Thursday 1 May 2014

இலங்கை வானொலியும் என் மனம் கவர்ந்த அறிவிப்பாளரும்

                   இலங்கை வானொலி எல்லோரும் ரசித்த காலத்தில் நானும் ரசித்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன் அப்போது வானம்பாடியில் (இப்போது தென்றல்) உமாசந்திரா அவர்களின் நிகழ்ச்சி எனக்குப் பிடிக்கும். அதே நேரத்தில் சர்வதேச ஒலிபரப்பில் ஒரு குரல் என்னை வெகுவாக கவர்ந்தது. அப்போது அது யார் என்று சரியாக எனக்கு தெரியவில்லை அப்புறம் படிப்பு என்று இருந்துவிட்டேன்.


                           பரிட்சை முடிந்து வீட்டில் இருக்கும்போது மீண்டும் அந்த அறிவிப்பாளரின் குரல் என்னை ஈர்த்தது. அப்போது அவர் கவிதை, சிறுகதை, இலக்கியம் என்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார். நிறைய நேயர்கள் தனது பங்களிப்பை தந்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஸ்ரீராமின் வெற்றிபாதை என்ற நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது அதை பிஹச் அப்துல்ஹமீது அதை தொகுத்து வழங்கினார். 




                           இவர்களின் குரல்கள் என்னை கவரவே நானும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது ஆனால் எழுதி, எழுதி நானே வைத்துக்கொண்டேன் அதோடு கல்லூரியில் சேர்ந்துவிட்டதால் எழுதும் ஆசையை ஓரங்கட்டி வைத்துவிட்டேன் கல்லூரி படிப்பு முடிந்ததும் மீண்டும் வானொலி கேட்க ஆரம்பித்தேன். அதன்பிறகு ஒவ்வொரு அறிவிப்பாளர்களையும் எனக்கு ரொம்ப பிடித்து போனது பிஹச் அப்துல்ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், ஜெயகிருஷ்ணா, நாகபூஷணி, ஜெகன்மோகன், கலிஸ்டா, அனுஷாமொராய் என்று பெரும் பட்டியலே உண்டு அதில் ஒரு அறிவிப்பாளரின் குரல்
என்னை ரொம்ப கவர்ந்து வந்தது அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று
ஆசைப்பட்டேன் ஆனால் அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று தயக்கமாக இருந்தது.


                            அந்த நேரத்தில் நேயர் அரங்கம் என்ற நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது எல்லா நேயர்களும் அதில் இடம் பெற்று வந்தார்கள் அப்போது ஜெகன்மோகன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதன் முதலாக ஒரு நேயர் அரங்கம் என் நண்பியின் பெயரிலும், என் பெயரிலும் எழுதினேன் ஜெகன்மோகன் வாசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டும் இருந்தேன் இரண்டுமே ஒலிபரப்பு ஆனாது ஆனால் அவர் அதை வாசிக்கவில்லை.
யார் வாசித்தார்கள் தெரியுமா? யாருக்கு நான் கடிதம் எழுத வேண்டுமென்று
ஆசைப்பட்டேனோ, யாரின் குரல் என்னை ஈர்த்து வந்ததோ, அவரே எனது பிரதியை வாசித்தார். வாசித்ததோடு மட்டுமல்லாமல் நான் கவிதை என்று கிறுக்கிய வரிகளை நன்றாக கவிதை எழுதியிருக்கிறார் என்று பாராட்டவும் செய்தார் நான் எல்லையில்லா மகிழ்ச்சியுற்றேன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன். 50 க்கு மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிந்தது நேயர்கள் பாராட்டு மழை பொழிந்தார்கள் இது என்னுடைய முதல் அனுபவமாக இருந்தது நிறைய பேனா நண்பர்கள் கிடைத்தார்கள்.




       முதல் முறையாக என் மனம் கவர்ந்த அறிவிப்பாளருக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதினேன் அதன் பிறகு அவரின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் கேட்டுவிட்டு கடிதம் எழுத தொடங்கினேன் அவரின் நிகழ்ச்சி எப்படா வருமென்று காத்திருந்தேன் வராத நாட்களில் கவலைப்பட தொடங்கிவிட்டேன். அதன்பிறகு வானொலி மலர் என்ற
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அதில் என்னுடைய முதல் சிறுகதையை எழுதினேன் ஒலிபரப்பானது அதன் பிறகு தொடர்ந்து எழுதினேன் என்னுடைய சிறுகதைகளை நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார் அதுவே என்னை எழுத தூண்டியது. தேன் போன்ற இனிமையும், குயில் போன்ற குரலும் எனக்கு ரொம்ப பிடித்து போனது தொடர்ந்து பாராட்டி கடிதம் எழுதினேன் ஆனால் எதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. ஒருநாள் இப்படி சொன்னேன் "நான் உங்களுக்கு கடிதம் எழுதுறேன் ஆனால் அது உங்களுக்கு கிடைக்கிறதா என்று தெரியவில்லை அதனால் நான் கேட்கிற பாடலை போடுங்கன்னு
சொன்னேன்". அப்ப அறிவிப்பாளரின் என் விருப்பம் நிகழ்ச்சி போய்கொண்டு
இருந்தது அதில் நான் கேட்ட பாடலை ஒலிக்கச்செய்தார் அப்போதுதான் என் கடிதம் கிடைக்கிறது என்று புரிந்துகொண்டேன்.



                        அதே நேரத்தில் மற்ற அறிவிப்பாளர்களும் இருந்தார்கள் தன்னை பாராட்டி கடிதம் எழுதும் நேயர்களின் பெயர்களை அடிக்கடி சொல்வதோடு மட்டுமல்லாமல் கடிதத்தை வாசித்தும் காட்டினார்கள் ஆனால் இவர் சற்று வித்தியாசமாக இருந்தார் புகழ்சிக்கும், பாராட்டுக்கும் மயங்காதவராக இருந்தார் அந்த குணம், அந்த நேர்மை எனக்கு பிடித்து போனது. அன்றும் இன்றும் என்றும் என் மனதில் குடியிருக்கும் ஒரே ஒரு அறிவிப்பாளர் இவர் மட்டும்தான். இனி இவர் போல் ஒரு அறிவிப்பாளர் கிடைப்பது கஷ்டம்தான். என்னடா அந்த அறிவிப்பாளர் பெயரை சொல்லவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள் அவரை பெருமையாக சொல்லதான் வேண்டும் ஏனெனில் பல திறமைகள் பல விருதுகள் பெற்றவராக இருந்த போதிலும் நான்
இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று தன்னடக்கத்தோடு குழந்தை மனதோடு இருப்பதால்தான் வெற்றி அவரை தேடி வருகிறது.
நிறைக்குடம் நீர் தளும்பாது என்று சொல்வதுண்டு அதை இவரிடத்து காண
முடிந்தது.


                        இவர் வேற யாருமல்ல இலங்கை வானொலி அறிவிப்பாளர், வசந்தம் தொலைக்காட்சி தொகுப்பாளர், சிறந்த விளம்பர நடிகை, கவிஞர், எழூத்தாளர், விரிவுரையாளர், இவர் பெற்ற விருதுகள் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது, சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது, மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் 2ம் பரிசு பெற்றமை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அறிவிப்பாளராகவும், சார்க் மாநாட்டுக்கு அறிவிப்பாளராகவும் சென்றுகிறார் இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அவரின் பெயரை சொல்லிவிடுகிறேன்.



                                          நாகபூஷணி ஆனால் இதுவரை இவர் யாரிடமும் காட்டிக்கொள்வதோ அல்லது ஒரு தலைக்கனமோ இவரிடத்தில் இல்லை அது தான் எனக்கு மட்டும் அல்ல அனைவரையும் கவர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த விருது பெற்ற தகவலை கூட செய்திதாள் பேட்டி ஒன்றில் இருந்துதான் எடுக்க முடிந்தது அப்போதுதான் உணர்ந்தேன் அவர் ஒரு நிறைகுடம் என்று இன்னும் அவர் மீதும் மதிப்பும் மரியாதையும் கூடிபோயிற்று தன்னடக்கம் எங்கு இருக்கிறதோ அங்கு புகழ் தானே தேடிவரும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பேரும் புகழும் பெற வேண்டும்.

3 comments:

  1. நாகபூஷணி அம்மையாருக்கு அழகான குரல்வளம் மட்டுமன்றி மிக அழகான கண்களும் அமைந்தது ஒரு வரப்பிரசாதம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உண்மைதான்.
      சிலருக்கு ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. ஆனால் இவருக்கு பல திறமைகள்
      அதோடு அறிவோடு சேர்ந்த கலையழகு. எனக்கும் அவரது பேசும் கண்கள் பிடிக்கும்.
      தங்கள் வருகைக்கு நன்றி!

      Delete