணி, அண்ணா, மாமா என்று கட்டிப்பிடித்து பேசும் பழக்கம் இருந்தது அதனால் ரோட்டில் யாரை பார்த்தாலும் பேசிவிடுவார் அதனால் நிறைய பழக்கவழக்கம் இருந்தது. அதோடு தூரத்தில் வரும் போதே கூப்பிட்டுக்கொண்டே வருவார் அப்படிதான் இப்போதும் வந்தார்.

            "என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்"

          கலா அதை கவனிக்காதது போல் பதில் ஏதும் சொல்லாமல் வேக வெளியே சென்றாள்.

         "என்னடி ஆச்சு கலாவுக்கு அவங்க அம்மாவுக்கு அந்தபுள்ளைக்கும் ஏதாவது சண்டையா உம் னு போகுது.."

          "இல்ல .. அது சும்மாதான் போகுது காதுல விழல போல " என்று சமாளித்தாள்.

         "அதானே இல்லன்னா இப்படி போகாதே காதுலதான் விழல நினைக்கிறேன் சரி என்ன பண்றீங்க.. ரிசல்ட் எப்பவருது?

     "ஜுன் ரெண்டுன்னு சொன்னாங்க தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."

      "பயமா இருக்கா சும்மா சொல்லாத எப்பவும் புக்கும் கைமா இருக்கே.. நீ நல்லா எழுதி இருப்பே என்ன படிக்கப் போறே எங்க படிக்கப் போறே..?"

          "மார்க் வரட்டும் அப்பதான் ஒரு முடிவெடுக்க முடியும். தஞ்சாவூர் போய் படிக்கலாம் ஆனால் ஹாஸ்டல்ல தங்குற மாதிரி இருக்கும் அம்மாவை விட்டுட்டு எப்படி போறது அதான் யோசிக்கிறேன் அதிராம்பட்டணத்தில் சேரலாம் ஆனால் அது ரொம்ப மோசம்னு சொல்றாங்க பட்டுக்கோட்டையில் தனியார் காலேஜ்ல சேர வேண்டியதுதான்.."

          "சரி எங்க படிச்சா என்ன நல்லா படிச்சா எங்க வேணாம் படிக்கலாம்."

        "அப்புறம் நீங்க ஏதோ கரஸ்ல படிக்க போறேன்னு சொன்னிங்க"

        "ஆமா படிக்க ஆசைதான் ஆனால் எங்க அப்ளிக்கேஷன் வாங்னுகுறதுன்னு எனக்கு ஒன்னும் தெரியாது. "

          "சரி நான் வாங்கிட்டு வர்றேன் நீங்க படிக்கிறீங்களா?

         "என்னடி சொல்றே.. நிஜமாவா எங்க வாங்கிறது எங்கே பணம் கட்டுறது எனக்கும் எதுவும் தெரியாது" சந்தோஷம் கலந்த சிரிப்போடு சொன்னாள்.

         "உங்களுக்கு அதைப்பற்றி என்ன நீங்க கவலைப்பட வேண்டாம் நான்அ வாங்கிட்டு வர்றேன் நீங்க அப்ளிக்கேஷனை மட்டும் பில்அப் பண்ணிக்கொடுங்க போதும் மற்றது நான் பார்த்துக்கிறேன்... சரி இந்த மிக்சர் எடுத்துகோங்க உங்களுக்குதான் அது என்று தனக்கு உள்ளதை எடுத்து வைத்தாள்."

            " இது எனக்கா சரி இருக்கட்டும் போகும்  போது எடுத்துட்டுப்போறேன் நீ என்னை படிக்க வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டே... அப்புறம் என்ன நீயே பார்த்துக்க சரி என்ன சாப்பாடு இருக்கு"

             "சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும், சாப்பிடுறீங்களா"

             "என்ன சாப்பிடுறிங்களான்னு கேட்கிற தள்ளு நானே போய் போட்டு சாப்பிட்டுக்கிறேன் சாப்பிடுற விஷயத்திலே நமக்கெல்லாம் கூச்சமே இல்ல நீ அதைபத்தி ஒன்னும் வொரி பண்ணிக்காத என்று சிரித்தபடி கடகடவென்று சாப்பிட்டுவிட்டு மணி என்னடி டாக்டர் வர்ற நேரம் நான் அங்கே இருக்கனும் அன்னைக்கே கேட்டார் பக்கத்துவீட்டு பண்ணுங்க கிட்ட அப்படி என்னதான் பேசுறே எப்ப பார்த்தாலும் அங்கேயே போய் நிக்கிற நான் பார்த்துட்டுதான் இருக்கேன்னு சொன்னார் நாங்க ஏதாவது பேசிட்டு போறோம் உங்களுக்கு என்ன சார்னு பதிலுக்கு கேட்டுட்டேன். சரி நான் போறேன் என்றபடி ஒடினாள்..."

         அந்த டாக்டர் கொஞ்சம் ஜொள்ளு நாங்கள் பேசுவதை ஜன்னல் வழியாக பார்ப்பார் சில நேரம் வெளியே வந்து காற்று வாங்குவது போல் நோட்டம் விடுவார். நாங்கள் நைசாக நழுவி விடுவோம். வள்ளி கொஞ்ச நாளிலே க்ளோசாக பேசியது மட்டுமில்லாமல் வீட்டுக்கு வந்து  சாப்பிடுறதுக்கு என்ன இருக்குன்னு திறந்து பார்த்து சாப்பிடுற அளவுக்கு வந்து விட்டார். இதுவும் கலாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை நாம் இருந்த இடத்தில் இன்னொரு ஆள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுதாவுக்கு பதில் ஏதும் சொல்லா முடியாமல் சமாளித்தாள். சில நேரங்களில் அடிக்கடி கலா சொல்லும் வார்த்தை.. "இங்க பாரு நீ பாவம்.. பாவம் னு ரொம்ப தான் இரக்கப்படுறே ஒரு நாள் நல்லா உன்னைய ஏமாற்ற போகுது பார்த்துக்க நான் அப்ப இருந்து உனக்கு சொல்லிட்டு இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற.. உனக்கு அப்பதான் புரியும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அவ்வளவுதான் என்று கலா சொல்லும் போது சுதாவுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது அவர் அப்படி எதும் செய்யமாட்டார்னு எம் மனசு சொல்லுதுன்னு பதிலுக்கு சொல்லி சமாளிப்பால் சுதா.

              என்னவோ தெரியவில்லை வள்ளி மீது ஒது தனி பிரியம் இருக்கத்தான் செய்தது ஏனென்று சுதாவுக்கு சுத்தமாக புரியவில்லை. இரக்கமா பரிவா என்றே தெரியவில்லை சில நாட்கள் வள்ளி வராத போது வெறுமையாக உணர்ந்திருக்கிறாள் வரவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கிறாள் காத்திருந்து ஏமாற்றத்தை உணர்ந்திருக்கிறாள் ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியவேயில்லை.

               மறுநாள் வழக்கம் போல் டைப்ரைட்டிங் கிளாஸ் முடிந்து வீடு திரும்பு போது கலாவும் சுதாவும் வழக்கம் போல் பேசிக்கொண்டே நடந்து வந்தார்கள். அப்போது சுதா ஆரம்பித்தாள் நூறு ரூபா பணம் இருந்தால் இரண்டு ப்ளவுஸ் பிட்டு எடுக்கலாம் ஆனால் பணம் இல்லையே அம்மாகிட்ட கேட்கலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன். என்றாள்.

            "நூறு ரூபா தானே நான் வைச்சிருக்கேன் வேணுமா? " கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டாள் கலா.

           "இல்ல கலா வேணாம் நீயே வைச்சுக்க உங்கம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க..வேண்டாம் நாளைக்கு வாங்கிக்கலாம்"

            "ஏன் நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா வா... இந்த கடைக்கு போவோம் என்று சுதாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

              இருவரும் கடையில் நுழைந்து ஒரு பிங் கலர் ப்ளவுஸ்சும், ப்ளூ கலர் ப்ளவுஸ்சும் வாங்கிகொண்டு இருவரும் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்து வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வேலைகளை முடித்துவிட்டு உட்காரும் போதும் வீட்டிற்கு பின்னால் வள்ளி கூப்பிடுவது கேட்டது. "சுதா... சுதா... இங்கே வந்துட்டு போயேன் வேலையா இருக்குறீயா..?"

             "இல்ல இதோ வந்துட்டேன்..' என்றபடி வாங்கி வந்த ப்ளவுஸ்சை எடுத்துக்கொண்டு வெளியே வரவும் கலா அங்கே வரவும் சரியாக இருந்தது. கலாவும் சுதாவும் சேர்ந்தே வீட்டிற்கு பின்னே சென்றார்கள்.

              இருவரும் சேர்ந்தே வருவதை பார்த்த வள்ளி "ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளதான் இருந்தீங்களா அங்கே வருவோம்னு நினைச்சேன் டாக்டர் இன்னைக்கு வீட்டுக்கு போகவே இல்லை அதான் அந்த பக்கம் வரமுடியல சரி பிள்ளைகளை காலையில் இருந்து பார்க்க முடியலையேன்னு கூப்பிட்டு பார்த்தேன்"

              சுதா வாங்கி வந்த ப்ளவுஸ்சை வள்ளியிடம் நீட்டினாள் வள்ளி சிரித்தபடி வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துவிட்டு ரொம்ப நல்லா இருக்கு யாருக்கு உனக்கா கலாவுக்கா..?

             எங்க ரெண்டு பேருக்கும் இல்ல இது உங்களுக்குதான் உங்க சாரிக்கு மேட்சா வாங்கிட்டு வந்தேன். நீங்க இப்ப போட்டு இருக்கிற ப்ளவுஸ் இன்னும் கொஞ்ச நாள்ல கிழிஞ்சு போயிடும் அதான் வாங்கிட்டு வந்தேன்  என்றபடி கலாவை பார்த்தாள் சுதா கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது ஒன்றும் பேசாமல் உம் என்று நின்று கொண்டு இருந்தது.

             வள்ளி அதை கவனிக்காமல் "ஏம்பா எனக்கு வாங்கிட்டு வந்திங்க நானே வாங்களாம்னுதான் நினைச்சேன் இந்த மாசம் சம்பளம் வாங்கியது வாங்க இருந்தேன் நீங்களே வாங்கிட்டிங்களா எவ்வளவு இது நான் பணம் கொடுத்துர்றேன்.... "என்றாள்.

             "அய்யய்யோ... பணமெல்லாம் வேண்டாம் நீங்களே வைச்சுகோங்க நீங்க பணம் கொடுத்தால் உங்க கூட நாங்க இனிமே பேசவே மாட்டோம்."

             "அட என்னப்பா நீங்க... இதை எங்க அண்ணன் பொண்ணு பார்த்தால் ரொம்ப கிண்டலடிப்பா.. எங்க அத்தைக்கு அவங்க ப்ரண்ஸ் ஏதாவது வாங்கித்தந்திட்டே இருப்பாங்க அவங்களுக்கு என்ன கவலைன்னு கேட்ப்பா எங்கம்மா அவளை திட்டி விடும் சரி சுதா பேசண்ட் வருது நான் அப்புறமா வர்றேன் என்றபடி ஒரே ஒட்டமாக மான் போல் துள்ளி ஓடினாள்.

              சுதா அங்கிருந்து நகர்ந்தாள் கலா எதுவும் பேசவில்லை இருவரும் வீட்டிற்குள் போனார்கள் கலா அங்கே இருந்த வானொலி பெட்டியை திருக்கினாள். அப்போது வானொலியில் இனிமான பாடல் ஒலித்தது துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்...  என்றும் அன்புடன் படத்திலிருந்து நல்ல அருமையான பாடல் அந்த பாடலை கேட்கும் ஏனோ வள்ளியின் நினைவுகள் வந்து போனது இந்த பாடல் வள்ளிக்கு பொருத்தமான பாடல் இதை வைத்து ஏன் நாம ஒரு நேயர் அரங்கம் எழுதக்கூடாது... .ம்.. நல்ல ஐடியா வள்ளி பெயரிலே எழுதுவோம் வள்ளியின் கதை கொஞ்சம் தெரியும் என்பதால் அதற்கு பொருத்தமான பாடல்களை யோசித்து பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்தாள் சுதா. அப்போது சுதாவின் அம்மா உள்ளே நுழைய கலா உம்மென்று முகத்தை வைத்திருப்பதை பார்த்து "என்ன கலா ஒரு மாதிரி இருக்கே... அது உன்னை திட்டுச்சா..."

           "இல்லக்கா... நாம் சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன் என்னை யாரும் திட்டல"

             "இல்ல கலா உம் மூஞ்சு சரியில்லையே.
' கிட்ட குனிந்து முகத்தை தடவினார் சுதாவின் அம்மா அவருக்கு கலாவின் மீது ஒரு தனி பாசம் எப்பவும் உண்டு.

             "இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமாக்கா... நாங்க இன்னைக்கு கிளாஸ் போகும் போது பணம் இல்லன்னு சொல்லிட்டு இருந்துச்சு சரி இதுக்குதான் கேட்குதுன்னு கொடுத்தேன். ரெண்டு பிளவுஸ் வாங்கி வந்து எனக்கு நேராவே வள்ளிக்கு கொடுக்குதுக்கா.. அப்ப எனக்கு எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்க என்று கண்ணை கசக்கியது.

              சுதாவின் அம்மா திரும்பி "என்ன உனக்கு ஒன்னும் புரியலையா... புதுசா ப்ரண்ட் பிடிச்சுகிட்டு என்னது இதெல்லாம் அது இப்ப வந்தது அதுக்கு போய் இப்படி பண்ணிட்டு இருக்கே எனக்கு சுத்தமா பிடிக்கல நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன் அது அடிக்கடி இங்க வர்றதும் எனக்கு பிடிக்கல பார்த்து இருந்துக்க அப்புறம் என் குணம் உனக்கு தெரியாது சொல்லிட்டேன்.. "

             "நீ நினைக்கிற மாதிரி இல்லம்மா... இது ஏதாவது சொல்லுதுன்னு நீ அதுக்கு சப்போர்ட் பண்ணாதே நான் யார் கூடையும் பேசினாலே இதுக்கு பிடிக்குதுல்ல ஒருத்தர் கூட மட்டும்தான் பேசனுமா... ஏன் நான் அவங்க கூட பேசினால் என்ன பாவம் அவங்க எப்படி கஷ்டப்படுறாங்க தெரியும்மா... இரண்டு சேலைய மாத்தி... மாத்தி.. கட்டிட்டு வர்றாங்க அந்த ஜாக்கெட்டும் கிழிஞ்சிரும் போல பாவம் தானே அதான் வாங்கி கொடுத்தேன் அதுக்கு இப்ப என்ன.. இங்க பாரு கலா நீ ஏதாவது சொல்லி வம்பிழுத்து விடாதே... நான் உன் கூட மட்டும் பேச முடியாது எனக்கு எல்லாரும்தான் வேணும். உனக்கு யாரையும் பிடிக்காது யாருக்கும் எதுவும் கொடுக்கவும் பிடிக்காது உன்னை மாதிரி என்னால இருக்க முடியாது. எனக்கும் எங்கம்மாவுக்கும் சண்டைய மூட்டிவிடுற நீ தந்த நூறு ரூபாயை நான் நாளைக்கே தர்றேன் இனிமே எங்கூட பேசாதே ... கோபமாக சொல்லிவிட்டு அந்த பக்கமாக திரும்பி உட்கார்ந்து கொண்டாள் சுதா.

               "பார்த்திங்களாக்கா உங்க பொண்ணு எப்படி பேசுது இதுக்குதான் நான் வாய் திறக்காம இருந்தேன் நீங்க கேட்டதாலதானே சொன்னேன் சரி நான் எங்க வீட்டுக்கு போறேன். அது எப்ப வந்தததோ அப்ப இருந்தே எங்களுக்குள்ள சண்டை வந்துட்டே இருக்கு "என்று முணுமுணுத்தபடி சென்றது.

                இவர்கள் சண்டை இப்படிதான் ஆனால் மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசிக்கொள்வார்கள். சில நேரம் கலாவின் அம்மா வந்து என்னடி உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டையா என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுறா மூஞ்ச தூக்கி வைச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கா அவ தம்பி என்னமோ கேட்டான் தலையிலே நங்குன்னு ஓங்கி குட்டிட்டா அவன் ஓன்னு அழுறான். என்ற பஞ்சாயத்து சொல்வாள். இந்த சண்டைகள் வம்புகள் எல்லாம் இன்னும் சில காலம் தானே இது புரியாமல் ஒருவருக்கொருவர் மூஞ்சை திருப்பிக்கொண்டு இருக்கிறார்கள் விதியின் விளையாட்டை யார் அறிவார்....?

                                              தொடரும்

3 comments:

 1. அருமை....
  தொடரட்டும்.

  ReplyDelete
 2. அருமை....
  தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க மேடம்..! 😄

   Delete