Friday 22 January 2016

ஊரும் பேரும்

               காணும் பொங்கல் அன்று ஒரு வேலையாக  நான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு சென்றேன். அத்திவெட்டி மறவக்காடு பெரும் கிராமம் சுத்துப்பட்டு 18 கிராமங்களை கொண்டது. பஸ்காக காத்திருந்து பிறகு நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்து நானும் அம்மாவும் நடந்து சென்றோம். நான்  1 முதல் 5 வரை அந்த கிராமத்து பள்ளியில் தான் படித்தேன். பிறகு நல்ல படிப்புக்காக டவுன் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அப்போது 4 பஸ் மட்டுமே அந்த கிராமத்திற்கு செல்லும் அடிக்கடி பஸ் போக்குவரத்து கிடையாது பட்டுக்கோட்டை செல்ல வேண்டுமென்றால் காத்திருந்துதான் போக வேண்டிருக்கும் பள்ளிக்கு செல்லும் போது நிறைய தடவை பஸ்சை தவரவிட்டு பிறகு அம்மா வந்து அழைத்து செல்வார்கள். இப்போதும் அது மாறவே இல்லை என்று தெரிகிறது 20 வருடங்களுக்கு பிறகும் இன்னும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. அங்கே இருந்த கடைகள், வீடுகள் எதிலும் எந்த மாற்றமும் இல்லை அதே சாலையில் நான் நடந்து செல்லும் போது சிறுகுழந்தையாக பள்ளிக்கு சென்ற நினைவு வந்தது. நான் வளர்ந்திருக்கிறேன் அந்த ஊர் வளரவே இல்லை.


            கிராமத்தை நெருங்கிய போது அங்கே இருந்த குளந்தங்கரையில் நிறைய ஆண்கள் டைவ் அடித்து குளித்துக்கொண்டு இருந்தார்கள் ஒட்டிய சுப்பிரமணிய கோவில் தீட்டப்படாத ஓவியமாக காட்சி தந்தது. முன்பு இதே சுப்பிரமணியர் கோவில் ஜமின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருவிழா வரும்போது படம், நாடகம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும். படமோ நாடகமோ என்றால் ஆண் பெண் இருவரும் தனித்தனியாக தான் அமரவேண்டும். பெண்களை யாரும் சீண்ட முடியாது. கூட்டத்தை சுற்றி ஜமீன் ஆட்கள் வரிந்து கட்டிய வேட்டியோடு கையில் கம்புடன் காவலுக்கு நிற்பார்கள். போலிஸ் எல்லாம் ஊருக்குள் வராது. அந்த கோவிலை கடந்து செல்கையில் அந்த காட்சி மறக்காமல் வந்து போனது. நான் சிறுபிள்ளையில் வந்து போன நாட்கள் பசுமையான நினைவுகள்.  பெரிய திடலில் இருந்த கோவில் இப்போது சிறியதாக இருக்கிறது.

                 நான் ஆடி ஓடி விளையாடிய இடங்கள் இன்னும் மாறவே இல்லை. கிராமங்கள் எவ்வளவோ மாறிவிட்டது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் இன்னும் மாறாத கிராமங்கள் எத்தனையோ இருக்கிறது. எங்க தாத்தா என் அம்மாவோட அப்பா பெரிய சிலம்பாட்ட வீரர்  நீண்ட தலை முடியுடன் பெரிய கொண்டையிட்டு இருப்பாராம் ஒரு முறை சுதந்திர போராட்ட தியாகி "வாட்டாக்குடி இரணியனை" எதிரிகள் ஒரு படையுடன் துரத்தி வருந்த போது அவர்களோடு கம்பு சண்டையிட்டு அத்தனை பேரையும் விரட்டி அடித்து இரணியனை மரப்பொந்தில் மறைத்து வைத்து காப்பாற்றினாராம். ஆனால் தனது 30 வது வயதிலே இறந்து போனாராம். எங்க அம்மா தாத்தாவின் வீரத்தை அடிக்கடி சொல்வார்கள். அவருக்கு பிறகு அவர்கள் பிள்ளைகள் சிலம்பு சுற்றினார்கள்.

                ஆனால் இப்போது சிலம்பு சுற்றுவது குறைந்து விட்டது.  நான் ஊருக்குள் செல்லும் போது காணும் பொங்கல் என்பதால் ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்து பிள்ளைகள் புது ஆடை அணிந்து விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள சென்றார்கள். ஒரு இடத்தில் பானை உடைக்க உரிக்கட்டியிருந்தது. இவையெல்லாம் பார்த்துக்கொண்டே செல்லும்போது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு எட்டிப்பார்த்தது. மண்ணின் மகிமை எத்தகையது என்று மண்மனம் மாறாமல் உணர்த்தியது.

No comments:

Post a Comment