Friday, 23 December 2016

மனதோடு மனம்

சென்னைக்கு வந்த பிறகு என் மனதை கலங்க செய்த ஒரு விஷயம். எப்போதுமே நம் மனசுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இதை செய் இதை செய்யாதே என்று சொல்லும். அதே தான் நட்பு விஷயத்திலும் நாம் எல்லோரிடத்திலும் அத்தனை இலகுவாக பழகிட முடியாது காரணம் நம்பிக்கையின்மை ஏனெனில் யார் எப்படி என்று நமக்கு தெரியாது எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று யாருக்கும் தெரியாது. அந்த ஜாக்கிரதை உணர்வால் சிலரை நாம் தவிர்த்து இருப்போம் நம்மை அறியாமலே அவர்கள் மனதை நாம் காயம் செய்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நினைத்து பார்க்கும் போது நாம் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


             சென்னையில் எனது பக்கத்து ரூமில் புதிதாக ஒரு சகோதரி வந்திருந்தார் என்னோடு வந்து பேசிக்கொண்டு இருப்பார். ஏதோ ஒரு வகையில் என்னை அவருக்கு ரொம்ப பிடித்து போனது. அந்த சகோதரி வந்த மூன்று நாட்களில் நான் ஊருக்கு கிளம்பினேன் நான் கிளம்பும் போது ரொம்ப வருத்தப்பட்டார். சீக்கிரம் வரவேண்டும் என்று கெஞ்சலா கேட்டுக்கொண்டார் நான் சிரித்துக்கொண்டே சரியென்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அவரின் முகம் மாறுதல் என் மனக்கண்ணில் வந்த போது மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஊருக்கு சென்றவுடன் போன் பண்ணி பேசினார் ரொம்ப வருத்தப்பட்டார். பிறகு நான் ஊரிலிருந்து ரூமுக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டார் . எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஓரிரு நாளில் இத்தனை அன்பு ஏற்படுமா என்று. தினமும் வந்து என்னோடு பேசுவார் உங்ககிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு அக்கா என்னை அப்படியே இழுக்குது என்பார். மறுபடியும் நான்கு வாரத்திற்கு பிறகு ஊருக்கு கிளம்பினேன் போறிங்களா ... போறிங்களா என்று கேட்டு்கொண்டே இருந்தார். நான் கிளம்பி ரெடியா வந்து நிற்கிறேன் அந்த சகோதரியின் முகமே சரியில்லை அழும் நிலையில் அவர் இருக்கிறார். அப்பவும் நான் சிரித்துக்கொண்டே ஜாலியா என்ஜாய் பண்ணுங்க நான் வர்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்புறேன். நீங்க இல்லாம ஜாலியா என்று பாவமாக கேட்கிறது அந்த பெண். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பஸ்சில் அமர்ந்து இருக்கும் போது எல்லோரும் தூங்குகிறார்கள் நான் மட்டும் விழித்திருக்கிறேன் அந்த பெண்ணின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது கண்ணில் ஏனோ கண்ணீர் கசிகிறது. அந்த பெண் எத்தனை பீல் பண்ணி சொல்லியது நாம சிரித்து கொண்டே வந்து விட்டோமே என்று மனசு நிறைய காயப்பட்டது. நான் ஊரில் இருக்கும் போது மற்றவர்கள் சொன்னார்கள் நீ போனதும் ஒரே அழுகை, முகமே சரியில்லை என்றும் மற்ற பிள்ளைகள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள் என்ற போதும் நானும் சேர்ந்து அந்த பெண்ணை கலாய்த்துவிட்டேன் அதன் பிறகு நிறைய வருத்தப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

             நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை வந்த போது அந்த பெண்ணின் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது மனசு பக்குவப்பட்டு இருந்தது போல் இருந்தது. அப்புறம் வழக்கம் போல் என்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பார் ஒரு நாள்.  "அக்கா... உங்கள மாதிரி யாருமே பார்த்ததது இல்ல நான் பார்த்தவரை நீங்க ரொம்ப டிப்ரெண்ட்... உங்ககிட்ட நிறைய லேலண்ட் இருக்கு ஆனால் நீங்க யார்கிட்டயும் குளோஸ்சா பழகுறீங்க இல்ல, கேட்டா கேட்டதற்கு மட்டும் பதில் நீங்க இல்லாதப்போ நான் எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா.. ஆனால் நீங்க அப்படியான்னு கேட்டுட்டு சாதரணமா சிரிக்கிறீங்க ... " என்று சொல்லும் போது மனசு என்னவோ கஷ்டபடுகிறது. எனக்கு அப்பவும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை நானா அப்படி மற்றவர் மனதை புரிந்து கொள்ளாமல் காயம் செய்கிறேன்  என்று பல முறை என்னையே கேள்வி கேட்டுக்கொள்கிறேன். அந்த பெண்ணின் அந்த வார்த்தைகள் என்னை நிறைய சிந்திக்க வைக்கிறது. "நீங்க நல்லா பேசுறீங்க ஆனால் அதில் கொஞ்சம் கூட அன்போ, பாசமோ இல்லை " என்று சொல்லும் போதுதான் இதே வாசகத்தை நான் ஒருவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் எப்படி எனக்குப்பிடித்த சகோதரியிடம் அதிக அன்பு வைத்து வருத்தப்பட்ட போது என் மனநிலை என்ன சொல்லியதோ அதேயேதான் இப்போது அந்த பெண் என்னிடம் சொல்கிறது. எனக்கு சிலர் தந்த காயங்களை நான் யாருக்கோ திருப்பி கொடுக்கின்றேனா என்று தெரியவில்லை. அல்லது இனிமேல் எந்த நட்பும் வேண்டாம் என்று மனது நினைக்கிறதா என்று தெரியவில்லை.

            இப்போது அந்த சகோதரி என்னிடம் பேசும் போது யோசித்து யோசித்து பேசுகிறார். அவர் என்னிடம் சில விஷயங்கள் கேட்கும் போது பிடிகொடுக்காமல் வேர ஒரு விஷயத்திற்கு தாவி விடுவேன் அது எனக்கும் புரிகிறது. இருந்த போதிலும் அந்த சகோதரியின் மனதை தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்தி விட்டோமோ என்று மனசு அடிக்கடி சஞ்சலப்படுகிறது.

              நான் அந்த பெண்ணுக்கு எதுவும் செய்தது இல்லை வாய் மொழி வார்த்தை தானே தவிர வேற ஒன்றுமில்லை. இருப்பினும் ஏதோ ஒரு வகையில் அந்த பெண்ணின் மனதை கவர்ந்து விட்டேன் போலும். இன்னும் ஒரு சில நாட்களில் அந்த பெண் சென்னையை விட்டு போய்விடும் இருப்பினும் நினைவுகள் மட்டும் என்னுடன் இருக்கும் என்பது மட்டும் உண்மை. வந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வா என்று என்னை வியக்க வைக்கிறது. அந்த பெண்ணின் அன்பு எத்தகையது என்று இதுவரை என்னால் கணிக்க முடியவில்லை உண்மையோ பொய்யோ நடந்தவை எல்லாம் நிழல்களான நிஜங்கள் என்பது மட்டும் உண்மை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை இருக்கின்ற இந்த நொடியை தவிர அதைதான் அந்த பெண்ணிடம் அடிக்கடி சொல்கிறேன்.  "நான் ஊருக்கு போனதும் உங்களுக்கு மட்டும் என்னுடைய நம்பர் தர்றேன் என்னோட நீங்க டெய்லி ஜாட் பண்ணனும் சரியா " என்று தலைசாய்த்து சொல்கிறது. நான் ம்... என்று சொல்லவில்லை ம்கூம்... என்று சொல்லாமல் சிரிக்கிறேன் (எது என்னை தடுக்கிறது என்றே தெரியவில்லை) அந்த பெண்ணின் முகத்தில் பெரும் ஏமாற்றம் நிகழ்ந்ததை கண் முன்னே காண முடிந்தது.

          இப்பவும் அக்கா... நான் வெளியில போய்ட்டேன் என்னை காணும்னு தேடுனீங்களா... தேடுனீங்க தானே என்றது. நான் இல்லையே என்றேன். சிரித்த முகம் அப்படியே வாடி போனது...

                                                     - தொடரும்

2 comments: