Thursday, 31 July 2014

¤மாறியது நெஞ்சம்¤

                   சண்முக சுந்தரம் மதிய வெயில் மண்டையை பிளக்க மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார் "ம்ம்ம்... என்ன வெயில் இப்படி கொளுத்துது..." என்றவாறு மாட்டின் வாலை முறுக்கி தட்டி அதட்டினார் அவரின் அதட்டலுக்கு பயந்து மாடு வீட்டுக்கு விரைந்து சென்றது. 

                  வீட்டுக்கு வந்த சண்முக சுந்தரம் மாட்டை அவிழ்த்து கொட்டகையில் கட்டி 
வைக்கோல் போட்டு தண்ணி காட்டிவிட்டு கொல்லைபுறம் சென்று தொட்டியில் இருந்த 
தண்ணீரில் முகம் கைகால்களை கழுவிக் கொண்டு வந்தார். 

                 "என்ன சுந்தரி... சாப்பாடு ரெடியா..?" 

                "இதோ... ரெடியாட்டுங்க" என்றவாறு சாப்பாட்டு தட்டை வைத்து அதில் சாதம்,
வெண்டைக்காய் பொறியல், சாம்பார் என போட்டு வைத்தாள் அவரது மனைவி சுந்தரி. 

                சண்முகசுந்தரம் சாப்பிட்டுக் கொண்டே "எங்க உம்புள்ள இன்னும் வரலயா..." 
என்றார். 

               "இல்லங்க காலையில போனவன் இன்னும் காணும் மணி ரெண்டாச்சு மதியம் சாப்பிட கூட வரல பாவம் புள்ள என்ன பண்றானோ..." எனக் கவலையோடு சொன்னாள் சுந்தரி. 

              "இன்னும் கொஞ்சம் மோரை ஊத்து என்றவர் எதுக்கு அவனுக்கு இந்த வேண்டாத வேலை நான் அப்பவே சொன்னேன் கேட்டாதானே..."  

             "என்னமோங்க அவனுக்கு இந்த வயகாட்டு வேலை பிடிக்கல நான் படிச்ச படிப்புக்கு ஆபிஸ் உத்தியோகம்தான் பார்ப்பேன்னு பிடிவாதமா இருக்கான்" 

              சண்முகசுந்தரம் சாப்பிட்டு முடித்துவிட்டு தரையில் கையை ஊன்றி மெல்ல 
எழுந்தபடி "என்னமோ போங்க நீயும் ஓம்புள்ளையும் வேலை தேடுறானாம் வேலை..." 
என்றபடி வெளியே சென்று கை கழுவி விட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார்.

              அப்போது மகன் மகேஷ் வந்தான் "வாப்பா... இன்டர்வியூ நல்லபடியா முடிஞ்சுதா 
வேலை கிடைச்சுருமா..."  

            "நல்லபடியா முடிஞ்சுத்துப்பா நீங்க மனசு வைச்சா வேலை கிடைச்ச மாதிரிதான்" 
என்றான் தயங்கிபடி. 

            "என்னப்பா... சொல்றே நான் மனசு வைக்கணும்..?" என்றார் புரியாமல். 

            "இன்டர்வியூ எல்லாம் சும்மா கண்துடைப்புப்பா நாலு லெட்சம் பணம் 
கொடுத்துட்டா வேலை கிடைச்சிடும் அதுக்கு நீங்கதான் மனசு வைக்கணும்" 


           மகனின் பேச்சைக் கேட்ட சண்முகசுந்தரம் கலகலகலவென சிரித்தபடி "என்னது... 
என்னது... பணம் கட்டணுமா? ஏம்பா இந்த பணத்தை கட்டிதான் வேலைக்கு சேரனுமா 
நம்ம கொல்லையில நூறு பேரு வேலை பார்க்குறாங்க நீ என்னடான்னா இன்னொருத்தன் கிட்ட கட்டி கைட்டி வேலை பார்க்க நிக்கிற" என்றவர் மேலும் தொடர்ந்தார் 

            "ஏம்பா... நமக்கு நஞ்சையும் புஞ்சையும் ஏக்கர் கணக்குல இருக்கு அதோடு ஏழு 
தலைமுறைக்கு உக்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு பணம் காசு சேர்த்து வைச்சுருக்கேன் அப்படி இருக்கும்போது வேலை தேடி ஏன் அலையுற... இந்த வேலை பார்த்துதான் நாம சாப்பிட போறமா? எத்தனையோ இடத்துல இளைஞர்கள் சொந்த வீடும் இல்லாம, நிலமும் இல்லாம வெறும் படிப்பை மட்டும் நம்பி வேலைக்கு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்குறாங்க... ஆனா அவங்களுக்கு இந்த வேலை கிடைக்குறதுல்ல காரணம் உன்ன மாதிரி பணக்கார இளைஞர்கள் பணத்தைக் கட்டி அந்த வேலையை தட்டி 
பறிச்சுகுறதாலதான். வருமானமே இல்லாத இளைஞனுக்கு இந்த வேலை கிடைச்சா எவ்வளவு உதவியா இருக்கும் கீழ்நிலையில இருக்குற அவங்க கொஞ்சம் மேல்நிலைக்கு வரட்டுமே பணக்கார நாம வாழிவிட்டு ஒதுங்கி நிற்போம் நீ உன் படிப்பை வீணாக்க வேணாம் இந்த விவசாயத்துல அத பயன்படுத்து படிப்பு அறிவு வளர்த்துக்கதான்னு நினைச்சுக்க அதுல ஒரு சந்தோஷம் கிடைக்கும்"  

             மகேஷ் ஒன்றுமே பேசாமல் சாப்பிட்டுவிட்டு போய் படுத்தான் படுத்தவன் அப்பா 
சொன்னதை சிந்தித்தவன் ஒரு முடிவோடு தூங்கிபோனான். 

            மறுநாள் காலை கணேஷ் "அம்மா... அம்மா... நான் வயலுக்குப் போறேன் அப்பாவுக்கு சாப்பாடு ஏதாவது கொண்டுபோகணுமா?" என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் சுந்தரி. 

           "என்னப்பா... சொல்ற வயலுக்கு போறீயா? என்ன திடீர்னு 

           "ஆமாம்மா... இனிமே அப்பாவுக்கு உதவியா இருக்கலாம்னு நினைக்கிறேன்" என்றவனை நம்பமுடியாதவளாய் "இந்தப்பா இதுல மோர் இருக்கு அப்பாகிட்ட கொடுத்திரு" என்று ஒரு தூக்குசட்டியை கொடுத்தாள் புன்னகைத்தப்படி 
     
                                                            
               கணேஷ் அந்த தூக்குசட்டியை தூக்கி கொண்டான் நடந்தான் சிறிது நேரத்திற்கு
பிறகு வயல் வந்து சேர்ந்தான் பச்சை பசேல் என்று வயல் அதில் இவனின் காலடி 
சத்தம் கேட்டு செந்நாரைக் கூட்டங்கள் கும்பலாக மேலே பறந்து சென்றது 
காற்றில் ஆடும் நாற்றுக்கள் அங்குமிங்கும் அசைந்தபடி இவனை வரவேற்பது போலவே 
இருந்தது அந்த காட்சிகள் மனதிற்கு ஒரு புத்துணர்வை தந்தது. 

            தூரத்தில் மகன் வருவதைக் கண்ட சண்முகசுந்தரம் உள்ளுக்குள் மகிழ்ந்தார். மகன் அருகே வந்ததும் "வாப்பா... இப்பதான் வர வழி தெரிஞ்சுதா? விவசாயம் ஒன்னும் தவறான தொழில் இல்லப்பா ஏன் எல்லாரும் அறுவறுப்பா பார்க்குறீங்க உங்கள மாதிரி படித்த இளைஞர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி பொறுப்பா பார்த்துகிட்டா நம்மா நாட்டுக்கு ஏன் பஞ்சம் வரப்போகுது புதுசு புதுசா யோசிங்க விவசாயத்து ஒரு புரட்சியை உண்டு பண்ணுங்க நம்ம நாட்டுக்கு உணவு பஞ்சமே வராது யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்ல அதோடு பெத்த புள்ள கஞ்சி ஊத்தலன்னாலும் நாம பார்க்கிற விவசாயம் நமக்கு கஞ்சி ஊத்தும்பா" என்றவர் அர்ந்தம் பொதிந்த பார்வையுடன் மகனை நோக்கினார். 

              அவரின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்த கணேஷ் நெற்கதிர் போல் தலை குனிந்து கேட்டுக்கொண்டிருந்தான். 

                                                                 *** முற்றும் *** 

ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment