Sunday, 6 March 2016

நட்பில் பிரச்சினை வர காரணம் என்ன?

மன ரீதீயில் ஓர் அலசல்:

              முன்பு கடிதம் என்ற ஒரு அழகான மனஉணர்வு இருந்தது. படிக்கும் போதே அடடா என்று தோன்றும், இந்த கடிதம் முடியாமல் நீண்டு கொண்டே போகாதா என்று தோன்றும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் இந்த கடிதம் எழுதிமாதங்கள் ஆகலாம், வாரங்கள் ஆகலாம், நாட்கள் ஆகலாம் இருப்பினும் ஏக்கத்தோடு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே தவிர கோபமோ அதனால் சண்டையோ பிரச்சினையோ இருக்காது. காரணம் கடிதம் கிடைத்து படிக்காமல் கூட இருக்கலாம், வேலையாக இருக்கலாம், பதில் எழுத பிடிக்காமல் கூட இருக்கலாம், அதனால் எந்த பிரச்சினையும் வருவதில்லை ஏனெனில் அவர் எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறார் என்று தெரியாது என்பதால். அடுத்து குறுஞ்செய்தி அதாவது SMS ஒன்று வந்தது அதுவும் கிட்டதட்ட கடிதம் போன்ற ஒரு உணர்வை தந்தது. இதிலும் எந்த பிரச்சினையும் இல்லை ஏனெனில் இதற்கும் பதில் உடனடியாக அனுப்பலாம் அல்லது சற்று தாமதமாக கூட அனுப்பலாம் இதிலும் பிரச்சினை வராது.

              தற்போது நட்பில் பிரச்சினை வர காரணம் என்ன? யார் காரணம்? பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் வந்த பிறகு எந்தளவிற்கு ஒருவரை நெருக்கமாக வைத்ததோ அதே வேகத்தில் பிரித்தும் வைத்துவிடுகிறது. எப்படி தெரியுமா? "பாஸ்ட்புட் ம் வாட்ஸ்அப் வைபர் ம் ஒன்னு" அதாவது இந்த பாஸ்ட்புட் எப்படி நம்ம அவசரத்திற்கு உணவை தந்து ருசியைக்கூட்டி பசியை போக்கி சிறிது நாட்கள் ஆனதும் உடலைக் கெடுக்கிறதோ அதே போன்று பேஸ்புக்/வாட்ஸ்அப் /வைபரும் இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தி சுடச்சுட செய்தியை பரிமாற செய்து நாட்க ஆக அதே வேகத்தில் மிகப் பெரிய இடைவெளியே ஏற்படுத்தி மன உளைச்சலை தந்து விடுகிறது. எப்படித் தெரியுமா? சின்ன உதாரணம் நட்பின் தொடக்கத்தில் இரு நண்பர்கள்

நபர் 1 :

1. "ஏய் ஆன்லைக்கு வா உன்கூட நிறைய பேசனும்." இரவு 2 மணிவரை பேசுவது. ஆன்லைனுக்கு வரும்பேதெல்லாம் மணிக்கணக்கா பேசுவது. ஆன்லைனுக்கு வருவதற்கு முன் சொல்லி வைத்துக்கொண்டு வருவது.

2.ஒருநாள் பேசாமல் இருந்தாலும். "ஏன் அமைதியா இருக்கிற"

3. "உன்கூட பேசுறதுக்காகதான் நான் ஆன்லைன்னுக்கு வர்றேன்."

4. "சரி நான் இரண்டு நாளா வரலையே ஏன்னு கேட்கமாட்டியா? என்னை காணும்னு தேடுனியா?"

5. "ஆன்லைனுக்கு வந்துட்டு போகும்போது ஒரு ஹாய் சொல்லிட்டு போகமாட்டியா?"

6. "ஏன் நான் வந்ததும் போய்ட்டே?"

7. "நீங்க என்ன சொன்னாலும் சரியாதான் இருக்கும். எப்படி நீங்க இப்படியெல்லாம் யோசிங்கிறீங்க? நீங்க சிந்தனை சிற்பியா?"

8. "எனக்கு ஒரு நல்ல நண்பர் நீங்க... யாரிடமும் சொல்லாத விஷயத்தை உங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன்".

9. "உங்ககிட்ட பேசினால் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்குது."

10. "எனக்கு மனசு சரியில்ல உங்ககிட்ட பேசினால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும் வர்றீங்களா?"

சிறிது நாட்களுக்குப் பிறகு அதாவது பழகபழக பாலும் புளிக்கும்னு சொல்வாங்கல்ல அதுமாதிரி

நபர் 2: ஹாய்...
நபர் 1: .... ...

நபர் 2: "ஏன் வரல"
நபர் 1: "சும்மாதான்"

நபர் 2: "நீங்க முன்னாடி மாதிரி பேசுறீங்க இல்ல ரொம்ப மாறிட்டீங்க"
நபர் 1: "ச்சேச்சே அப்படியெல்லாம் இல்ல உங்களுக்கு அப்படி தொனுது நான் ஒரே மாதிரிதான் இருக்கேன்"

நபர் 2: "ஏன் நான் வந்ததும் உடனே போறீங்க?"
நபர் 1: "நான் கவனிக்கல அதான் போய்ட்டேன்"

நபர் 2: "நான் பார்த்துட்டுதான் இருக்கேன் இப்பெல்லாம் என் கூட பேசுறது இல்ல ஆன்லைனுக்கு வர்றீங்க ஆனா பேசுறீங்க இல்ல"
நபர் 1: "ஏன் எப்ப பார்த்தாலும் சண்டை போடுறீங்க? சின்ன விஷயத்தை கூட பெரிசு பண்றீங்க, எனக்கு அதில் விருப்பம் இல்ல"

                இந்த உரையாடலை படிக்கும் போது உங்களுக்கு என்ன தோணுது? ஒரு விஷயம்உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.அதாவது, இரண்டு நண்பர்கள் முன்புபேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் வித்தியாசம் புரிந்திருக்கும். முன்பும் அந்த நண்பர் அப்படி இருந்திருப்பார் ஆனால் தெரியாது. ஏனெனில் கடிதத்தில், குறுஞ்செய்தியில் நம்மை காட்டிக்கொடுக்காது ஆனால் ஆன்லைன் நம்மை காட்டிக்கொடுத்துவிடும். ஆன்லைனுக்கு வந்துவிட்டு பேசாமல் போகமுடியாது, தகவலை படிக்கலன்னு சொல்ல முடியாது ஏன்னா டிக் காட்டி கொடுத்துவிடும். எப்ப வந்தோம் எப்ப போனோம் என்று காட்டும். அதில் இருந்து சமாளிக்க முடியாது. இதில் ஏதாவது ஒன்றை சொன்னாலும் நாம் எதையோ மறைக்கிறோம் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். இதிலிருந்துதான் சண்டை ஆரம்பிக்கிறது பிரச்சினை வருகிறது.

1. என் கூட பேசுறதுக்குதானே ஆன்லைனுக்கு வர்றேன்னு சொன்னீங்க?
2. ஏன் நான் வந்ததும் போறீங்க? என் கூட பேச பிடிக்கல?
3. புது நண்பர்கள் வந்ததும் என்னை மறந்துட்டிங்க?
4. நீங்க முன்னாடி மாதிரியில்ல?

              இப்படி ஆயிரம் கேள்வி கணைகள் இரண்டாம் நபரிடம் இருந்து வரும். ஏனெனில் உங்களிடம் இருக்கும் வித்தியாசத்தை அவர் கண்டுபிடித்துவிட்டார். அதை உங்களிடம் நேராக கேட்கும் போது உண்மை உணர்த்துகிறது ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை என்று மறுத்து பேசுகின்றீர்கள். பிறகு அதுவே எரிச்சலாக மாறுகிறது, ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. இதுதான் உண்மை.

          அந்த 2ம் நபர் கேள்விகள் கேட்கிறார் என்றார். அவர் உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம், சிறு வித்தியாசத்தை கூட கண்டுபிடித்து கேட்கிறார் என்றால் அத்தனை பிரியம் என்று அர்த்தம். "ஆரம்பத்தில் நம் நண்பர் நம்மை இப்படி கேட்கமாட்டார என்று ஏங்கிய நீங்கள், எதிர்பார்த்த நீங்கள் இப்போது அதே கேள்வியை கேட்கும் போது ஏன் சண்டை போடுகிறார் என்று எண்ணுகிறீர்கள்? இவருக்கு மனரீதியில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று ஏன் நினைக்கின்றீர்கள்?

              ஆக பிரச்சினை 2 ம் நபரிடம் இல்லை 1 ம் நபரிடம் இருக்கிறது. அதாவது அந்த 1 ம் நபருக்கு வேற நட்பு கிடைத்திருக்க வேண்டும். அல்லது சளிப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும் அதை மறைக்க பொருந்தாத காரணத்தை சொன்னால் நிச்சயம் பிரச்சினை வரும். இரண்டு நண்பர்களுக்கு இடையில் வித்தியாசத்தை யார் கண்டு பிடிக்கிறாரோ அவர் சரியாக இருக்கிறார் என்று அர்த்தம். அப்போ மாற்றம் இன்னொருவரிடம் இருக்கிறது. மன ரீதியில் அவர் அதை உணர வேண்டும் உணராமல் நான் சரியாக இருக்கிறேன். உனக்குதான் ஏதோ ஆச்சு என்றால் தவறு அவரிடம்தான் இருக்கிறது.

              ஆக பிரச்சினை எதுவாக இருந்தாலும் இருவரும் நன்றாக யோசித்து முன்புபோல் நாம் இருக்கிறோமா? என சிந்தித்து பாருங்கள் இல்லையென்றால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்து மனம்விட்டு பேசிப்பாருங்கள் எல்லா பிரச்சினையும் ஓடிவிடும். அதைவிடுத்து இருவரும் மனதிற்குள் ஏதாவது நினைத்துக்கொண்டு இருந்தால் அது உண்மையான நட்புக்கு அழகல்ல.
வாழ்க்கையில் நல்ல நட்பு அவசியம் எல்லா நேரங்களிலும் நம் கூட வருகின்ற உறவில்லா நட்பு. உலகில் எதுவும் இல்லாமல் இருப்பார்கள் ஆனால் நட்பு இல்லாமல் யாரும் இருப்பதில்லை. திருமணம் ஆகாத துறவிக்கு கூட நண்பர் என்ற ஒருவர் கண்டிப்பாக இருப்பார். திருமணம் ஆகாத ஆண் / பெண் இருக்கலாம். நண்பன் இல்லாம் இருவரும் இருக்கமாட்டார்கள். ஒருத்தருக்கு அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, மனைவி, கணவன் ஏனைய மற்ற உறவுகள் கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் நட்பு இல்லாமல் யாருமே இல்லங்க.


             அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நட்பைதான் சில நாள் பழகிவிட்டு தூக்கி எறிகிறோம். ஏனெனில் இது இல்லை என்றால்இன்னொன்று கிடைக்கிறது என்ற எண்ணம் இருப்பதால். இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில் எல்லாருக்குமே நம்மை புரிந்து கொண்ட நம்மை அனுஅனுவாக ரசிக்கின்ற, நமக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரிந்து வைத்துக்கொண்ட, நம் மனதை புரிந்த கொண்ட நண்பனோ/நண்பியோ கண்டிப்பாக ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் ஆனால் அதை அவர்கள் கண்டு கொள்ளாமல் தேடி போய் வேற ஒருத்தரிடம் அன்பை பாசத்தை செலுத்தி அது கிடைக்காமல் ஏமாற்றத்தோடு இருப்பவர்கள் நம்மில் ஏராளம்.
கிடைத்த நட்பை தக்கவைத்துக் கொண்டும் அன்பாக இருந்தாலே போதும் பிரச்சினை என்பதே கிடையாது. ஆனால் பலர் நம்மில் அப்படி இருப்பதில்லை. நீ அப்படி செய்தே... பதிலுக்கு நான் இப்படி செய்தேன்னு போட்டி வந்துவிட்டால் அன்பு அர்த்தமற்றதாகிவிடும்." நீ சாப்பிட்டியா? நல்ல தூங்குனியா? உடம்புக்கு என்ன? ஏதாவது பிரச்சினையா? ஏன் என் கூட பேசல?" இப்படி நம்மகிட்ட யாராவது அன்பா கேட்க மாட்டாங்களான்னு ஏங்கி கிடப்பவர்கள் ஏராளம். அப்படியிருக்கு இப்படி ஒருத்தர் உங்களிடம் கேட்டால், சண்டை போட்டால் அதை விட உங்களுக்கு என்ன வேணும்? அதாங்க உங்கள் மீதுள்ள அன்பு அதை புரிந்து கொள்ளாமல்தான் பலர் விலகிபோகிறார்கள். சிலர் அப்படி கேக்கலன்னு வருத்தப்படுறாங்க/ சிலர் அப்படி கேட்டால் வெறுக்கப்படுறாங்க.

             "ஒரு உறவு நம்மீது அக்கறையா இருப்பது பெரிய விஷயம் இல்ல உறவே இல்லாமல் அக்கறையா இருப்பதுதாங்க பெரிசு" நட்பில் எப்போதும் ஒரே மாதிரி எந்த சூழ்நிலையிலும் விலகாது இருந்தால் அதான் உண்மையான நட்பு. நமக்கு துன்பம் வரும்போது யாரிடம் பகரிந்து கொள்ள நினைக்கின்றோமோ அதுதான் உண்மையான நட்பு. அதே நேரத்தில் ஆறுதல் கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் அப்போதைக்கு மட்டும் நட்பை தேடினால் அது நட்பாக இருக்க முடியாது அது நீண்ட காலம் நீடிக்காது. உங்கள் சுயநலத்திற்கு நட்பு என்ற போர்வையை தேடிக்கொள்ளாதீர்கள். என்றேனும் ஒருநாள் அதற்காக நிச்சியம் வருந்துவீர்கள்.

            ஆன்லைன் பலரை அதிவேகத்தில் எப்படி இணைக்கிறதோ அதே வேகத்தில் பிரித்தும் வைக்கிறது. நண்பர்களே இது உண்மையெனில் ஷேர் செய்யலாம் பகிர்ந்து கொள்ளலாமே

#ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment