Tuesday, 20 February 2018

பள்ளிப் பருவத்திலே (3)

                 மறுநாள் வழக்கம் போல் கிளாஸ்சுக்கு சுதா கிளம்பிக்கொண்டிருந்தாள். கலா அம்மா  வந்து சொன்னார் "சுதா இன்னைக்கு அவ வரலையாம் நாளைக்கு வர்றேன்னு சொன்னாள் நீ பொயிட்டு வந்திருது அவ என்னமோ எதையோ பறிக்கொடுத்த மாதரி உம்னு அடைச்சு போயி இருக்கா இராத்திரி அவா அப்பா கூட என்னவோ கேட்டுப்பார்த்தார் ம்கூம்.. அவ அசரலையே ... " என்றார்.



              சுதா ம்... போட்டபடி சரி எப்ப வேணா வரட்டும் எனக்கென்ன என்றபடி நகர்ந்து சென்றாள். சுதாவுக்கு இது நல்ல சான்ஸ் ஏன்னா வள்ளிக்கு அப்ளிக்கேஷன் வாங்கிட்டு வந்திரலாம் கலா கூட போக முடியாது எதுக்கு வம்பு இன்னைக்கே வாங்கிற வேண்டியதுதான் என நினைத்தபடி சென்றாள். அது போல் கிளாஸ் முடிந்ததும் தேவையான பணத்தைக் கட்டி அப்ளிக்கேஷன் வாங்கி வந்து விட்டாள் மதியம் வள்ளி வரும் போது சப்ரைஸ்சா கொடுத்திடனும். மதியம் சாப்பிடும் வரை வள்ளி வரவில்லை வெளியே வந்து எட்டி எட்டி பார்த்தாள் வரவே இல்லை ஏமாற்றத்தோடு வந்து சோர்வாக அமர்ந்தாள். சிறிது நேரத்தில் வள்ளி வருவது தெரிந்தது. வள்ளியை கண்டதும் சுதாவின் கண்கள் பிரகாசமானது "வாங்க... வாங்க... உங்களை எதிர்பார்த்துட்டு இருந்தேன்.." என்றாள்.

              "என்ன ஏதாவது ஸ்பெஷலா சமையல் பண்ணுனியா"

                "இல்ல.. உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் " என்றபடி ஒரு பேப்பரை நீட்டினாள்...சுதா.

                 "வள்ளி வாங்கி அதை பார்த்துவிட்டு சந்தோஷத்தில் குதித்தாள். ரொம்ப தேங்க்ஸ் சுதா.. எங்கண்ணே இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க, ஆனால் நீ நான் சொன்னதை மனசுல வைச்சு வாங்கிட்டு வந்திருக்கே. நீ ஏதோ சும்மா சொல்றேன்னு நினைச்சேன் ஆனால் நிஜமாவே வாங்கிட்டு வந்துட்டே.. உண்மையிலே சொந்தகாரங்களை விட மத்தவங்கதான் நமக்கு அதிகமா உதவி செய்யுறாங்க என்று கண் கலங்கியது. சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க என்னோட கல்யாண செலவை நானேதான் பார்த்துக்கிட்டேன் எங்கண்ணே ரெண்டு பேரும் பேருக்கு சும்மா வந்து நின்னாங்க இப்பவரைக்கும் ஒரு பைசா செலவு செஞ்சது கிடையாது. எங்க வீட்டுக்கு ஏதாவது வேலை செய்தா கூட எங்க அண்ணனுக்கு நான் பணம் கொடுத்திருவேன் நமக்கு யாரும் சும்மா செய்ய வேண்டாம்...னு நினைப்பேன் எங்கண்ணனும் ஒன்னுமே சொல்லாம வாங்கிக்கும் எங்கண்ணி வாய் பொல்லாதது எங்கண்ணனை பிடிங்கி எடுத்துரும் அதான் நான் பணம் கொடுத்திருவேன் என்று படபடவென்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தது.

             சுதாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை "சரி சரி விடுங்க எல்லா வீட்டிலையும் இப்படிதான் இருக்கு எங்கண்ணே மட்டும் எப்படி இப்படி தான் வீட்டுக்கு வீடு வாசல்படி என்ன பண்றது நாம பொறந்த நேரம் அப்படி.."

              "நம்மக்கூட இருக்கிறவங்கெல்லாம் இப்படிதான் போல சரி நான் போய் இதை பில்அப் பண்ணி கொண்டு வர்றேன் எங்க கலாவை காணும்"

                 "அது அவங்க வீட்டுல ஏதோ வேலையா இருக்கு"

                  "சரி நான் போறேன்" என்றபடி வேகமாக ஓடியது.

                 சுதா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வள்ளியை மனதில் வைத்து சில சினிமா பாடல்களை தேர்வு செய்தாள். அந்த ஒவ்வொரு பாடலுக்கும் வள்ளியின் நினைவுகளை அதில் பொருத்தமாக சேர்த்து ஒரு கதை மாதிரி எழுதினாள். ஒரு முறை அதை வாசித்து பார்த்தாள் படிக்கும் போதே உருக்கமான ஒரு கதையை சொன்னது. கடைசியில் இப்படிக்கு என்ற இடத்தில் வள்ளி என்று எழுதி முடித்தாள். ம்.. நல்லாதான் எழுதி இருக்கோம் ஆனால் நம் பிரதியை சேர்த்துக்கொள்வார்களா எத்தனையோ பிரதி போகுது என நினைத்தவள்  இதை எந்த அறிவிப்பாளருக்கு அனுப்பலாம் என யோசித்தாள். ம்.... முத்தையா ஜெகன் மோகனுக்கு அனுப்பலாம் அவர்தான் நல்லா ஜாலியா கதைப்பார்... ஆனால் நம்மாள் வாசிச்சா ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் நேயர் அரங்க நிகழ்ச்சிக்கு அவங்க வர்றது இல்லையே அப்பறம் எப்படி சரி இவருக்கே அனுப்புவோம் என்று கடகடவென்று கவரில் பெறுநர் முகவரியில் இலங்கை வானொலியின் முகவரியை எழுதிவிட்டு அனுப்புநர் முகவரியில்  வள்ளியின் முகவரியை எழுதி கவருக்குள் போட்டு ஒட்டினாள். இது வள்ளிக்கே தெரியாது ஒரு சப்ரைஸ்சா இருக்கட்டும்  அடுத்து சுதா பெயரிலே அவளுக்கு பிடித்த பாடல்களில் எட்டு பாடல்களை தேர்வு செய்தாள்.. அதில் ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமாக கவிதையை எழுதினாள். இப்போதுதான்முதல் முறையாக கவிதை எழுதுகிறாள் அதை திரும்ப ஒரு முறை படித்துப் பார்த்தாள் ம்... நல்லாதான் இருக்கு நாமலா இப்படி எழுதினோம்  பரவாயில்லையே நமக்கும் எழுத வருது. என மனசுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள் இப்பதானே முதன் முதலா எழுதுறோம் தவறுகள் ஏதாவது இருந்தால் இனிமேல் திருத்திக்கொள்வோம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள். நாளை இதை போஸ்ட் செய்து விட வேண்டும் என்று பத்திரமாக நோட்புக்கில் பத்திரப்படுத்தினாள்.

                பிறகு வெளியே வந்து எங்கே கலாவை இன்னும் காணும் மூச்சுக்கு மூனுதடை வரும் இப்ப இன்னும் வரல ஓ.... மேடத்துக்கு இன்னும் ரோசம் இருக்கு போல கலா வராதது ஒருவகையில் நல்லதுதான் இன்னைக்கு ப்ரியா ரெண்டு வேலை பார்க்க முடிஞ்சுது இல்லன்னா வெட்டியா கதை பேசிட்டுதான் இருப்போம். என நினைத்துக்கொண்டே சமைக்கத் தொடங்கினாள். வெளியே யாரோ வந்திருப்பது போல தோன்ற எட்டிப்பார்த்தாள் கலா வந்து அங்கே ஓரமாக உட்கார்ந்திருந்தாள் சுதாதான் பேச்சை தொடங்கினாள். "என்ன கலா இன்னைக்கு லீவு போட்டுட்டே... அடுத்த மாசம் எக்ஸ்சாம் வருதான் ரம்யா அக்கா எக்ஸ்சாம் பீஸ் நாளைக்கு கொண்டு வர சொன்னாங்க உங்கம்மாகிட்ட சொல்லிரு. இவ்வளவு நேரம் காணும் எங்க போனே..."

              "ம்... இப்பாவது உனக்கு கேட்கனும் தோணுச்சே... நானும் நீ எங்க வீட்டுக்கு  வருவே வருவேன்னு பார்த்தேன் நீ எட்டிக்கூட பார்க்கலையே... நான் செத்துப் போனா கூட வரமாட்டே போலிருக்கே... அதான் உனக்கு புதுசா ப்ரண்ட் கிடைச்சாச்சே... எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குமா என்ன என் மனசுதான் கேட்கவே மாட்டேங்குது இருந்திருந்து பார்த்துட்டு ஓடி வந்துட்டேன் எங்கே அது பேச்சுக்குரல் கேட்டுச்சே வந்துச்சா... ம்.. வராம இருக்காதே என படபடவென பொரிந்து தள்ளினாள்.

              "சரி கலா அதை விடு நமக்கு இன்னும் ஒரு வாரத்தில் ப்ளஸ் டூ ரிசல்ட் வருதாம் ரொம்பவே பயமா இருக்கு நான் மீனாட்சி சந்திரசேகரன் காலேஜ்ல சேரப்போறேன் நீ எங்க படிக்கப் போறே..,"

             "எங்கம்மாகிட்ட நீ பேசுறீயா என்னை மேல படிக்க வைக்காது போல அதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..."

                 "சரி.. ரிசல்ட் வரட்டும் பேசிப் பார்ப்போம் அப்படி படிக்க வைக்கலன்னா கவலைப்படாதே என்ன.. கரஸ்சுல மேல படிக்கலாம் பீஸ் கம்மியாதான் வரும் வீட்டில் இருந்தே படிக்கலாம் நிறைய பேர் அப்படிதான் படிக்கிறாங்க நம்ம டீச்சர் கூட அப்படிதானே படிச்சதா சொன்னாங்க " என்று கலாவை ஆறுதல் படுத்தினாள் சுதா.

               நாட்கள் வாராமானது எதிர்பார்த்த ரிசல்ட்டும் வந்தது இருவருமே தேர்ச்சி பெற்று இருந்தனர். கலாவைவிட எழுபதைந்து மார்க் அதிகம் பெற்றிருந்தாள் சுதா. அதுக்கே கலாவின் அம்மா கலாவை திட்டி தீர்த்தார். சுதாவிற்கு மனசுக்குள் பெரிய சந்தோஷம் என்னவென்றால் கலாவைவிட எல்லா பாடத்திலும் அதிமாக மார்க் எடுத்ததுதான் அதிலும் ஒரு டீச்சர் எப்பவும் கலாவுக்கு அதிகமாகவே மார்க் போடுவாங்க ஆனால் பப்ளிக் எக்ஸ்சாமில் அந்த டீச்சர் பேப்பர் திருத்தவில்லை அதான் சுதாவுக்கு அதிக மார்க் கிடைத்து இருந்தது. மொத்த மதிப்பெண்கள்  எதிர்பார்த்தது வரவில்லை என்ற வருத்தம் இருந்தது க்ளாசில் மூன்றாவது மாணவியாக ஓரிரு மார்க் வித்தியாசத்தில் வந்ததது மிகவும் வருத்தமாகதான் இருந்தது. அப்புறம் சுதா மேலே படிக்க கல்லூரியில் சேர்ந்தாள் கலா படிக்கவில்லை வீட்டில் இருந்தாள் அவங்க அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவே இல்லை. தனியார் காலேஜ்ல சேர்க்க அவ்வளவு பணத்திற்கு எங்கே போவதென்று மறுத்துவிட்டார். கூடாவே சுதா அம்மாவிடம் வந்து எதுக்கு உங்க சுதாவை படிக்க வைக்கிறீங்க அந்த பணத்தை சேர்த்து வைச்சா கல்யாணம் பண்ணலாம். உங்கப்பொண்ணு போறான்னு இவளும் படிக்கப் போறேன்னு அழுறா நம்ம தகுதிக்கு முடியுமா? படிச்சு என்ன பண்ண போறா கடைசியில எவன் வீட்டிலையோ பானையும் சட்டியும்தானே கழுவ போறதுன்னு சுதா அம்மாவின் மனசை கலைக்கப் பார்தார். ஆனால் சுதா பிடிவாதமாக மறுத்து நான் படிச்சே தீருவேன்னு ஒத்தகாலில் நின்னு காலேஜ்சில் சேர்ந்துவிட்டாள். கூடவே டைப்ரைட்டிங் கிளாஸ்சுக்கும் போய் தேர்வெழுதி தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றாள். கலா இரண்டிலும் தோல்வியுற்றாள் அதன் பிறகு மேற்கொண்டு படிக்க அனுப்பவில்லை. கலா கொஞ்ச நாள் உம்மென்று இருந்தது பிறகு நாட்கள் செல்ல செல்ல  ஒருவழியா சமாதானம் ஆகிவிட்டது. சுதா கல்லூரிக்கு போகும் போது தன்னோட சேமிப்பில் இருந்து தினமும் கலா காசு கொடுத்தனுப்பும் ஏதாவது வாங்கிக்க என்று அதை சுதா என்ன செய்வாள் வள்ளி தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி கலாவுக்கு தெரியாமல் கொடுத்து வந்தாள் சுதா.


                சுதாவுக்கு மதியம் வரைதான் காலேஜ் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவாள். வீட்டுக்கும் போது கலா அங்கே இருப்பாள் சுதாவின் துணிகளை எல்லாம் அழகாக மடித்து வைத்திருப்பாள் சுதாவின் அம்மா இதெல்லாம் ஏன் கலா நீ செய்யுறேன்னு கேட்டால் "சும்மா இருங்கக்கா இதில் என்ன இருக்கு சுதா காலேஜ்க்கு போகுது பாவம்  நான் சும்மா தானே இருக்கேன்னு" சொல்லி எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்வாள் அந்தளவிற்கு கலாவுக்கு அளவில்லாத பாசம். ஒவ்வொரு புதுப்படம் வந்ததும் படம் பார்க்க சென்று விடுவார்கள் அதே போல் கோவில் குளம் எல்லாம் இடங்களுக்கும் இணை பிரியாமல் சென்றார்கள். ஆனால் அவர்கள் நட்பில் இவ்வளவு சீக்கிரம் பிரிவு வருமென்று இருவரும் எதிர்பார்க்கவில்லை.

                 கலா வேகமாக சுதா வீட்டிற்கு வந்தாள் சுதா அப்போதுதான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தாள். "என்ன கலா இவ்வளவு வேகமா வர்றே..."

               "என்னைய நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்.." தரையை பார்த்து குனிந்தபடி சொன்னாள்.

                "ஏ.. என்ன சொல்றே நிஜமாவா..?"

                "ஆமா.. நாளைக்கு நான் எங்க மாமா வீட்டுக்கு போறேன் அங்க வைச்சு பேசி முடிக்கிறாங்களாம் "கொஞ்சம் வெட்கம் கலந்து சொன்னாள்.

                 சுதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது இத்தனை நாள் கூடவே இருந்த போது தெரியல இப்ப ஏதோ ஒன்றை இழந்த உணர்வு ஏற்பட்டது அதைக் காட்டிக்கொள்ளாமல்.. நீ மாப்பிள்ளைய பார்த்தியா உனக்கு பிடிச்சிருக்கா?

              "மாப்பிள்ளைய நான் பார்க்கல ஆனால் என்னைய அவங்க பார்த்து இருக்காங்களாம். அவர் சென்னையில் இருக்கார் அவரோட மாமாதான் எல்லாம் எடுத்துச்சொல்லி பேசி முடிச்சாறாம்.காலையில் அவர் எங்காத்துக்கு வந்து விவரமா சொன்னார்..."

                "நீ அதுக்கு என்ன சொன்னே.."

               "நான் என்ன சொல்ல முடியும் அவங்க இஷ்டம்னு சொல்லிட்டேன்.."

               "எ...ன்...ன...து ஓகே சொல்லிட்டியா..."

              "ஆமா மேல படிக்கவும் வைக்கல அப்புறம் நாம எதுக்கு வெட்டியா வீட்டுல உட்கார்ந்து தெண்டமா.. இருக்கனும் சொல்லு.."

               சுதா அதிர்ச்சியாக பார்த்தாள் அவளால் நம்ப கூட முடியவில்லை கலாவா இப்படி பேசுதுன்னு.. "கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகுமே நகையெல்லாம் நிறைய போடனுமே..."

             "அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே பார்த்துப்பாங்களாம் ஒரு நகையும் வேண்டாம்மாம் அவங்களே நகை போட்டு கட்டிட்டு போறாங்களாம் கல்யாண செலவு கூட அவங்களே பார்த்துகிறாங்களாம் அதான் நானும் ஓகே சொல்லிட்டேன்.."

                "ஏ... லூசு மாதிரி உளறாதே இந்த காலத்தில் யாராவது எதுவும் வேணான்னு சொல்வாங்களா..? அவங்க சென்னையின்னு வேற சொல்றே உன்னை ஏமாத்திட போறாங்க இல்ல அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கப் போகுது இவ்வளவு தூரத்தில வந்து பார்க்கிறது ரொம்ப கஷ்டம் நல்லா யோசித்து முடிவு பண்ணிக்க சொல்லிட்டேன் உன்னோட நல்லதுக்குதான் சொல்றேன் அப்புறம் உன்னோட இஷ்டம்.."

            "பார்ப்போம் நாளைக்குத்தான் எல்லாம் தெரியும்.."

            "உன்னை பயமுறுத்த நான் இதை சொல்லல ஏன்னா பத்திரிக்கை நியூஸ்ல எல்லாம் இப்ப இப்படிதான் ஏமாற்றி கல்யாணம் பண்றதா சொல்றாங்க அதுக்குதான் பயமா இருக்கு உங்கம்மா சொல்றாங்கன்னு நீ யோசிக்காம முடிவு எடுக்காதே.."

                இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வள்ளி வந்தாள். "என்ன ரெண்டு பேரும் தீவிராம எதையோ பேசிட்டு இருக்கிறீங்க.."

              "கலாவுக்கு கல்யாணமாம் நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம் அதான் பேசிட்டு இருக்கோம்.." சுதா சொன்னாள்.

            "அடடடே.... நல்ல விஷயம்தான் என்ன கலா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சுருக்கா.. மாப்பிள்ளை என்ன செய்யுறார்.." வள்ளி கேள்வியா கேட்டாள்.

             "கலாவிற்கு வெட்கம் தாங்கவில்லை சிரித்தபடியே சொன்னாள் சொந்த ஊர் திரு்ச்சியாம் ரொம்ப வருஷத்திற்கு முன்னாடியே சென்னைக்கு போய்ட்டாங்களாம். மாப்பிள்ளைக்கு ஒரு தங்கச்சியும் அண்ணனுமாம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணியாச்சு நல்ல வசதியாம் நல்ல குடும்பமாம் ஒரு பிரச்சினையும் வராதுன்னு அவங்க மாமா வந்து சொல்லிட்டு போனார். நானும் சம்மதம் சொல்லிட்டேன்.."

             "சரி..சரி.. நல்ல முடிவுதான் எடுத்திருக்கே வீட்டில் இருந்து என்ன செய்யப்போறே... அவங்களும் வரதட்சணை எதுவும் வேண்டாம்னு வேற சொல்றாங்க அப்புறம் இதைவிட வேற நல்ல சம்மந்தம் கிடைக்காது அதோட முதல் வரன் வேண்டாம்னு மறுத்தா அப்புறம் தள்ளிட்டே போகும்.. இப்பவே கல்யாண கலை வந்திருச்சே... "என்று சொல்லி சிரித்தாள் வள்ளி.

                  ஆனால் சுதாவுக்கோ பெரிய கவலை ஏற்பட்டது கல்யாணம் ஆகிவிட்டால் கலா தூரமா போயிடும் இல்ல அடிக்கடி என்னையே சுத்திட்டு இருக்கும் இப்ப அங்கே போயிட்டால் நாம பார்க்க முடியாது பேச முடியாதே சென்னைக்கு போறதுக்கு ஒரு நாள் ஆகும். அப்படி இப்படி என்று மனசுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது..

               சுதாவின் சிந்தனையை கலைத்தது வள்ளியின் குரல்.. "என்ன சுதா இப்பவே உனக்கு கவலை வந்திருச்சு போல என்ன பண்றது பொண்ணுன்னா ரொம்ப நாளைக்கு ஒரே இடத்தில இருக்க முடியாது நாளை உனக்கும் இதே நிலைதான் இதான் வாழ்க்கை.." என்றாள் வள்ளி.

             "அட நீங்க வேற நான் கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டேன்.. எங்கம்மாவை விட்டு நான் போகமாட்டேன்.."

              "சும்மா.. உளறாதே.. அப்படியெல்லாம் பெண்கள் இருக்க முடியாது நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க அதோட அம்மா எத்தனை காலத்துக்கு உன் கூட இருக்க முடியும் உனக்குன்னு ஒரு துணை வேண்டாம்மா.. இப்ப இப்படி சொல்ற நாளைக்கு பாரு இடுப்புல ஒன்னு கையில ஒன்னு இருக்கும்.. என்ன கலா நான் சொல்றது சரிதானே.. "

                 இல்லக்கா சுதா ஸ்கூல்ல படிக்கும் போதும் அப்படிதான் சொல்லிட்டு இருக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ஆசிரமம் வைக்கப்போறேன்னு சொல்லும்.. சத்தியம் கூட பண்ணிருக்கு.."

             "ஏய்.. கலா சொல்றது எல்லாம் உண்மையா நீ ஏதோ விளையாட்டுத்தனமா சொல்றேன்னு நினைச்சேன் சீரியஸ்சாவே முடிவே பண்ணிட்டியா..." நம்ப முடியாம கேட்டாள் வள்ளி.

                "ஆமா.. கலா சொல்றது உண்மைதான் எனக்கு கல்யாணம் பண்றதுல்ல விருப்பம் இல்ல ஏனோ பிடிக்கல ஒரு ஆசிரமம் வைக்கனும்னு எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு கல்யாணம் பண்ணி சராசரி பொண்ணா வாழ எனக்கு விருப்பம் இல்ல ஏதாவது வித்தியாசமா செய்யனும். மத்தங்க செய்யுற ஒன்னு நாம செய்யக்கூடாது. பேப்பர்ல நிறைய கட்டிங்ஸ் வைச்சிருக்கேன் பாருங்க ஆசிரமங்கள் பத்தின டீட்டல்ஸ்தான் அங்கே போய் சேர எனக்கு ஆசை  ஆனால் கொஞ்சம் பயமா இருக்கு அதெல்லாம் நம்பிக்கையா இருக்குமான்னு தெரியல... நேத்துக்கூட ஒரு ஆசிரமத்தில் சாமியார் ஏதோ தப்பா நடந்துகிட்டாருன்னு போலிஸ் கைது பண்ணியிருக்காமே அதை நினைச்சா பக்னு இருக்கு " ஏதெதோ சொல்லிக்கொண்டே போனாள் சுதா.

              வள்ளிக்கு நம்பவே முடியவில்லை சுதாவின் மனசுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருக்குமென்று. ஏனெனில் அதே மனநிலையில்தான் கிட்டதட்ட வள்ளியும் இருக்கிறாள். "சுதா அப்ப நானும் உன் கூட வர்றேன் ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம் சாரதா சக்தி பீடத்தில் ஏற்கனவே நான் ரெண்டு அப்ளிக்கேஷன் வாங்கி வைச்சிருக்கேன். நீ எப்ப போறியோ அப்ப என்னையும் கூப்பிடு என்னடி சிரிக்கிற நிஜமாதான் சொல்றேன் பொய்யில்லை அந்த அப்ளிக்கேஷன் வீட்டுல இருக்கு நாளைக்கு எடுத்துட்டு வர்றேன்..பாரு. என்றாள்

               " நீங்க ஏன் வர்றீங்க நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிகோங்க அம்மாகிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்கேன்.."

                 "இனிமே அதைபத்தி பேசாதே இனிமே எனக்கு அது வேண்டாம் நான் இப்பதான் நிம்மதியா இருக்கேன்... அது போதும் எனக்கு ஆளைவிடு.. பண்ண வேண்டிய நீயே வேண்டாம்னு சொல்றே இதில் நான் வேற பண்ணிக்கனும்மா அடி வாங்கப் போறே பாரு... நீ அம்மாவை மிரட்டிட்டு உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிற நீ சரிபட்டு வரமாட்டே.. இப்ப எனக்கு பேச  நேரம் இல்ல இரு.. இரு நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்" என்றபடி ஹாஸ்பிட்டலுக்கு ஓடினாள் வள்ளி. கலாவும் நானும் போறேன் என்றபடி சென்றாள்.

               வள்ளியின் சின்ன மிரட்டல் செல்ல கோபம் சுதாவுக்கு கொஞ்சம் பிடித்து போனது எப்போதும் நமக்கு பிடித்தவர்கள் செல்லமாக திட்டுவதோ அடிப்பதோ பிடிக்கும் உள்ளுக்குள் ரசிப்போம் அதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அப்படிதான் சுதாவுக்கும் இருந்தது.  வள்ளிக்கு எந்தளவிற்கு சுதா மீது பாசம் என்று கணிக்க முடியவில்லை ஏனெனில் வள்ளி ஒரு புரியாத புதிராக இருந்தாள் கலகலவென்று பேசுவாள், மனதில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்துகொள்வாள், எந்த கூச்சமும் இன்றி வீட்டில் உள்ள ஒருவர் போல் வந்து சாப்பிடுவாள் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க மாட்டாள் இதெல்லாம் வைத்து பாசமென்றோ அன்பென்றோ நினைக்க முடியவில்லை சுதாவுக்கு சிலரை ஈசியாக புரிந்துகொள்ள முடியும் கலாவை இவளால் புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் வள்ளியை அந்தளவுக்கு புரிந்துகொள்ள சுதாவுக்கு கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. இருந்த போதிலும் வள்ளியின் மீது ஏதோ ஈர்ப்பு இருந்தது. எதுவும் நம் கூட இருந்தால் நாம் அதை கண்டுகொள்ளமாட்டோம் கொஞ்சம் தூரத்தில் இருந்தால் அது நமக்கு ஒரு ஆவலை ஏற்படுத்தும் அந்த ஒரு விடையம் தான் இவர்கள் மூவரிடம் இருந்தது.

                 மறுநாள் மாலை கலா ரொம்ப சந்தோஷமாக வந்தாள்.. "என்ன கலா ரொம்ப ஹேப்பியா இருக்கே.. என்ன செட் ஆகிருச்சா மாப்பிள்ளை போட்டோ பார்த்தியா..? எப்படி இருக்கார் போட்டோ இருக்கா எங்கே காட்டு என்று ஆவலாக கேட்டாள்" வராத சந்தோஷத்தை வரவழைத்துக்கொண்டு.

              "ம்.. பார்த்தேன்... வீட்டில் எல்லோருக்கும் பிடிச்சிருக்கும் நானும் ஓகே சொல்லிட்டேன்.. இந்தா போட்டோ பாரு"

                 "சுதா அவளிடம் இருந்த போட்டோவை பக்கென்ற மனதோடு வாங்கி மெல்ல திருப்பி பார்த்தாள்.. அப்படியே ஷாக் ஆகிப்போனாள்.. போட்டோவில் மாப்பிள்ளை நீளமான முடியோடு பெரிய கொண்டை போட்டு இருந்தார் முகத்தில் அடர்ந்தாடி நிறமும் கருப்பு.. கலாவைவிட வயது அதிகம் பதினைந்து இருபது வயது அதிகம் போல் இருந்தது.. சுதாவுக்கு பார்த்த உடனே பிடிக்கவில்லை அதே முகச்சுழிப்போடு "என்ன கலா போட்டோவை பார்த்தும்மா நீ ஓகே சொன்னே.. "

              "ஆமா.. எதுவுமே வேணான்னு சொல்றாங்க எங்கூட போன்ல பேசினார் நல்லாதான் பேசுறார்"

                 "அவருக்கு ரொம்ப வயசு கூடின மாதிரி இருக்கு இந்த போட்டோ கூட இப்ப எடுத்தது கிடையாது பழைய போட்டோ மாதிரி இருக்கு உனக்கு இப்ப பதினெட்டு வயசுதான் ஆகுது நீ அவர் பக்கத்துல கொசு மாதிரி நிற்பே.. அதோட அவர் கருப்பு வேற டோட்டலா அவரு பாக்கிஸ்தான் தீவிரவாதி மாதிரியே இருக்கார்... உனக்கு நிஜமாவே பிடிச்சு இருக்கா"

                 " ம்.. பிடிச்சுருக்கு உருவம் கருப்பா இருந்தா என்ன உள்ளம்தான் கருப்பா இருக்க கூடாது.."

                  "ஏய்... கலா நீயா இப்படி பேசுறே ரொம்ப தெளிவா பேசுறே... முன்னாடி நான் வெள்ளைக் காக்கா மல்லாக்க பறக்குதுன்னு சொன்னா நம்பி வானத்தை பார்ப்பே இப்ப ம்.. ரொம்ப மாறிட்டே கலா.. உங்கம்மா உன்னை பேசி.. பேசி மாற்றி இருக்காங்க சரி அது உன் விருப்பம்.. "என்றாள் மனம் சோர்ந்து.

               "ஏன் உனக்கு பிடிக்கலையா... "

                " எனக்கு பிடிச்சா என்ன பிடிக்கலன்னா என்ன உனக்கு பிடிச்சிருக்கில்ல.."

                   " அவருக்கு நம்மளபத்தி நிறைய தெரிஞ்சு இருக்கு நம்ம ரெண்டு பேரும் திக் ப்ரண்ஸ்னும் நான் எப்போதும் உங்க வீட்டுலதான் இருப்பேன்னும் அவருக்கு தெரியுமாம் ஒரு நாள் நம்ம ரெண்டு பேரையும் பார்த்து இருக்கார்.. இன்னும் நிறைய விஷயம் சொல்றார் .. நான் அப்படியே அதிர்ச்சியாயிட்டேன் அவர் சொல்ல.. சொல்ல.. "

                " நம்பள பத்தி அவருக்கு எப்படி தெரியும்' வியப்பா கேட்டாள் சுதா.

                 " அவரோட மாமாதான் எல்லாவற்றையும் சொல்லி இருக்கார் அதிலே அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம் அப்புறம் உன் பேரைக்கூட அவர் கரெக்டா சொல்றார் தெரியுமா? "

                      " சரி கலா உனக்கு பிடிச்சிருக்கில்ல அது போதும் பரவாயில்லையே ரொம்ப நேரம் பேசி இருக்குறீங்க போல.."

         "ஆமா ரொம்ப நேரம் பேசினார் அவருக்கு வர ரொம்ப ஆசையாம் ஆனால் லீவு கிடைக்கலையாம் அதான் வரமுடியலை என்னை பார்க்க முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டார்.." என்றாள் சிரித்தபடி

            " ஓ.... அந்தளவுக்கு வந்தாச்சா... சரி எப்ப கல்யாணம்... இப்பவே கனவு காண ஆரம்பிச்சிட்டே போலிருக்கே.." என்று கிண்டலடித்தாள்.

              "அடுத்த மாசம் ஐப்பசி கடைசில கல்யாணம் வைச்சு இருக்காங்க நீ கண்டிப்பா வரணும்.."

                 "ம்.... அப்ப பார்ப்போம்.. " என்றாள் சலிப்போடு.

                 சுதாவுக்கு இப்போது ரொம்ப மனசுக்குள் வருத்தம் ஏனெனில் கலாவிடம் அவள் அன்பை காட்டியது இல்லை எங்கே போனாலும் சேர்ந்தே போவது வருவது இணைபிரியாத வண்டி மாடு மாதிரி திரிந்தவர்கள் நிறைய பேர் கேட்டு இருக்கிறார்கள் ஒரே மாதிரி ட்ரெஸ் எங்கே போனாலும் ஒன்னாவே அப்படியே ஒரே ஆளை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கிண்டலடித்தும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் சுதாவுக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை சும்மா சிரித்துவிட்டு வந்திருக்கிறாள். இப்போது ஏனோ சுதாவுக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது அதை வெளியே காட்டிக்கொள்ளவும் முடியவில்லை. இது கலா மீதுள்ள அன்பா இல்லை இனிமே அது இங்கே இருக்காது அது கூட சண்டை போட முடியாது,  கதை பேச முடியாது என்ற கவலையா தெரியவில்லை ஆனால் சொல்ல முடியாத வருத்தம் சுதைவை வாட்டியது என்னவோ உண்மை. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள் சுதா எப்போதும் எதையும் காட்டிக்கொண்டது இல்லை எல்லாவற்றையும் மனதில் போட்டு பூட்டி வைக்கும் ரகம் இவள் கூட இருப்பவர்கள் கூட இவள் மனதில் என்ன உள்ளது என்பது அறிவது கஷ்டம். அந்தளவிற்கு ஊமைக்கொட்டான் வெளியே சிரித்து பேசுவாள் தான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சிரிக்க வைப்பாள் ஆனால் அவளின் கஷ்டத்தை யாரிடமும் காட்டிக்கொள்ள மாட்டாள் முதலில் எந்த விஷயத்தையும் எத்தனை நெருக்கமாக பழகினாலும் பகிர்ந்துகொள்ள மாட்டாள். இவள் ஒரு தனி ரகம் ஆனால் இவளிடம் யார் ஒரு நொடி பேசினாலும் முதல் சந்திப்பிலே ஒன்றுவிடாமல் சொல்லிவிடுவார்கள். ஆனால் இவள் மனதில் என்ன ஆசை இருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு யாருக்கும் தெரியாது இவளும் சொல்ல மாட்டாள் யாரும் இவளிடம் கேட்டதும் இல்லை.

                கலா கல்யாண கனவுகளில் மூழ்கத்தொடங்கினால் சுதாவோ கவலையில் மூழ்கத்தொடங்கினாள். கல்யாண வேலைகளில் கலா அங்குமிங்கும் போக வேண்டிய சூழ்நிலை சொந்தகாரங்க வீட்டுக்கு விருந்துக்கு போவது அப்படி இப்படி என்று கலாவின் வருகை குறைந்து போனது சுதாவுக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தது கூடவே இருந்துவரை எதுவும் தெரியவில்லை இப்போது இவளுக்கு மனசு வலிக்கிறது. என்ன செய்வது எல்லாமே சில காலம் தான் எதுவும் நிரந்தரமில்லை என்று அவள் உணர்ந்திருந்த போதும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

               சுதாவின் அம்மா கலாவிடம் சொன்னாள்.. "கலா உனக்கு கல்யாணம்னு சொன்னவுடனே இதுக்கு ரொம்ப கவலை நீ போன பிறகு இதுக்குதான் கஷ்டமா இருக்கப் போகுது நீ அங்கே போனதும் எங்களை மறந்திறாதே.." என்றார்.

                "அட போங்கக்கா... நீங்க வேணா நான் இல்லன்னு கவலைப்படுவீங்க ஆனால் உங்க பொண்ணு என்னை நினைச்சுக்கூட பார்க்காது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. நான் இல்லன்னா என்ன அதுக்குத்தான் புது ப்ரண்ட் கிடைச்சாச்சே... அப்புறம் என்ன என்றாள் நக்கலாக சுதாவின் மனதை புரிந்துகொள்ளாமலே. நாட்கள் நெருங்கியது கல்யாண நாளும் வந்தது சுதாவால் திருமணத்திற்கு போக முடியவில்லை கலாவின் திருமணத்தின் அன்று சுதாவுக்கு யுனிவர்சிட்டி எக்ஸ்சாம் அவளால் போக முடியவில்லை. அது கலாவுக்கு பெரிய வருத்தமாக இருந்தது இரவுதான் கலாவை பார்த்தாள் ஏனோ கலாவை கண்டதும் மனதில் உள்ளவை கண்ணீரா பெருக்கெடுத்தது. கலாவின் மாமியார் வந்தது கலாவோட ப்ரண்ட் எங்கே அவா வந்திருக்கிறதா சொன்னாங்களே என்று தேடிக்கொண்டு வந்தார். நீ தான் அவளோட ப்ரண்டா கல்யாணத்துக்கூட வரமுடியாத ப்ரண்ட் என்ன ப்ரண்ட் என்றார். அவரின் மாமியார் அவரை போல் இல்ல நல்ல நிறமா நல்ல அழகோடு இருந்தார். சுதாவுக்கு அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அப்போது கலாவின் அம்மாதான் வந்து சமாளித்தார். அவளுக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான பரிட்சையாம் லீவு போட முடியாதாம் அதான் அவ வரல என்று சமாளித்தார். சிறிது நேரம் கலாவோடு பேசிட்டு இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் சுதா.

                 கலாவை அதன் பிறகு சுதா பார்க்கவே இல்லை கடிதங்கள் மட்டும் அவ்வப்போது வரும். அதில் அவளின் கணவர் பற்றி நல்லவிதமாக விவரமாக எழுந்தியிருந்தாள். சுதாவுக்கும் அப்போதுதான் நிம்மதியானது அவர் ரொம்ப நல்லவர் என்பதை அவளின் கடிதம்  உணர்த்தியது ஆளைப் பார்த்து தவறாக எடைப்போட்டு விட்டோம் என்று மனதிற்குள் வருந்தினாள் சுதா. அதன் பிறகு கலாவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனாள் ஆனால் கலா மறக்கவில்லை. கலாவின் பிரிவை வள்ளி ஈடு செய்தாள் சுதாவுக்கு வள்ளியின் மீது அதிகம் பிரியம் ஏற்பட்டது சில நாட்கள் வள்ளி சுதாவின் வீட்டிலே தங்கினாள். வள்ளிக்கு கொஞ்சம் பாசம் இருந்தது ஆனால் அதை அவ்வளவாக காட்டிக்கொள்ள மாட்டாள். கலா போன பிறகு விடுமுறை நாட்களில் வள்ளியும் சுதாவும் கோவிலுக்கு போவதற்கும் சினிமாவுக்கு கிளிம்பிடுவார்கள் . இப்படியே இவர்களின் நட்பு சந்தோஷமாக சென்றது ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும் போது வள்ளி சொன்ன வார்த்தை சுதாவின் மனதை என்னவோ செய்தது.. கார்த்திகை மாதம் நல்ல மழை பெய்தது புயலும் வீச போவதாக சொன்னார்கள். அப்போ வள்ளி சொன்னாள் " சுதா நீ வா நம்ம வீட்டுக்கு போவோம் இல்லன்னா நான் அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துர்றேன் புயலும் வெள்ளமும் வரப் போறாத சொல்றாங்க நாம எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து செத்துவோம் என்றாள். அந்த வார்த்தையை சுதா சற்றும் எதிர்பார்க்கவில்லை வள்ளியா இப்படி சொல்வது என ஆச்சரியப்பட்டு போனாள். ஏனெனில் வள்ளியின் பேச்சில் அன்போ பாசமோ தெரியாது. இப்போது வள்ளி அப்படி சொன்னதும். சுதாவுக்கு உள்ளுக்குள் பயங்கர சந்தோஷம் கூடவே இன்னும் அதீத அன்பு கூடியது நாட்களும் இனிமையாக சென்றது.

              சுதா காலேஜ் விட்டு வந்ததும் சாப்பிட்டுவிட்டு ரேடியோவை எடுத்து வைத்தாள் இன்று என்ன கிழமை வெள்ளி ஓ... இன்று முத்தையா ஜெகன் மோகன் வருவாரே என நினைத்தப்படி ரேடியோவை ஆன் செய்தாள். ஆனால் அவரின் குரல் இல்லாது வேர குரல் கேட்டது யார் என்று உற்று கவனித்தாள் அது அவளுக்கு பிடித்த அறிவிப்பாளர் அன்று கடமையில் அவளால் நம்மவே முடியவில்லை சந்தோஷம் தாங்க முடியவில்லை ஏனெனில் இந்த நிகழ்ச்சி அவர் வருவதில்லை. ஆனால் முதல் முறையாக வருகிறார்.. கூடவே ஒரு அறிவிப்பும் செய்தார் அதைக்கேட்டு இன்னும் சந்தோஷத்தில் குதித்தாள். காரணம் மூன்று மாதங்களுக்கு பிறகு அவள்  வள்ளி பெயரில் எழுதி அனுப்பிய பிரதி அவளுக்கு பிடித்த அறிவிப்பாளரின் கையில் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும். உடனே கேசட்டை தேடி எடுத்தாள் ரெக்கார்டு பட்டனை அழுத்திவிட்டு காதை இரண்டையும் இரு கைகளால் இறுக பொத்திக்கொண்டாள் 3.30 க்கு நேயர் அரங்கம் அதன் பிரத்தியேக இசையோடு தொடங்கியது. சுதாவின் மனசு படபடவென்று அடித்தது சிறு நடுக்கம் வேறு வந்து கொண்டே இருந்தது. இடையிடையே கைகளை லேசாக எடுத்து.. எடுத்து.. கேட்பதும். காதை மூடிக்கொள்வதுமாக இருந்தாள்.. அவளுக்கே ஏனோ வெட்கமும் கூச்சமும் வந்தது. தான் எழுதியதை தானே எப்படி கேட்பது என்ற ஒரு கூச்சம்.. நேயர் அரங்கத்தை அந்த அறிவிப்பாளர் மிக அழகாக வாசித்தார் அந்த பிரதிக்கு அவரின் குரல் உயிர் கொடுத்தது.. இடையிடையே அவர் பாராட்டவும் செய்தார் சுதா அப்படியே மெய் மறந்து போனாள். நாம் உண்மையிலே நன்றாக எழுதியிருக்கிறோமா.. அவளாலே நம்ம முடியவில்லை.. அவள் எதிர்பார்த்த அறிவிப்பாளரே வாசித்தது அவளுக்கு அத்தனை சந்தோஷம் நேயர் அரங்கம் சிறப்பாக முடிந்தது. அதையே நினைத்து சந்தோஷப்பட்டாள் உடனே பேப்பர் பேனாவை எடுத்து அந்த அறிவிப்பாளருக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதினாள். இதுநாள் வரை எப்படி எழுதுவது எதை வைத்து அவருக்கு கடிதம் எழுதுவது என்ற ஒரு தயக்கம் இருந்தது ஆனால் இப்போது இந்த நேயர் அரங்கத்தை சாக்காக வைத்து எழுதலாமே என்று துணிந்து எழுதினாள். அப்போது சுதாவுக்கு தெரியாது அது தொடர்கதையாக தொடரப்போகுதென்று....

                                         - தொடரும்

2 comments:

  1. நெகிழ வைப்பதோடு மகிழவும் வைக்கிறது... தொடரட்டும்...
    வாழ்த்துகள்

    ReplyDelete