Tuesday 17 June 2014

ஞானோதயம் சிறுகதை

             

              காலை 8 மணி கணேஷ் படுக்கையைவிட்டு எழுந்து கைகளை மேலே தூக்கி சோம்பல் முறத்தப்படி கொல்லைப்புறம் சென்று முகம் கழுவி பல் விளக்கிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான்.

               கணேஷின் தாய் கமலம் டம்ளரில் காபியை மகனிடம் கொடுத்தப்படி "ஏம்பா... நீ எங்கேயாவது வெளியில போற வேலை இருக்கா" என்றாள் மெதுவாக

            "ஏன் கேக்குற..." என்றான் சற்று எரிச்சலுடன்.

            "இல்ல கடையில சாமான் கொஞ்சம்தான் இருக்கு டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும் நீ கொஞ்ச நேரம் கடையை திறந்து பார்த்துகிட்டா" என்று சொல்லி முடிக்கும்முன்.

             கணேஷ் "இதபாரும்மா... இந்த பொட்டி கடையில உக்காறா வைக்கவா என்னை இவ்வளவு படிக்க வைச்ச... என்னால முடியாது நீ போறதுன்ன கடையை பூட்டிட்டு போ" என்றான் சற்றே உரத்த குரலில். கமலம் ஏதோ சொல்ல நினைத்தவளாய் வாய்திறந்த போது

               "அம்மா... அம்மா..." என்று வெளியே குரல் கேட்கவே எட்டிபார்த்தாள் அங்கே ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். "என்னப்பா... என்ன வேணும் உனக்கு"

              "நான் இன்ஸிடெண்ட் காபி பவுடர் விற்பனை செய்யுறேன்... ஒரு பாக்கெட்டின் விலை 20 ரூபா வாங்குறீங்களா..? ரொம்ப நல்லா இருக்கும் ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் பவுடர் கொட்டி கலக்கினால் போதும் காபி ரெடி சாப்பிட்டு பாக்குறீங்களா..." என்றவன் பிளாஸ்கில் கொண்டுவந்த வெந்நீரை ஊற்றி அதில் பவுடரை கலந்து கொடுத்தான்.

              வாங்கி குடித்தவள் காபி நல்ல மணத்துடன் நன்றாக இருக்கவே "ஒரு இரண்டு பாக்கெட் கொடுப்பா" என்றவள் ஐம்பது ரூபாய் பணத்தையும் கொடுத்தாள் பணத்தை வாங்கியவன் மீதி பணத்தை கொடுப்பதற்கு ஷர்ட் பாக்கெட்டில் இருந்து மணிபர்சை எடுத்தபோது அதிலிருந்து ஐடென்டிகார்டு நழுவி அங்கே விழுந்தது. வெளியே வந்தகணேஷ் கண்ணில் பட்டது குனிந்து எடுத்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அதில் ஆர்.சரவணன் எம்.எஸ்சி., மேத்ஸ் பாரதிதாசன் யுனிவர்சிட்டி என்றிருந்தது அதே ஆச்சரியத்தார் சார்.. சார்.. ஒரு நிமிஷம் நில்லுங்க என்றான். தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்த அந்த இளைஞன் நின்று திரும்பி பார்த்தான்.


              பக்கத்தில் வந்த கணேஷ் "உங்க ஐடி கார்டு கீழே விழுந்துருச்சு இந்தாங்க என்றவன் ஏன் சார் நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க இவ்வளவு படிச்சுட்டு இந்த வேலை பார்க்குறீங்களே உங்களுக்கு கஷ்டமா இல்லையா?" என்றான்.

             அந்த இளைஞன் மெல்ல சிரித்தப்படி பேசலானான் "என்ன சார் செய்யுறது படிச்ச நமக்கெல்லாம் எங்க வேலை கிடைக்குது வேலை கிடைக்கனும்னு கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினாலும் வருடங்கள்தான் ஓடுதே தவிர வேலை கிடைச்சபாடில்ல... அதனாலஇந்த வேலையை செய்யுறேன் என்ன நம்பி மூனு தங்கச்சி வயசனா அம்மா இவங்கள காப்பாத்துற பொறுப்பு எனக்கு இருக்கு இதை வித்தா தினமும் இருநூறு ரூபா தருவாங்க அதை வைச்சி என் குடும்பத்தை காப்பத்த முடியுது. அதைவிட உழைச்சு சம்பாதிக்கிறோம்னு மனசுக்கு திருப்தி "இந்த வேலையை மட்டும் செய்யல அப்பப்ப இன்டர்வியுக்கு போயிட்டுதான் இருக்கேன் அதுக்கு உதவுறதே இந்த காசுதான் இதுலஎன்ன சார் கேவலம் இருக்கு என்றவன் நான் வர்றேன் சார்..." என்றுநடக்கலானான் அந்த இளைஞன்.

              அவன் அப்படி சொன்னதும் கணேஷ் சிந்திக்கலானான் நமக்கு ஏன் இந்த ஐடியா தோனாம போச்சு இத்தனை நாளா படிச்சுட்டோம்ங்கிற கர்வத்திலே வெட்டியா இருந்துட்டேன் பாவம் அம்மா என்று நினைத்தவன் வீட்டுக்குள் சென்றான்.

             "அம்மா... அம்மா... அந்த சாமான் வாங்குற பையை எடுங்க நான் போய் சாமான் வாங்கிட்டு வர்றேன் நீங்க கடையை பார்த்துங்குங்க என்றவன் இனிமே நீங்க கஷ்டபட வேண்டாம் கடையையும் நானே பார்த்துகிறேன் நீங்க போய் கடையை திறங்க இதோ வந்துர்றேன்... அப்புறம் நம்ம கடையை விரிவுபடுத்த லோன் கிடைக்குமான்னு பேங்க் மேனேஜரை பார்த்துட்டு வர்றேன்.என்றவனை வியப்போடு பார்த்து கொண்டிருந்தாள் கமலம்

              இந்த ஞானோதயம் எப்படி வந்தது எம்புள்ளைக்கு இனிமே எனக்கு கவலையில்லை கடவுள் கண்ண திறந்துட்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டால். அந்த கடவுள் வேற யாருமில்ல அந்த காபி பவுடர் விற்பனை செய்கிற அந்த இளைஞன் தான் என்று தெரியாது.

                                                                            ***முற்றும்***

ஸ்ரீசந்திரா

1 comment:

  1. நான்
    தொழில் முனைவோர் பயிற்சிக்கு சென்றிருந்தேன் அப்ப ஒரு இளைஞன் இந்த காபி
    பவுடரை விற்பனை செய்ய வந்தான் அப்ப அந்த ஐடி கார்டு என் காலருகே தான்
    விழுந்தது எடுத்து பார்த்தபோது உண்மையில் ஆச்சரியப்பட்டு போனேன் அப்ப
    எழுதப்பட்ட கதை இது. உடனை அதை இலங்கை வானொலிக்கு எழுதி அனுப்பினேன் வானொலி
    மலர் என்ற நிகழ்ச்சியில் சிறுகதை நேரத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

    ReplyDelete