சுதா சில வருடங்களுக்கு பிறகு அவளது பள்ளித்தோழியான கலா வீட்டிற்கு இப்போதுதான் முதல் முறையாக செல்கிறாள் . கலா எத்தனையோ முறை அழைத்தும் சுதா போகவில்லை இன்றும் அவள் போயிருக்க மாட்டாள் சென்னையில் ஒரு வேலை விஷயமாக சென்றதால் அப்படியே அவளை பார்க்கலாமே என்று செல்கிறாள். கலாவிடம் ஏற்கனவே தான் வருவதாக சொல்லியிருந்தாள். ஒருவழியாக சென்னை வந்து இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து அட்ரஸ் சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தவள் கலா நம்மை எப்படி ரிசிவ் செய்யும் அதே போன்று இருக்குமா? இல்லை வேறு விதமாக இருக்குமா என யோசித்தபடி இருந்தாள் சிறிது தூரம் வந்ததும் இந்த ஏரியா தானே என மெல்ல ஆட்டோவுக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தாள் கொஞ்ச தூரத்தில் கலா நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு ஆட்டோகாரரிடம் அதோ அந்த ஹேட்டுக்கு முன்னாடி நிப்பாட்டுங்க என்றாள். ஆட்டோவும் அங்கே ஓரங்கட்டியது அவர் கேட்ட ஐம்பதை திணித்துவிட்டு ஆட்டோவை விட்டு இறங்கினாள் சுதா.
கலா வாயெல்லாம் பல்லாக "வா..வா.. இப்பதான் உனக்கு வர்றதுக்கு வழி தெரியுதா ஒரு போன் இல்ல ஒன்னும் இல்ல நானா பேசினாதான் உண்டு எம்புள்ளைங்க ரெண்டும் டெய்லி கேட்கும் என்னம்மா ப்ரண்டு ப்ரண்டுன்னு சொல்வே ஒரு போன் கூட பேசுறாங்க இல்லன்னு நான் அவங்களுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பேன் " என்றபடி மூச்சுவாங்க மேலே கூட்டிச்சென்றாள் கலா.. பத்து பதினைஞ்சு குடித்தனம் இருக்கும் அபார்ட்மென்ட் வரிசையாக வீடு அதில் ஒரு வீட்டின் முன் நின்று செப்பலை இங்கேயே கழட்டி போடு வீட்டுல பூஜையறை தனியா இல்ல ஹால்தான் வைச்சுருக்கோம் அதான் நாங்க உள்ள போடுறதுல்ல என்றபடி உள்ளே சென்றாள் கலா. சுதா அவள் பின்னே ஒன்றும் பேசாமல் சென்று கொண்டு வந்த பேக்கையும், வாங்கிட்டு வந்த பழங்களையும் அங்கே வைத்துவிட்டு நிமிர்ந்தவள் வீட்டை கண்களாலே அளந்தாள் சின்னதா ஒரு ஹால், அதையொட்டி ஒரு பெட்ரூம்,அதையொட்டி ஒரு ரூம் அதன் அருகே பாத்ரூம் அதன் அருகிலே சின்னதாய் ஒரு கிச்சன். இதையெல்லாம் பார்த்தபடி நின்றவளின் கையில் இந்த தண்ணிய குடி என்று சொம்பை திணித்தாள் கலா.
"இப்ப எனக்கு வேணாம் முதல்ல நான் குளிக்கனும் "
"சரி.. சரி.. பஸ்ல வந்து களைப்பு இருக்கும் நான் அதை மறந்துட்டேன் நீ போய் குளிச்சிட்டு வா பாத்ரூம்ல தண்ணி இருக்கு புது சோப்பு எடுத்து வைச்சுருக்கேன் அதான் பாத் ரூம் போ.. "என்றபடி கிச்சனுக்குள் புகுந்தாள் கலா.
சுதா உள்ளே சென்று குளித்துவிட்டு உடைய மாற்றிக்கொண்டு பத்து நிமிஷத்தில் தலைய துவட்டியபடி வெளியே வந்தவள். "கலா அதுல பழம் இருக்கு குழந்தைகளுக்கு கொடு காலையிலே கடை ஒன்னும் திறக்கல இந்த பழம் தான் இருந்துச்சு வேற ஒன்னும் வாங்க முடியல" என்றாள்.
. "அடேங்கப்பா ... என்ன இவ்வளவு வாங்கி இருக்கே இங்கே விலை ரொம்ப அதிகமாச்சே ஏன் இவ்வளவு வாங்கினே? என்றவள் உனக்கு காபியா டீ யா ..?"
"நான் இப்ப எதுவும் சாப்பிடுவதில்லை எல்லாம் நிறுத்தியாச்சு
"அட பாவத்தை ஏன்? முன்னாடி நல்லா டீ குடிப்பியே... ஏன் நிறுத்திட்டியா என்ன நமக்கு டீ குடிக்கலன்னா தலைவலி வந்திரும் பழக்கமா போச்சு என்ன பண்றது " என்னவோ பெரிய கிழவி மாதிரி பேசியது. சுதா எதுவும் பேசாமல் சிரித்தபடி இருந்தாள் ஏனோ அவளுக்கு ஒன்றும் பேச தோன்றவில்லை பள்ளியில் படிக்கும் போது அதிகம் பேசுவது சுதாதான் கலாவுக்கு பேசவே தெரியாது. வாயில்லா பூச்சி இப்ப எப்படி பேசுது பாரேன் என நினைத்து வியந்து பார்த்தாள். திருமணம் ஆகிவிட்டல் பேசுவதற்கு ஒரு தைரியம் வந்துவிடுமோ முன்பை விட அதிகமா பேசுகிறதே நம்மால் ஒரு வார்த்தை கூட பேசாம முடியாமல் அமைதியாக இருக்கிறோமே ஏன் வருடங்கள் காட்டிய இடைவெளியா? அதான் நம்மால் பேச முடியவில்லையா? என்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
"எப்ப வருவார் உன் ஆத்துக்காரர்.. "ஏதாவது பேச வேண்டுமே என்று ஆரம்பித்தாள் சுதா.
"அவர் காலையில் மூனு மணிக்கு எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு போனார் அவர் பாவம்பா டெய்லி நின்னு நின்னு கால்வலி வந்திருது அவர் இல்லன்னா அங்கே ஒருவேலை நடக்காது இவர்தான் பொறுப்பா பார்த்துக்குவார் என்ன பண்றது ரெண்டு பிள்ளைகளை படிக்க வைக்கனுமே இங்கே சென்னையில படிக்க வைக்கனும்ன்னா கோடி ரூபா வேணும்." ரொம்ப சலிப்போடு சொன்னாள். கலாவின் கணவர் ஒரு கோவிலில் தலைமை அர்ச்சகர் அரசு உத்தியோகம் தான் நல்ல வருமானம் வருகிறது. சினிமாகாரங்க அடிக்கடி வந்து போவாங்க அப்ப வருமானத்திற்கு குறைவு இருக்காது தானே.
"அப்போ எப்ப வருவார் "
"அவர் பன்னிரண்டு மணிக்கு மேலதான் வருவார் உச்சிகாலை பூஜை முடிஞ்சதும் வந்திடுவார். பிள்ளைங்க சாய்ந்திரம் தான் வரும் வந்ததும் ட்யூசனுக்கு வேற போகனும் அதுக்கு வேற பணம் கட்டணும்."
"ஓ... அவ்வளவு நேரம் ஆகுமா? நான் இப்ப கிளம்பிடுவேன் அப்படியே வேலை முடிச்சுட்டு ஊருக்கு போயிடுவேன் அப்ப நான் அவங்களை பார்க்க முடியாது போல.." சொல்லி முடிப்பதற்குள்.
"என்ன நீ இப்படி சொல்றே நீ எப்ப வருவே எப்ப வருவேண்ணு புள்ளைங்க ரெண்டும் கேட்டுட்டே இருந்துச்சு அவர் ஏற்கனவே உன் மேல கோவமா இருக்கார் பெஸ்ட் பிரண்டு அடிக்கடி சொல்றே ஒருதடவை கூட நம்மாத்துக்கு வரவே இல்லை ஒரு போன் கூட பேசுறது இல்லன்னு அடிக்கடி சொல்வார் நீ இப்ப போறேன்னு சொன்னா அவர் கோவிச்சுக்குவார்"
"இல்ல கலா நீ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்க வேலை முடிஞ்சதும் நான் எங்கே திரும்பி இங்கே வர்றது பஸ்க்கு லேட் ஆகும் இனிமே நான் அடிக்கடி வேலை விஷயமா சென்னை வறதான் போறேன் அப்ப வந்துட்டுப் போறேன் கோச்சுக்காதே"
"சரி சரி இப்ப சாப்பிடுவியா இல்ல அதுவும் உனக்கு வேணாமா?"
கலா சமைத்து இதுவரைக்கும் சாப்பிட்டது இல்ல இப்ப சாப்பிடாமல் போனால் கண்டிப்பா கோபம் வரும் எதுக்கும் ஒரு வாய் சாப்பிட்டு போவோம் "சரி சாப்பிட்டேன் போறேன் இப்ப சந்தோஷம் தானே..?
இரண்டு தட்டு வைத்து அதில் அரிசி உப்புமா எடுத்து வைத்தாள் கலா "ஏய் எனக்கு கொஞ்சமா வை போதும்"
"என்ன எது கொடுத்தாலும் வேணாம் வேணாம்னு சொல்றே என்னத்தான் உனக்கு பிடிக்குமோ தெரியலை... நீ நல்லா வாய்க்கு ருசியா சமைப்பே எனக்கு சரியா சமைக்க வறாது ஏதோ செஞ்சிருக்கேன் சாப்பிடு பிடிக்கலன்னாலும் நீ சாப்பிட்டுதான் ஆகனும் வேற வழி இல்ல"
சுதாவுக்கு உப்புமா என்றாலே சுத்தமா பிடிக்காது இதில் அரிசி உப்புமா கடவுளே இதை நான் எப்படி சாப்பிடுவேணோ தெரியலையே என நினைத்தபடி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு உள்ளே இறக்கினாள்.
நீ இன்னும் மாறவே இல்ல சுதா அப்படியேதான் இருக்கே உனக்கு அது பிடிக்காது இது பிடிக்காதுன்னு வரிசையாக ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் கலா.
"பரவாயில்லையே எல்லாவற்றையும் ஞாபகம் வைச்சிருக்கியே..."
"உன்னைப்பத்திதான் நான் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருப்பேன்.. "
"சரி கலா சாப்பாடு நல்லா இருந்துச்சு எனக்கு லேட் ஆச்சு நான் கிளம்பவா என்றபடி தட்டை எடுத்து போய் சிங்கில் கழுவி விட்டு கை துடைத்தபடி வந்து கடகடவென்று தலைசீவி கிளம்பினாள். பிள்ளைகளைதான் பார்க்காம போறேன் சரி நான் வரட்டா என்றபடி கொண்டு வந்த பேக்கை எடுத்தபடி படியில் இறங்கி நடந்தாள் சுதா. அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று வேலை முடித்து விட்டு இரவு பஸ் பிடித்து பயணிக்கையில் ஜன்னல் காற்று கேசத்தை களைக்க அதை காதோரம் ஒதுக்கியபடி யோசித்தாள் கலாவிடம் எத்தனை மாற்றம் பள்ளியில் படிக்கும் போது வாயே திறக்காது எல்லாவற்றுக்கும் சேர்த்து நான்தானே பேசினேன் அந்த கலாவா இது வாய் மூடாமல் பேசுவது.... ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டாள் இப்படி அடியோடு மாறிட முடியுமா? நான் ஏன் இப்படி வாயடைத்து போனேன் எப்போதும் தொணதொணவென்று பேசிக்கொண்டு இருப்பேனே ஏன் என்னால் பழையபடி பேச முடியவில்லை நிறைய வித்தியசாம் தெரிகிறதே உருவம், நடை உடை பாவனை இருவருக்கும் ஒரே வயதுதான் ஆனால் கலாவிற்கு வயது ஏறிய ஒரு தோற்றம் உடலும் பருத்து ஆளையே மாற்றி இருந்தது. எல்லாம் சரி மாறியது நானா கலாவா? ஆயிரம் கேள்விகள் சுதாவின் மனதை குழப்பினா திருமணம் ஆன பின்னும் எதையும் மறக்காமல் நம்மைப் பற்றி ஒன்றுவிடாமல் சொல்கிறதே எப்படி... அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள் சுதா.
ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து ஜாலியா வீட்டில் இருக்கலாம் என்று எல்லோரும் கனவோடு இருப்பார்கள் ஆனால் சுதா இந்த கோடை லீவில் டைப் ரைட்டிங் கிளாஸ் போகலாம் என்று முடிவு எடுத்தாள் பக்கத்து வீட்டில் இருக்கும் கலாவையும் அழைத்தாள் "ஏ... கலா லீவுல நான் டைப் ரைட்டிங் கிளாஸ் போகலாம்னு இருக்கேன் நீயும் வர்றீயா..?
"டைப் ரைட்டிங் கிளாஸா...? அம்மாகிட்ட கேட்கனும் கேட்டுட்டு சொல்றேன்..." என்றவள் வீட்டுக்குள் சென்று அங்கே இருந்த ரேடியோவை எடுத்து அதன் காதை மெல்ல திருகினாள் கலா...
" இன்னும் டைம் ஆகல இலங்கை ரேடியோ மூனு மணிக்குதானே ஸ்டேசன் திறப்பான்.."
"மணி மூனு ஆச்சு அதை பார்த்துட்டுதானே நான் உங்க வீட்டுக்கு வந்தேன்... சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இலங்கை வானொலி டட்டடன்..டட்டடன்..டட்டடன்... என்று அதன் பிரத்யேக ஒலியோடு அன்றைய நிகழச்சியை தொடங்கியது... அறிவிப்பாளர் தெள்ளதமிழோடு அறிவிப்பு செய்யத்தொடங்கினார் இலங்கை வானொலி சர்வதேச ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் நேரம் மூன்று மணி... நேயர்கள் மூன்று மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கலாம் நிகழ்ச்சியின் முதல் பாடலாக மனதிற்கு இதமான பழைய பாடல்களை நீங்கள் கேட்கலாம். இப்போது நீங்கள் கேட்கப்போகும் பாடல் இரும்பு திரை படத்தில் இருந்து நெஞ்சில் குடியிருக்கும் என்ற மனது மறக்காத பாடல் என்று கூறிய படி பாடலை ஒலிக்கவிட்டார் திருமதி ராஜேஸ்வரி சண்முகம்..
ரேடியோவுக்கும் அந்தப்பக்கம் கலா இந்தப் பக்கம் சுதா.. ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பேக்கை வைத்து விட்டு ட்ரெஸ் கூட மாற்றமால் முதலில் செய்கின்ற வேலை இலங்கை வானொலி கேட்பதுதான் அதன் பிறகு மற்ற வேலைகள் பாடல் கேட்டப்படி நடக்கும். இவர்கள் இருவரும் இணை பிரியாத நல்ல தோழிகள் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள் அந்தளவிற்கு நெருக்கம் இவர்களிடம். கலாவுக்கு சுதா என்றால் உயிர் அவள் வீட்டில் இருப்பதை விட சுதா வீட்டில்தான் அதிகம் இருப்பாள் கலாவின் அம்மாவோ அடிக்கடி சத்தம் போட்டுக்கொண்டே இருப்பாள் "அங்கேயே ஏன்டி போறே... அவா ஆத்துல எந்நேரமும் இருந்தால் பாக்குறவா என்ன நினைப்பா நம்மாத்துல எவ்வளவு வேலை இருக்கு பாட்டி வேற சத்தம் போட்டுன்டே இருக்கா.. நோக்கு காதுல ஏறுதே இல்லை என்னைய புடிச்சு திட்டின்டு இருக்கா.. நீ பாட்டுக்கு அவா ஆத்துல போய் உக்காந்துகிறே.." இப்படி தினமும் கலா கேட்கின்ற பஜனைதான் இது ஆனால் கலா கேட்கவே மாட்டாள். இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவாள் சுதாவும் பல முறை சொல்லியிருக்கிறாள் "கலா நீ இனிமே எங்க வீட்டுக்கு வராதே அதான் உங்கம்மா திட்டுறாங்க இல்ல உங்க வீட்டுலயே இருக்க வேண்டியதுதானே அப்புறம் ஏன் இங்க வர்றே... இந்த ரேடியோ உங்க வீட்டில் இருக்கட்டும் நீ நிகழ்ச்சி கேட்டுட்டு கொடுத்தா போதும் என்று இவளும் பல முறை சொல்லி பார்த்து விட்டாள் இவள் கேட்பதாகவே இல்லை சுதா சொல்லும் போதும் மட்டும் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு பாவமாக பார்ப்பாள்.. உடனே சுதாவின் அம்மாவிடம் கம்ளைண்ட் செய்வாள் "அக்கா... பார்த்தீங்களா... உங்க சுதா என்னை எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்கு நான் உங்க வீட்டுக்கு மட்டும்தானே வர்றேன்... உங்க சுதாவுக்கு என்னை பிடிக்கவே இல்லை.. ஸ்கூல்ல எல்லோருக்கும் ரெக்கார்டு நோட்டுல ட்ராயிங் வரைஞ்சு கொடுத்துச்சு ஆனா எனக்கு மட்டும் வரைஞ்சு தரவே இல்ல ரொம்ப கெஞ்சினதுக்கு பிறகுதான் வரைஞ்சு தந்துச்சு... நான் என்னக்கா பாவம் செய்தேன்.. என அழ ஆரம்பித்துவிடும் அந்தளவுக்கு வெகுளியான பெண்.
சுதாவின் அம்மாவோ "நீ... ஏன் அதை திட்டிகிட்டே இருக்கே எல்லாருக்கும் வரைஞ்சு கொடுத்த நீ இதுக்கும் வரைஞ்சு கொடுத்தா என்னா கொறைஞ்சா போயிடுவே... நல்லா இருக்கும் போதே உனக்கு கிறுக்கு புடிச்சுருமா அது அழுது பாரு நீ அழதடா.. என்று சுதாவை திட்டிவிட்டு கலாவுக்கும் ஆறுதல் சொல்வார்.. சுதாவுக்கு கலா மீது பாசம் உண்டுதான் ஆனால் அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு அதே நேரத்தில் ஸ்கூலில் ஒரு டீச்சர் எப்பவும் கலாவுக்கு அதிகமாகவே மார்க் போடுவார் சுதா என்னதான் விழுந்து விழுந்து எழுதினாலும் கலாவை விட ஒரு ஐந்து மார்க் குறைவாக அந்த டீச்சர் போடுவார் அந்த கடுப்பு சுதாவுக்கு அந்த டீச்சருக்கு தானே ரெக்கார்டு வைக்க வேண்டும் நீ மார்க் எடுக்க நான் வரைந்து கொடுக்கனுமா என்ற கோபம் அதனால் தான் கலாவுக்கு மட்டும் வரைந்து கொடுக்க யோசித்தாள் சுதா.. ஆனால் மனசுக்குள் இரு.. இரு.. பப்ளிக் எக்ஸாம் வரும் இல்ல அதில் உன்னைவிட அதிகம் மார்க் வாங்கி காட்டுறேன் பார் என்று மனதிற்குள் ஒரு கர்வத்தோடு இருந்தாள். தினமும் வீட்டுப்பாடம் பத்து மணிக்கு மேலத்தான் படிக்கத்தொடங்குவாள் சுதா. அதுவரை வரை புத்தகத்தை எடுக்க மாட்டாள் கலா அவங்க வீட்டுக்கு போன பிறகு இரவு ஒரு மணி வரை படித்துவிட்டுத்தான் தூங்குவாள் படிக்கும் போது பக்கத்தில் ரேடியோவில் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும் அப்படி படித்தால்தான் சுதாவுக்கு படித்தது போல் இருக்கும். ஆனால், கலா வீட்டுக்கு போனதும் படுத்து தூங்கிவிட்டு காலையில் மூன்று மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பித்து விடுவாள் இருவருக்கும் படிப்பில் மறைமுகமாக கடும் போட்டி இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் அப்படி என்ன தான் பேசுவார்களோ தெரியாது பேசிக்கொண்டே இருப்பார்கள். கலா கொஞ்சம் அமைதி சுதா தான் எல்லாம் தெரிந்தது போல் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள் கலா அவள் பேசுவதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டே இருப்பாள். சில நேரங்களில் சுதாவுக்கு போராடித்து விட்டால் வம்பிழுக்க ஆரம்பித்து விடுவாள்.
"ஏய்.. என்ன நானே பேசிட்டு இருக்கேன் நீ பேச மாட்டியா..? எனக்கு பேசி.. பேசி வாய் வலிக்குது எங்கே நீ ஏதாவது சொல்லு நான் கேட்கிறேன்.." என்றபடி அமைதியாகிவிடுவாள் சுதா.
கலாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் "என்னைய என்ன சொல்ல சொல்றே...?" என்பாள் பாவமாக
"ஏதாவது பேசு... நான் என்ன எல்லாம் தெரிஞ்சுகிட்டா பேசுறேன் நானும் உன்ன மாதிரிதானே உன் கூடதானே படிக்கிறேன் நீ எப்பவும் என் கூடதான் இருக்கிறே அப்ப ஏதாவது பேசு.." என்றபடி கையில் ஏதாவது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவாள். கலா அமைதியாக இவளையே பார்த்துக்கொண்டே இருப்பாள் சுதா பேசுவாள் .. பேசுவாள்னு காத்திருந்துவிட்டு "நீ என் கூட பேசமாட்டியா ன்னு"பாவமாக மூஞ்சை வைத்துக்கொண்டு கேட்பாள் கலா.
"என்ன பேச சொல்றே.."வெடுக்கென்று கேட்டாள்.
"ஏதாவது பேசு.."
"அதையேதான் நானும் சொல்றேன் நீ ஏதாவது பேசு டெய்லி நான்தான் டொட.. டொடன்னு பேசிட்டு இருக்கேன் இன்னைக்கு ஒரு நாள் நீ பேசு நான் கேட்கிறேன். "
"எனக்கு என்னத் தெரியும் உனக்குத்தானே எல்லாம் தெரியும்.."
"ஆமா இதையே சொல்லு மக்கு.. மக்கு.. உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல போ உங்க வீட்டுக்கு நான்தான் எரிஞ்சு விழுறேன்னு எங்கம்மாகிட்ட வத்தி வைக்கிற இல்ல அப்புறம் ஏன் எங்க வீட்டுக்கு வர்றே இனிமே நான் உன்கூட பேசமாட்டேன் என்னைய பேசு.. பேசுன்னு சொன்னே எனக்கு கெட்ட கோபம் வரும் பார்த்துக்கோ... " காரணமே இல்லாம் இப்படிதான் அடிக்கடி சண்டை வரும் அப்புறம் எதுவுமே நடக்காதது போல் பேசி ராசியாகிவிடுகள். கலாவின் வீட்டில் ரேடியோ இல்லை அதையே காரணமா வச்சு சுதாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள். அதோடு சுதாவின் வேடிக்கையான பேச்சு ரசனையோடு கதை சொல்லும் விதம் கலாவிற்கு ரொம்ப பிடித்து போனது. தினமும் பள்ளியில் நடக்கின்ற விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்வாள் சுதா அதை எல்லோருமே ரசித்து கேட்பார்கள் சில நேரங்களில் வயிறு வலிக்க சிரித்து வைப்பார்கள் இதெல்லாம் சுதாவை பிடிப்பற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே நேரத்தில் கலாவின் குடும்பம் கொஞ்சம் வறுமையில் இருந்தது சாப்பாட்டிற்கே கஷ்டமான சூழ்நிலை ஒரு சின்ன ஹோட்டல் வைத்திருந்தார்கள் அதில் ஒரு கிலோ அரிசில் சாதம் வடிச்சு புளிசாதமும் தயிர் சாதமும் செய்து விற்பார்கள் கலாவின் அப்பா சமையல் வேலைக்கு சென்று வருகின்ற வருமானத்தில் வீட்டு செலவுக்கு வைத்துவிடுவார். அதிலே வாடகை பிள்ளைகள் படிப்ப மற்ற இதர செலவுகள் எல்லாமே அதில் அடங்கி இருக்கு. கலாவின் பாட்டி ஒரு பக்கம் வடகம் வத்தல் போட்டு வியாபாரம் செய்யும் கலாவிற்கு இரண்டு தம்பிகள் உண்டு . ஒரு நாளைக்கு ஆறு பேரு சாப்பிட வேண்டும் ஆனால் அந்தளவிற்கு அவர்கள் ஒரு நாளும் வயிறார சாப்பிட்டது இல்லை. எல்லோரும் சாதம் வடிச்ச கஞ்சிய கழனிபானையில் ஊற்றுவார்கள் ஆனால் சாதம் வடிச்ச கஞ்சியை இவர்கள் கீழே ஊற்றுவதே இல்லை அதை உப்பு போட்டு குடித்து பசியை அடக்குவார்கள். இந்த சூழ்நிலையில் கலா ஒருநாள் சுதா வீட்டிற்கு வர டீயும் பச்சியும் இவளுக்கு கட்டாயப்படுத்தி கொடுக்க அந்த பாசமும் கலாவிற்கு பிடித்து போனது பிறகு சாப்பாடு வரை வந்தது கலா பிராமின் என்பதால் சூத்ரவா வீட்டில் சாப்பிடக்கூடது என்பது அவர்கள் வழக்கம் ஆனால் பசி அதை அறியுமா நான்வெஜ் சாப்பிடுற அளவுக்கு கூட வந்துவிட்டாள் கலா. இப்படிதான் இவர்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்தது.
எப்போதும் காலையில் சுதா எழும்போதும் கலா அங்கே இருப்பாள்.. "நீயா எப்ப வந்தே" என்றபடி எழுந்தாள் "நீ காலையிலையே வந்துட்டியா உங்கம்மா உன்னை திட்டப்போறாங்க வீட்டுல எல்லா வேலையும் பார்த்துட்டியா..? எனக் கேட்டப்படி முகத்தை கழுவ சென்றாள் சுதா.
"நான் மூனு மணிக்கு எழுந்து படிச்சுட்டு வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வந்துட்டேன் அதுனால எங்கம்மா இப்ப கூப்பிடாது" என்றாள் அப்பாவியாக.
"நான் எத்தனை தடவை உனக்கு சொல்லி இருக்கேன் இங்க வராதேன்னு உங்கம்மா மறுபடியும் திட்டட்டும் அப்ப இருக்கு உனக்கு"
கலாவுக்கு என் சொல்வதென்றே தெரியவில்லை நைட்டுதான் கோபமா பேசுனிச்சு அதை மறந்து இருக்கும்னு நினைச்சா இப்பவும் அதே மாதிரி பேசுதேன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. கலாவிற்கு திக்கா அவர்கள் வீட்டில் காப்பி குடிச்சாலும் சுதா வீட்டில் வந்து ஒரு டம்ளர் டீ குடிச்சா தான் திருப்தியா இருக்கும்.
சுதா ப்ரஷ் பண்ணிட்டு வந்து உட்கார்ந்தாள். சுதாவின் அம்மா டீ எடுத்துக்கொண்டு வந்து வைத்தாள் அப்படியே கலாவிற்கும் ஒரு டம்ளர் கொடுத்தாள்.
கலா டீ யை வாங்கியபடி "நான் வேற டெய்லி நந்தி மாதிரி வந்து உட்கார்ந்துகிறேன் இல்லக்கா"என்றாள் சிரித்தப்படி.
"என்ன கலா நீ எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்றே உன்னைய நான் அப்படியா நினைச்சு இருக்கேன் எனக்கு நீ இரண்டாவது பொண்ணுமாதிரி தான் இனிமே அப்படி சொன்னே எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்" என்றார் சுதாவின் அம்மா.
"இல்லக்கா.. நான் வேற டெய்லி வர்றேன் அதான் உங்க பொண்ணுக்கு பிடிக்கல போல என்னை கண்டாலே முகத்தை சுழிக்குது அதான் சொன்னேன்"
"அதுக்கெடக்குது நீ கண்டுகாத உன் கிட்ட எரிஞ்சு விழும் நீ போனதும் கலா பாவம்னு சொல்லி சொல்லி என்னை பாடாபடுத்திரும் அதைபத்தி உனக்குத் தெரியாதா?"
"எனக்குத் தெரியும்க்கா.. அது என்ன சொல்லுதுன்னு பார்க்கதான் அப்படி சொன்னேன்"
"ஏய்.. சரி சரி நான் இன்னைக்கு டைப் ரைட்டிங் கிளாஸ் போறேன் வர்றியா" கேட்டாள் சுதா.
"இன்னைக்கா..? அம்மாகிட்ட கேட்டுட்டு வர்றேன் " என்றபடி ஓடினாள் கலா.
சுதா காப்பியை குடித்துவிட்டு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தாள். அம்மாவோடு கலாம்மா ஏதோ பேசிக்கொண்டு இருப்பது காதில் கேட்டது. "இதோ அதுகிட்டேயே கேளுங்க எனக்கு ஒன்னும் தெரியாது" என்றபடி கிச்சனுக்கு சென்றாள் சுதாவின் அம்மா.
"என்னடி சுதா நீ ஏதோ டைப் ரைட்டிங் கிளாஸ் போறியாம் இவ வந்து சொல்லிட்டு அழுவுறா நீ போறதுன்னா போ.. அவளையும் சேர்த்து கெடுக்காத அவங்க அப்பாகிட்ட சொன்னா சத்தம் போடுவார். அவளை பன்னிரெண்டாவது வரை படிக்க வைச்சதே பெரும் பாடு உனக்கே தெரியும் நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கிறது நீ போறேன்னு சொல்லிட்டு அவளும் போறேன்னு அடம் பிடிக்கிறா? "
"இல்ல கலாம்மா உங்களுக்கு இஷ்டம் இருந்தா அனுப்புங்க இல்லன்னா வேண்டாம் இதெல்லாம் கத்துகிட்டா ஏதாவது ஒரு கம்பெனில நல்ல வேலையா பார்க்கலாம் அதுகாகதான் நான் போறேன்." என்றாள் சுதா
"மாசம் எவ்வளவு பணம் கட்டனும் ரொம்பவா? "
"ரொம்ப அதிகமில்ல மாசம் ஐம்பது ரூபாதான் அப்புறம் எக்ஸ்சாம் பீஸ் கொஞ்சம் கட்டனும் ஆறுமாசம் கத்துகிட்டா போதும்"
"சரி நீ போறதுன்னா போ.. அவங்க அப்பாகிட்ட கேட்காம நாம ஒன்னும் செய்ய முடியாது அவர் பாவம் அடுப்புல தினமும் வெந்து சாகுறாரு இவளுக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது நீ அவளுக்கு எடுத்து புரிய வை நமக்கு வீரலுக்கு தகுந்த மாதிரிதான் வீங்க முடியும் என்ன நீ சொன்னா கேட்பா சொல்லு.. நான் உன்கிட்ட பேசினதா காட்டிக்காத " என்றபடி புலம்பி விட்டு சென்றாள் கலாவின் அம்மா.
சுதா படபடவென்று ரெடியாகி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தாள்.. எதிரே கலா மூஞ்சியை தொங்கப்போட்டுக்கொண்டு எதிரே வந்தாள். "என்ன கலா உம்முனு இருக்கே சரி நான் போயிட்டு வர்றேன் ஈவ்னிங் வந்து பேசுவோம்" என்றபடி நகர்ந்தாள் சுதா. கலாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது. சுதாவின் மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது இருந்தாலும் நாம என்ன செய்ய முடியும் கலா அம்மாவிடம் பேசுவோம் என நினைத்தபடி வந்தாள். பஸ் நிறுத்தம் வந்து சிறிது நேர காத்திருப்பிற்கு பின் ஒன்பதாம் நம்பர் பஸ் ஏறினாள் நல்ல கூட்டம் இருந்தது கால் வைக்க கூட இடமில்லை அந்த பஸ்க்கு என்ற காந்திருந்து ஏறும் பெண்கள் அதிகம் எல்லா நாளும் அந்த பஸ் கூட்டம் அதிகமாதான் இருக்கும் அந்த பஸ் ஓட்டுகிற டிரைவருக்காகதான் அத்தனை கூட்டம் இளம் பெண்கள் முதல் வயது போன ஆன்டிகள் வரை அடித்து பிடித்து ஏறுவார்கள். பஸ்ல போடுகிற பாட்டும் எல்லா பெண்களையும் கவரும் அந்த டிரைவரும் ஒரே பாட்டை திரும்ப போட்டு விடுவார் அந்த பஸ்சில் வர்ற எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் அது. அந்த டிரைவர் பஸ் கண்ணாடியில் பின்னால் நிற்கிற பெண்களை சைட்டு அடிப்பது வழக்கம் சில பெண்களிடம் வம்பு பேசி பல தடவை இதே ஏரியாவில் நிறைய அடி வாங்கியதும் உண்டு இருந்தாலும் அந்த டிரைவருக்கு இது பழகிப்போன ஒரு விஷமாகிவிட்டது. சுதா ஒரு வழியாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் இறங்கி முருகன் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு வந்து சேர்ந்தாள். அங்கே ஒரு பெண் மிக அழகாக உட்கார்ந்து இருந்தாள் அவர் தான் அந்த இன்ஸ்டிடியூட் ஓனர் சுபலக்ஷ்மி பெயருக்கு ஏற்றார் போல் பார்ப்பதற்கு சினிமா நடிகை சுபலக்ஷ்மி போலவே இருந்தார். சுதாவுக்கு முதல் பார்வையிலையே பிடித்துப்போனது ஒரு வழியாக அட்மிஷசன் போட்டு டைப்ரைட்டிங்க மிஷினில் உட்கார்ந்து டீச்சர் சொல்லிக்கொடுக்க ஒவ்வொரு லெட்டராக தட்டத்தொடங்கினாள். சுதாவுக்கு இது புது அனுபவம் முதல் நாளே நன்றாக அடிப்பாதாக பாராட்டு வாங்கினாள் அதே சந்தோஷத்தில் வீடுவந்து சேர்ந்தாள் சுதா.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக ட்ரெஸ் மாற்றிவிட்டு முகம் கை கால் கழுவிட்டு வந்தாள். அப்போது காலா ரொம்ப சந்தோஷத்தோடு வேகமாக வருவதை ஜன்னல் வழியாக பார்த்தாள் சுதா..
"என்ன கலா சாப்பிட்டியா.."
"இன்னும் இல்ல நீ வந்ததும் சாப்பிடலாம்னு இருக்கேன்.."
"ஏன் என்னை விட்டுட்டு நீ சாப்பிடமாட்டியா சும்மா இந்த சினிமா டயலாக்கெல்லாம் விடாதே.. "
"சரி.. சரி.. வந்ததும் ஏன் சுள்ளுன்னு பேசுறே கோபப்படாதே நான் என்ன சொன்னாலும் எரிஞ்சு விழுற .. அப்புறம் எங்கப்பாகிட்ட நான் கேட்டுட்டேன் என்னையும் டைப்ரைட்டிங் கிளாஸ்க்கு போகச்சொல்லிட்டார் நாளைக்கு நானும் வருவேன்..." என்றாள் சந்தோஷத்தோடு.
"உங்கம்மா என்ன சொன்னாங்க..?"
"அம்மாவும் போகச்சொல்லிட்டு "
"சரி நான் சாப்பிடப்போறேன் எனக்கு பசிக்குது நீ சாப்பிடுறியா...?
கலா ம்.. சொல்லவும் இல்ல ம்கூம்.. சொல்லவும் அமைதியா இருந்தாள் ஆனால் சாப்பிடவும் ஆசை.
"என்ன சாப்பிடுறீயா இல்லையா..?"
"சரி இங்கே சாப்பிட்டுட்டு அங்க போய் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன்.."
"அங்கே போய் சாப்பிடு அப்புறம் சாப்பிடலன்னா உங்கம்மா சொல்வாங்க எம்புள்ள சாப்பிடவே மாட்டேங்கிறா.. என்னவோ தெரியல சாப்பிடவே மாட்டேங்குறான்னு வர்றவங்க போறவங்க எல்லார்கிட்டயும் சொல்வாங்க ஆனால் நீ இங்க சாப்பிடுறது அவங்களுக்கு தெரியல" சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தாள்.
"நான் சாப்பிடுவேன் கொடு" என்றபடி சாப்பிடத்தொடங்கினாள் கலா. அப்புறம் சொல்லு இன்னைக்கு என்ன சொல்லி தந்தாங்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சா..?
"இல்ல பர்ஸ்ட் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் கடகடன்னு அடிச்சுட்டேன் அங்கே ரம்யான்னு ஒரு அக்கா இருக்காங்க அவங்க செம அழகு தெரியுமா? நடிகை சுபலக்ஷ்மி மாதிரி இருந்தாங்க எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சுருக்கு."
"ம்...அப்படியா...? நாளைக்கு அவங்கள பார்த்து நீ இப்படி சொன்னேன்னு நான் சொல்றேன்"
"நீ.. சொல்வியா எங்கே சொல் பார்ப்போம் என்கிட்ட மட்டும்தான் நீ பேசுவே மத்தவங்கிட்ட வாய் திறக்கவே மாட்டே நீ சொல்லப் போறீயாக்கும் ஹையோ.. ஹையோ... "
ம்.. நான் சொல்வேன் அப்புறம் அதுக்கும் சேர்த்து என்னை திட்டுவே எனக்குத் தேவையா சொல்லு"
"தெரியுதுல்ல அப்ப வாய மூடிக்கிட்டு சாப்பிடு"
கலா வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு எங்கம்மா வந்தாலும் வரும் நான் போறேன் என்றபடி தட்டில் கையை கழுவி விட்டு அவசரமாக ஓடினாள். சுதா பொறுமையாக சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு அங்கிருந்த வானொலி பெட்டியை அருகில் இழுத்தாள் இன்னை என்ன கிழமை வெள்ளிக்கிழமை தானே இன்னை யார் அறிவிப்பாளர் நம்மாளு இன்னைக்கு வருவாங்க இல்ல ஆசையோடு வானொலி பெட்டியை திருகினாள். அவள் நினைத்தது போலவே அவள் மனதிற்கு பிடித்த அறிவிப்பாளர்தான் வானொலிக்கு அருகே உட்கார்ந்து கொண்டாள் திடீரென்று சத்தம் கொரகொரவென்றது ரேடியோ இந்த ரேடியோ எப்போதுமே இப்படிதான் இவங்க வர்றப்ப மட்டும் இப்படிதான் வருது மத்தவங்க வர்றப்ப ரொம்ப தெளிவா இருக்கு.. சொல்லிக்கொண்டே ரேடியோவின் தலையில் அப்படியும் இப்படியும் ரெண்டு தட்டு தட்டினாள் தட்டிய பிறகு கொஞ்சம் சத்தம் குறைந்தது. அப்போது இலங்கை வானொலியில் கேட்கும் போது சுதாவுக்கு தனி ஈர்ப்பு வந்தது. நிகழ்ச்சியை தவறாமல் கேட்டுவந்தாள் காலை எழுந்ததும் ரேடியோதான்.. அதில் வரும் விளம்பரம் தொடங்கி யார் யார் எப்ப வருவார்கள், எத்தனை நேயர்கள் பெயர்களை வாசிக்கிறார்கள் என்று எல்லாம் அத்துப்படி. அதுமட்டுமல்ல சில நேரங்களில் ரேடியோ வைக்கும் போது அறிவிப்பாளர் யார் வந்திருக்கிறார் என்று தெரியாது அப்போது ஒலிக்கும் பாடலை வைத்தே இன்று இந்த அறிவிப்பாளர் வந்திருக்கிறார் என்று சொல்லிவிடுவாள் அந்தளவுக்கு இலங்கை வானொலி மீது அப்படி ஒரு பைத்தியமாக இருந்தாள் நிகழ்ச்சியை கேட்டு கேட்டு சுதாவுக்கும் எழுத வேண்டும் என்று ஆசை எழுந்தது எப்படி எழுதுவது எப்படி தொடங்குவது என்று ஒன்றும் புரியவில்லை. சில நேரம் எழுதிவிட்டு கிழித்துவிடுவாள் சிலவற்றை டைரியில் கவிதையாக எழுத தொடங்கினாள். அதை படித்து பார்க்கும் போது நன்றாக இருக்கிறது என்ற திருப்தி ஏற்பட்டது. சுதா ஒரு பேப்பர் பேனாவையும் எடுத்துக்கொண்டு என்ன எழுதுறது என்று யோசித்தாள் அந்த அறிவிப்பாளருக்கு ஒரு லெட்டர் எழுதினால் என்ன? ஏதாவது நினைப்பாங்களோ... ச்சீச்சீ.. எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள... இல்ல வேண்டாம் அன்புள்ள அக்கா... இல்ல வேண்டாம் அவங்க ஏதாவது நினைத்துக்கொண்டால் நம்மை கிண்டால் செய்தால் ஐயோ.... அசிங்கமா போயிடுமே.. என்றபடி ஒன்றும் எழுதாமல் தூக்கி ஓரமாக வைத்தாள்.
அப்போது இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலித்தது "எல்லோர்க்கும் சொல்லும் பாட்டு சொன்னேனே உன்னைப் பார்த்து..." என்ன இன்னைக்கு மேடம் ரொம்ப சோகத்துல இருக்காங்க என்ற நினைத்தபடி வீட்டு வேலைகளை பார்க்கத்தொடங்கினாள் சுதா.
மறுநாள் காலை வழக்கம் போல் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டும் டைப் ரைட்டிங்கிளாஸ்க்கு கிளம்பி கொண்டிருந்தாள் சுதா.. கலா ரெடியாகி வந்து கொண்டிருந்தாள். "ஏய் கலா நீ இந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்தியா நானும் அதே ட்ரெஸ்தான் நீ வேற போட்டு இருக்கலாம் இல்ல ரெண்டு ஒரே மாதிரி போட்டுட்டு போனா அங்கே யாராவது கேட்பாங்க இல்ல.."
"கேட்டா சொல்லிட்டு போறோம் நாம ரெண்டு பேரும் ரொ...ம்...ப...... க்ளோஸ் ப்ரண்ஸ் னு" என்றாள் கலா.
அந்த ட்ரெஸ் எடுத்தது பெரிய கதை கலாவுக்கு எப்பவும் அவங்க வீட்டுல துணி எடுப்பது கிடையாது அவங்க பெரியம்மா பொண்ணு, மாமா பொண்ணுங்க போடுற துணிதான் கலாவுக்கு எப்பவும் புது துணி.. சுதா தீபாவளிக்கு துணி எடுக்கும் போது ரொம்ப கட்டாயத்தின் பேரில் இந்த துணி எடுத்தார்கள் இந்த துணிதான் கலாவுக்கு முதல் முறையா எடுத்தது அதில் கலாவுக்கு ரொம்ப சந்தோஷம். சுதா ரொம்ப பேசி அவங்க அம்மாவை வாங்க வைச்சது. கலாவுக்கு ஸ்கைப்புளூ நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட பாவாடை, ப்ளூ கலர் தாவணி சுதாவுக்கு அதே பாவாடை வெள்ளை நிற தாவணி. இப்போது இருவரும் ஒரே ட்ரெஸ் போட்டுக்கொண்டு கிளம்பினார்கள்.
"கலா சீக்கிரம் வா பஸ் வந்திட போகுது இன்னைக்கு செம்ம கூட்டம் இருக்கும் போல.."
ஆமா..ஆமா.. என்று சொல்லும் போதே ஒன்பதாம் நம்பர் பஸ் இவர்களை உரசியப்படி க்ரீச்சிட்டு வண்டி நின்றது. கலாவும் சுதாவும் ஓடிவந்து ஏறினார்கள் வழக்கம் போல் அதே கூட்டம் அதே பாட்டு அதே ட்ரைவர் மதியம்தான் வேற ட்ரைவர் வண்டி மாத்துவார். ஒருவழியா கால்மணி நேரத்தில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் பஸ் நின்றது. கலாவும் சுதாவும் கூட்டத்தை விளக்கியபடி முண்டியடித்து ஒருவழியாக வெளியே வந்தனர். கொஞ்ச தூரத்தில் முருகன் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட் போர்டு பளப்பளத்தது.
இருவரும் செருப்பை வெளியே கழட்டிவிட்டு உள்ளே சென்றனர். சுதா சுபலகஷ்மி அக்காவிடம் கலாவை அறிமுகம் செய்து வைத்தாள் சுதா. சுபா அக்கா கேட்டார் ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸா ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு இருக்குறீங்க என்று சிரித்தார்.
சுதா ஆமாம் என்று லேசாக வெட்கப்பட்டு சிரித்தாள்.
சரி..சரி.. போய் உட்காருங்க ரெண்டு பேருக்கும் ஒரே டைம் தானே என கேட்க தலையாட்டியபடி போய் உட்கார்ந்தார்கள் இருவரும். சுதா முதல் நாள் கொடுத்ததையே டைப் செய்தாள். கலாவுக்கு அனிதா டீச்சர் எப்படி பேப்பர் வைக்க வேண்டும் எப்படி அடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். கலா கொஞ்சம் பயந்த சுபாவம் ஆதலால் தட்டு தடுமாறி அடித்துக்கொண்டிருந்தாள். கலாவுக்கு டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விட சுதாகூட எப்பவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை... அதனால் தான் சுதாவுடன் டைப் ரைட்டிங் கிளாஸ்க்கு அவள் வந்தாள் எப்பவும் எங்கேயும் அவளோடு ஒட்டியே இருக்க வேண்டும் இதுதான் அவளின் ஆசை அந்த ஆசை எத்தனை நாள் நீடிக்கும் அது சில காலம் தான் என்று பாவம் அவளுக்கே தெரியாது.
நாட்கள் வேவகமாக ஓடியது வார இறுதி நாட்களில் க்ளாஸ் முடிந்தது. பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு ஸ்வீட் கடையும் அதன் பக்கத்திலே புத்தகக் கடையும் இருக்கும். அந்த ஸ்வீட் கடையில் பீட்ரூட் அல்வா சுட சுட சூப்பரா இருக்கும் காரத்தில் மிக்ஸ்சரும் , காரா சேவும் நல்லா இருக்கும் வார இறுதியில் லீவு என்பதால் கொஞ்சம் தின்பண்டங்களை வாங்குவது பழக்கமாகிவிட்டது. பஸ்க்கு கொடுக்கும் மிச்ச பணத்தில் கலா அந்த ஸ்வீட் கடையில் ஏதாவது வாங்குவாள். சுதா அருகில் இருக்கும் புத்தகடையில் நின்று அந்த வாரத்தில் வந்த அத்தனை நாவல்களையும் வாங்கிவிடுவாள். ராஜேஸ்குமார் நாவல்தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அடுத்து வித்யா சுப்பிரமணியம் பெண்களின் தன்னம்பிக்கை எழுத்தாளர். ரமணிச்சந்திரன், அனுதா ரமணன் இவர்கள் எல்லாம் குடும்ப எழுத்தாளர்கள் சுதாவுக்கு அதில் கொஞ்சம் விருப்பமில்லை அவர்களின் நாவல் கொஞ்சம் தான் படிப்பாள். ஆர். சுமதியும், ஆர். மணிமாலாவும் நட்புக்களை மேம்படுத்தி எழுதி படிக்கும் போதே கண்களில் கண்ணீர் வரவழைக்கும் எழுத்தாளர்கள் எத்தனையோ முறை படித்துவிட்டு சுதா அழுதிருக்கிறாள். அந்தளவிற்கு சுதா புக் பைத்தியம் இருவரும் வீட்டிற்கு வந்ததும். முதலில் கைகல் கழுவி விட்டு வந்து அமர்ந்து வீட்டில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிடுவார்கள் புத்தகம் ஒரு பக்கம் விரித்து இருக்கும் அதை படித்துக்கொண்டே சாப்பிடுவது சுதாவுக்கு பழக்கமாகிவிட்டது. இடையிடையே படித்துக்கொண்டு சமைத்து சாப்பிடுவாள் சுதாவுக்கு சின்ன வயதிலே சமைக்கும் பழக்கம் இருந்தது அம்மா வேலைக்கு சென்றுவிட்டால் இவள்தான் வீட்டில் எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் அது ஒன்றும் பெரிய விஷயமாக இவளுக்கு தெரியவில்லை பத்து வயதில் தோசை சுடவும் தானாக தலைவாரிக்கொள்ளவும் கற்றுக்கொண்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இவள் முதலில் வைத்த குழம்பு கருவாட்டு குழம்புதான் முதன் முதலாக வைத்ததாலே என்னவோ குழம்பு நல்ல ருசியாக இருந்தது. அம்மாவுக்கும் அண்ணனுக்கு ரொம்ப பிடித்து போனது. பிறகென்ன அநேக நேரங்களில் இவளே சமைக்கத் தொடங்கிவிட்டாள். ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பஸ் ஏறி பக்கத்து ஊரான மதுக்கூரில் சென்று மளிகைகடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மிளகா மல்லியை மில்லில் அரைத்து கொண்டு சினிமா தியேட்டரில் அப்படியே படமும் பார்த்துவிட்டு வந்திடுவாள். சிறுவயதில் இருந்தே எல்லாவற்றையும் ஈசியாக கற்றுக்கொள்வாள் ஆனால் இவளை பார்ப்பவர்கள் அப்படி நம்ப மாட்டார்கள் ஏனெனில் உயரம் சிறியது இவளா இந்த வேலை பார்ப்பாள் என்று சட்டென்று யாருக்கும் நம்பிக்கை வராது. அப்பவே அப்படி என்றால் இப்ப சொல்லவா வேண்டும் தனியே சென்று எல்லாம் வாங்கிவிடுவாள் அப்படிதான் இப்பவும் ஆனால் கலாவுக்கு இதெல்லாம் புதுசு இவளை எங்கேயேயும் தனியாக அனுப்பவதில்லை வீட்டிலே இருக்கும் துணையில்லாமல் வெளியே செல்லும் தைரியம் இல்லை அப்படியே வளர்க்கப்பட்டாள். சுதா தைரியமாக வெளியே போய் வருவது சுயமாக முடிவெடுப்பது அவளின் பேச்சுக்கு அவள் அம்மா மதிப்பு கொடுப்பது எல்லாமே கலாவுக்கு பிடித்து போனது அதனால்தான் இவளோடு இருப்பதற்கும் பிடிப்பதற்கும் மற்றுமொரு காரணமாக இருக்குமோ என்னவோ. ஆனால் சுதாவுக்கு அப்படி ஒன்றும் கலா மீது அதிக பாசமென்று சொல்ல முடியாது ஏதோ கூடவே வருகிறாள், தினமும் வீட்டில் வந்து பேசுகிறாள் பேச்சு துணைக்கு எப்போதும் ஒரு ஆள் இருக்கிறது அந்தளவில் மட்டுமே அவளின் எண்ணம் இருந்தது. ஒருவேளை கூடவே ஒட்டிக்கொண்டு இருப்பதால் அதன் அருமை தெரியாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த பிரிவின் அருமை வெகு விரைவில் வரப்போகிறது என்று சுதாவின் மனதிற்கு தெரியவில்லை...
- தொடரும்
No comments:
Post a Comment