Wednesday 18 July 2018

ஆயுதம் ஏந்துவோம்

பெண்கள் இரவில் தனியாக செல்ல வேண்டாம்

முகநூலில் புகைப்படம் வைக்க வேண்டாம்

தெரியாத ஆண்களோடு பேச வேண்டாம்

உங்களுடைய சுய விவரங்களை தெரியாத நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்

வெளியில் செல்லும் போது நகைகள் அணிய வேண்டாம்


உடலை சுத்தமாக மறைக்கும் சுடிதார் (துப்பட்டா இல்லாமல்) அணிய வேண்டாம்

ஆட்டோவில் தனியாக பயணம் செய்ய வேண்டாம்

இரயிலில் பயணம் செய்ய வேண்டாம்

கோவிலுக்கு அடிக்கடி செல்ல வேண்டாம்

ஒரே பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம்

இவ்வளவு ஏன் சிறு பெண் குழந்தைகள் பக்கத்து வீட்டு அண்ணா, மாமா கூட பேச வேண்டாம் பழக வேண்டாம்

இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் பெண்கள்  ஏன் பத்திரமாக வாழவேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? இறைச்சிக்காக கோழியும் ஆடுகளும் வளர்க்கப்படுவது போல் இச்சைக்காக பெண்கள் வளர்க்கப்படுகிறார்களா?

ஓநாயும், தெரு நாயும் நரிகளும்  கழுகாய் சுற்றும் போது பெண் பெட்டைக் கோழியாய் ஏன் பதுங்க வேண்டும்?

இந்த உலகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியாத போது

மொத்தத்தில் இந்த உலகத்தில் பெண்களே வேண்டாமே

பெண்களே எந்த சூழ்நிலையிலும் தன்னை காக்க வேண்டுமெனில் ஒவ்வொரு வீட்டிலும் ஆண் எதற்கு? நமக்கு தேவையில்லாதவற்றை எரித்து சாம்பலாக்க வேண்டும்.

திருந்த வேண்டியது யார்???? யாரால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது??? திருந்த வேண்டியவர்கள் திருந்தாமல் பெண்கள் சரியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வதும், அடக்குவதும் என்ன நியாயம்? இது அடக்குமுறை இல்லையா

பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று சர்வே சொல்கிறது. பெண்கள் தன்னை காத்துக்கொள்ள இந்திய அரசு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏன் துப்பாக்கி கொடுக்க கூடாது? யாரின் உதவியும் இல்லாமல் அவள் தன்னை காத்துக்கொள்வாள். ஆண்களும் அத்துமீறி ஒரு பெண்ணை நெருங்க பயப்படுவான்.  நொடிக்கு ஒரு பெண்கள் எங்கேயோ பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிகொண்டுதான் இருக்கிறார்கள் எல்லா நேரத்திற்கும் அரசாங்கமோ பொதுமக்களோ காவல் காக்க முடியாது காவல் காக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.

பெண்கள் பற்களையும், நகத்தையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார் காந்தி ஆனால் இது நவீன உலகம் இந்த உலகத்தில் பெண்கள் பற்களையும் , நகத்தையும் நம்பி வெளிய போகமுடியாது. அவர்களுக்கு ஆயுதம் வேண்டும். அப்போதுதான் அவள் தைரியமாக வெளியே செல்ல முடியும். இன்று எங்கோ நடக்கும் கொடுமைகள் நாளை வீதிக்கு வீதி நடக்கும்.

முன்பு ஏதாவது கஷ்டம் என்றால் கோவிலுக்கு சென்று முறையிடுவார்கள் ஆனால் இன்று கோவில்களிலே பாலியல் வன்முறை நடக்கிறது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றார்கள் ஆனால் ஆண்டவன் சன்னதிலே அநியாயம் நடக்கும் போது பெண்களுக்கு ஆயுதம் அவசியம் தேவை... 

2 comments: