Monday 17 July 2017

கனவே கலையாதே

            மாலை 5 மணி ரிங்....ரிங்... ரிங்... போன் அடித்துக்கொண்டே இருந்தது அம்மாவிடம் இருந்து போன்.  போனை எடுத்து காதில் வைத்து "என்னம்மா.." என்றேன்.

               மறுமுனையில் அம்மா "ம்மா.. நம்ம குட்டிமணிக்கு வெறிபுடிச்சிடுச்சும்மா.." என்று ஒரே அழுகை.

             "என்னம்மா சொல்றே.. அப்படி எதும் இருக்காது நீ ஏதாவது உளராதே.."



          "இல்லம்மா.. அவன் சாப்பிட்டு மூனு நாளாச்சு இரண்டு நாளைக்கு முன்னாடிதான் மீன் குழம்பு வைச்சு கொடுத்தேன் திருப்தியா சாப்பிட்டான்.. அதான் அவன் கடைசியா சாப்பிட்டது அதிலிருந்து அவன் சாப்பிடவே இல்ல, பால் நல்லா குடிப்பான் அதுவும் அவன் குடிக்கல ரஸ்க்ன்னா நல்லா சாப்பிடுவான் இப்ப அதை திரும்பி கூட பார்க்கிறான் இல்ல".

            "நாக்கை தொங்குதா... வாலு தொங்குதா... வெறிபிடிச்சுருந்தா.. உன்னையே அவனுக்கு அடையாளம் தெரியாது வீட்டுல இருக்க மாட்டான் ஓடிருவான் அதான் உன்னை வந்து பார்க்குறான்னு சொல்றியே அப்புறம் என்ன அவன் நல்லாதான் இருக்கான் நீ சும்மா பயம் காட்டாதே... அப்படி சந்தேகமாக இருந்தால் அவன்கிட்ட போகாதே.. எச்சிலை மிதிக்காதே.. மேல வந்து தாடிபோடுவான் ச்சீச்சீன்னு விரட்டாதே அவனுக்கு கோவம் ரொம்ப வரும்.. பார்த்து இருந்துக்கோ வீட்டைவிட்டு வெளியே வரும்போது கவனமா வா.. என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

             மனசு திக்திக்.. என்றது குட்டிமணிக்கு வெறிபிடித்துவிட்டதா.. என்ன சொல்லுது என் குட்டிமணிக்கு ஒன்னும் ஆகாது மனசை தேற்ற முயன்றேன் முடியவில்லை. சென்னையில் வெள்ளம் வந்த போது சின்ன குட்டியா என் வீட்டுக்கு வந்தான். நான் சென்னையில் இருந்து வீடு திரும்பிய போது என் கால்களை எங்கிருந்தோ ஓடிவந்து நக்கினான்.. அந்த உணர்வு இப்போதும் என் கால்களை கூச செய்கிறது. "ஏதும்மா... இது சூப்பரா இருக்கு வாவ் அழகா இருக்கே என்று தூக்கி வைத்து கொஞ்சினேன் அவனும் என்னோடு ஒட்டிக்கொண்டு விளையாட ஆரம்பித்தான். கூகுளில் தேடி ராக்கி என்று பெயர் வைத்தேன் அவன் குட்டியா அழகா இருந்ததால் செல்லமா குட்டிமணி என்று அழைத்தேன் அம்மாவும் குட்டிமணி என்றே அழைத்தார். அதன்பிறகு நாளொருவண்ணமா அது வளர்ந்தது பெரும் வளர்ச்சி ஒன்றும் இல்லை க்ராஸ் நாய் வகை என்பதால் குட்டையாக இருந்தது அதே சின்ன முகம் பார்க்க அழகாகவே இருந்தது எல்லோருக்கும் ரொம்பவே பிடித்து போனது. நான் வீட்டில் இல்லாத நேரங்களில் அம்மாவுக்கு அவன்தான் துணை எந்நேரமும் அவனோடுதான் அம்மாவின் பொழுதுகள் கழிந்தது.

மறுநாள்..

            ரிங்க்... ரிங்க்... ரிங்க்... யாரு இந்த நேரத்தில் மனசு படபடக்க போனை எடுத்து பார்த்தேன் .. அட.. அம்மா.. என்னாச்சு.. மனசு இன்னும் அதி வேகமாக படபடத்தது. அதே படபடப்போடு போனை காதில் வைத்தேன் " ஹலோ... என்னம்மா... " என்றேன்.

              மறுபக்கத்தில் அழுகையோடு "ம்மா... காலையில எழுந்து கதவை திறந்தேன் குட்டிமணி ஓடிவந்து மேல ஏறிட்டான் புடிச்சு தள்ளிவிட்டேன் லேசா பல்லு பட்டுறுச்சு..." சொல்லி முடிப்பதற்குள்..

          "பல்லு பட்டுருச்சு இல்ல நான் படிச்சு.. படிச்சு.. சொன்னேன் இல்ல கேட்டியா.. கவனமா இரு கவனமா இருன்னு எத்தனை தடவை சொன்னேன்.. சரி பயப்படதே.. ஒன்னும் இல்ல முதல்ல கைய சோப்பு போட்டு நல்லா கழுவு, விடிஞ்சதும் டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுக்க இனிமேலாவது கவனமா இரு" என்றேன் கோபமாக.

            "நீ.. இப்படிதான் என்னையே திட்டு அவன் எங்கிருந்து வந்தான்னே தெரியல வாலை ஆட்டிக்கிட்டு தாவி வர்றான்.. நான் என்ன பண்றது.. அவன் வாயெல்லாம் ரத்தம் பக்கதுல இருக்குற ஒரு நாயையும் அவன் விட்டு வைக்கல கோழி, ஆடு எல்லாத்தையும் கடிச்சு வைக்கிறான் பக்கத்துல இருக்கிறவங்க நாயை அடிக்க சொல்லுங்க இல்லன்னா மனசங்களையும் கடிக்க ஆரம்பிச்சுரும்னு சொல்றாங்க நேத்தே எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க நானும் அடிக்க சொல்லிட்டேன்... " என்றது.

           "அம்மா.. வெறிக்கொண்டு இருந்தா உன்னைய அதுக்கு அடையாளமே தெரியாது உன்னைய பார்த்து வாலு ஆட்டுச்சுன்னு சொல்றே அப்ப அது நிதானமாதான் இருக்கு மத்தவங்க சொல்றாங்கன்னு நீயும் சொல்லாதே அவனுக்கு ஒன்னும் இல்லை.." என்று சொல்லி போனை வைத்துவிட்டு ஆபிஸ் கிளம்பினேன்.



           மதியம் மணி ஒன்று .. ஆபிஸ்சில் முக்கியமான வேலை ஒன்று செய்து கொண்டு இருந்தேன்.. மறுபடியும் அம்மாவிடம் இருந்து போன் "என்னம்மா.. என்றபடி போனை காதில் வைத்தேன்.. ஹாஸ்பிட்டல் போய் ஊசி போட்டுட்டு வந்தேன்.. நான் வர்றதுக்குள்ள நம்ம குட்டிமணிய அடிச்சுட்டாங்க..ம்மா.. ஒரே அடியில செத்துட்டுனாம்.. அந்த ஈஸ்வரி விட்டுல கட்டிகிடந்த நாயை போய் கடிச்சு இருக்கான் பக்கத்துல உள்ளவங்க எல்லாம் அதுக்கு வெறிபுடிச்சுருக்குன்னு சொல்லியிருக்காங்க அங்கேயே வச்சு அடிச்சு தென்னை மரத்துல புதைச்சுட்டாங்கம்மா.. என்றபடி ஒரே அழுகை..

           நான் அப்படியே அதிர்ச்சியில் நின்றேன்... "என்னம்மா... சொல்றே.. "

           "ஆமாம்மா.. கேட்டுக்குள்ள தலையவிட்டு கடிக்க போயிருக்கு வெளிய தலைய எடுக்க முடியல அப்படியே அடிச்சுட்டாங்களாம்மா... நான் அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன்.. டெய்லி வந்து என் மூஞ்ச.. மூஞ்ச.. பார்த்துட்டு போவான் அவன் என்ன நினைச்சானோ தெரியல.."

          "சரி.. சரி.. அழதே... சாப்பிட்டியா..."

           " எங்க சாப்பிடுறது அவனுக்காகதான் சமைப்பேன் இப்ப அவனே இல்ல நான் ஒருத்திக்கு என்ன சமைக்கிறது"

            "நீ சாப்பிடமா உடம்ப கெடுத்துக்காதே... நல்லா சாப்பிடு இனிமே நாயே வளர்க்க வேண்டாம்... " என்றேன்.

             "ஆமா.. நானும் அப்படிதான் நினைக்கிறேன் இப்படி பாசமா வளர்த்து சாக கொடுத்துட்டு கஷ்டப்படுறதுக்கு சும்மாவே இருக்கலாம்.. புள்ள மாதிரி வளர்த்தேன்.. எங்க பார்த்தாலும் ஓடி வருவான்.. என்னால மறக்க முடியலம்மா.. "அம்மா மீண்டும் அழத்தொடங்கியாச்சு.

            "நான் கோபமாக சத்தம் போட்டேன் அதான் அடிக்க சொல்லிட்டியே அப்புறம் அடிக்கச்சொல்லிட்டு இப்ப ஏன் அழுற? சும்மா.. அழுது அழுது.. உடம்ப கெடுத்துக்காதை பார்க்கிறதுக்கு ஆள் கூட இல்ல.. " என்றபடி போனை வைத்தேன்.  அம்மாவுக்கு ஆறுதல் சொன்னெனே தவிர என்னால் இப்பவரைக்கும் அவன் இறந்துவிட்டான் என்பதையே நம்ப முடியவில்லை..

              இரவெல்லாம் எனக்கு அவனின் ஞாபகங்கள் வாட்டி எடுத்தது அவன் சின்ன குட்டியில் செய்த சேட்டைகள் எல்லாம் என் நினைவுக்கு வரிசைக்கட்டி வந்து போகிறது. அதே கவலையோடு தூங்கி போனேன் நான். குட்டிமணி ஓடிவந்தான் கனவில்.

              "டேய்... குட்டிமணி மேல ஏறாத அடிப்பேன் சொன்னா கேளு.. என்னம்மா குட்டிமணி இப்படி இளச்சுட்டான்.... ஒழுங்க சாப்பாடு போடலையா நீ... "

          "ஆமா.. அவன் நல்லா தான் சாப்பிடுறான்... "

          "என்னடா குட்டிமணி.. நீ நல்லா சாப்பிடுறீயா.. நீ சொன்ன பேச்சு கேட்கிறது இல்லையாமே.." என்றேன்.

          அவன் வாயை பிளந்து கொண்டு சிரித்த முகத்தோடு ஆவ்வ்.. ஆவ்வ்.. என்று என் கை, கால்களை கட்டிபிடித்து நாக்கால் நக்கி கொண்டுயிருந்தான்...

           "என்னம்மா.. இவனுக்கு வெறிபிடிச்சுருச்சு அடிக்க சொல்லிட்டேன்னு சொன்னே.. "என்றேன்.

              "இல்ல யாரும் அடிக்கல அப்படியே விட்டாச்சு..." என்றபடி அம்மா வேலை பார்க்கத்தொடங்கினார்.

             என்னைப் பொறுத்தவரை குட்டிமணி இறக்கவில்லை என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் கனவோடு கனவாக.




4 comments:

  1. அற்புதமானப் படைப்பு
    நாங்கள் வளர்த்த செல்லக்குட்டியின்
    'நினைவு வந்து கொஞ்சம் மனதை
    சங்கடப்படுத்திப்போனது
    நல்வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியாத ஒரு கொடுமை.. நன்றி ரமணி சார்

      Delete
  2. குட்டிமணி, அருமையான பேரு, என்னுடைய நாய்க்குட்டியும் இறந்த போது தாங்க முடியாத ஓர் வலி, அதை நினைவூட்டுகிறது உங்கள் வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அன்பிற்கான வலி அவை... நன்றி தங்கள் வருகைக்கு

      Delete