Tuesday, 23 June 2015

மீட்டாத வீணை (சிறுகதை)

                   பட்டுக்கோட்டை நீதிமன்றம் உயரமான நெட்டிலிங்க மரங்கள் நடுவில் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெள்ளை வேஷ்டிகளும், கறுப்பு அங்கிகளுமாக தெரிந்தன. வாரத்தின் முதல்நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது, ஒரே கூச்சலும் இரைச்சலுமாக இருந்தது. அங்கே ஸ்கூட்டியில் வந்த இறங்கிய சுவாதி வண்டியை ஒரமாக பார்க் செய்து விட்டு சாவியை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தை ஒட்டிய தனது அலுவலக அறைக்குள் நுழைந்தாள். மாநிற தேகம், எடுப்பான தோற்றம், கம்பீரமான நடை கையில் கறுப்பு கோட்டு அவள் ஒரு அட்வகேட் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லியது.

                 "சரவணன்.. சரவணன்... வண்டியில என் பைல் இருக்கு எடுத்துட்டு வாங்க..."
                "வந்துட்டேன் மேடம்..." என்றபடி ஓடிபோய் பெட்டியை திறந்து பைலை எடுத்துக்கொண்டு "குட்மார்னிங் மேடம்..." என்றான் குமஸ்தா சரவணன்.
பதிலுக்கு வணக்கத்தை வைத்தவள் "நேற்று ஒரு பேமிலி வந்தாங்களே அபிராமி சுந்தர் அவங்க வந்திருக்காங்களா..?"

               "வந்திருக்காங்க மேடம்..."
                "அவங்கள உள்ள வரச்சொல்லுங்க..." என்றவள் அருகில் இருந்த பைலை புரட்டத் தொடங்கினாள். அப்போது உள்ளே வந்தார்கள் அபிராமியும், சுந்தரும். "வணக்கம் மேடம்" இருவரும் சேர்ந்தே வணக்கம் வைத்தார்கள்.

                தலையை உயர்த்தி நிமிர்ந்தவள் "வணக்கம் உட்காருங்க... நேத்து நான் சொன்னதை நல்லா யோச்சுப் பார்த்தீங்களா..! ரெண்டு பேரும் என்ன முடிவெடுத்திருக்கிறீங்க..?" இருவரையும் ஊடுறுவி பார்த்தப்படிக் கேட்டாள்.
                  
               சுந்தர் மெல்ல சொன்னான் "டைவர்ஸ் வாங்குறதுன்னு முடிவெடுத்துட்டோம் மேடம்! எனக்கும், அவளுக்கும் இனிமே ஒத்து வராது.. எங்கள பிரிச்சுவிட்டுறுங்க அதான் நல்லது"
சுவாதியின் பார்வை அபிராமியின் மேல் விழுந்தது. அபிராமி சின்ன தயக்கத்தோடு விரல்களை பிசைந்தபடி "ஆமா மேடம்! எங்களுக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்ல... பிரிச்சுவிட்டுறுங்க..."


                "சின்ன.. சின்ன.. மனவருத்தங்களுக்காக நிரந்தரமா பிரியுறேன்னு வந்து நிக்கிறீங்க... உங்களைப் பிரிச்சு வைக்கிறதுல்ல எனக்கொன்னும் கஷ்டமில்ல..! ஆனா டைவர்ஸ் கிடைக்க ஒரு வருஷம் ஆகும். இந்த அவகாசம் கூட அந்த காலக்கட்டத்தில் நீங்க செய்த தவறுகளை மறந்து மனசு மாறி ரெண்டு ஒன்னு சேர கோர்ட் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குது. ஆனால் நான் உங்களை சேர்த்து வைக்கனும்தான் நினைக்கிறேன் ஏன்னா உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அதைப் பற்றி யாராவது நினைச்சுப் பார்த்தீங்களா..?"

                   ரெண்டு பேரும் சேர்ந்தே பதில் சொன்னார்கள் "எங்க அம்மா அப்பா... பார்த்துப்பாங்க மேடம்!"

                    "ம்..ம்..ம்.. உங்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல, உங்களுக்கு ஒரு கதை ஒன்னு சொல்றேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு பேமிலி அடிக்கடி சண்டை போட்டுட்டே இருப்பாங்க ஒருநாள் ஊர் பெரியவங்களெல்லாம் சேர்ந்து அவங்கள பிரிச்சு வைச்சுட்டாங்க. அவங்களுக்கு ஒரு ஆணும், பெண்ணும் சிறுபிள்ளைகள் பையனுக்கு பத்து வயசு பொண்ணுக்கு ஒரு வயசு. பெண் குழந்தையை அம்மாவிடம் கொடுத்தாச்சு, ஆண்குழந்தை அப்பாவிடம். இருகுழந்தைகளும் தனித்தனியா வளர்ந்தாங்க. ஆனா வளர வளர அந்த குழந்தைகளுக்கு நிறைய ஏக்கம் மனசுல இருந்துச்சு. ஒரு சந்தோஷமான குடும்பத்தைப் பார்க்கும்போது நம்ம குடும்பம் இப்படி இல்லையேன்னு நிறைய வருத்தப்பட்டாங்க. பொண்ணுக்கு அப்பாவின் பாசம் கிடைக்கல ஆனால் தவறான விஷயம் மனசுல பதிஞ்சது ஆண்கள் எல்லாமே மோசக்காரங்க.. ஏமாத்துக்காரங்க.. ன்னு அடி மனசுல ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சு ஆண்கள் மீது ஒரு வெறுப்பை உண்டு பண்ணியது.

                     அந்தப் பெண்ணோட அப்பா குடிக்காரர் தினமும் குடிச்சுட்டு வந்து அடிச்சதாலதான் அவங்க பிரிந்து போனதா அம்மா அடிக்கடி சொன்னதைக் கேட்டு அப்பா மேல வெறுப்பு வந்துட்டு ஒட்டுமொத்த ஆண்களும் இப்படிதான்னு தவறான கருத்து மனசுல பதிஞ்சு போச்சு. அதன் விளைவு அந்தப் பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. அந்தப் பெண்ணோட அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பெண்ணை படிக்க வைச்சுட்டுட்டாங்க கை நிறைய சம்பாதிக்குது ஆனால் கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பம் இல்ல. இப்பவும் தனியாதான் இருக்கா அந்த மாதிரி ஒரு நிலமை உங்க குழந்தைகளுக்கு வரணுமா..? கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்தப்படி கேட்டாள். இவ்வளவு நேரம் மவுனமாக கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் கண்களிலும் கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தது. சுவாதி மேலும் தொடர்ந்தாள். "

                    "இது கதையில்ல நிஜம்! அந்தப் பெண் வேற யாரும் இல்ல நான்தான் , இதை நான் உங்ககிட்ட சொல்லனுங்கிற அவசியம் இல்ல. எனக்கு இது ஒரு கேஸ் நான் காச வாங்கிட்டு போயிடலாம், நீங்களும் சந்தோஷமா பிரிந்து தனித்தனியா வாழ்க்கையைத் தொடங்களாம். ஆனால், எந்த தவறுமே செய்யாத அந்த குழந்தைகள் ஏன் கஷ்டப்படனும்? ஏன் தண்டனை அனுபவிக்கனும்? உங்க ஆசைக்கு அவங்கள பெத்துட்டு அவங்க ஆசையில மண்ணை அள்ளி போடுறது என்ன நியாயம்? நீங்க போயிடுவீங்க அவங்க மனசுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வலி இருக்கும் தெரியுமா உங்களுக்கு? பலரோட கேள்விக்கு அவங்களால பதில் சொல்ல முடியாது தலைகுனிஞ்சு நிப்பாங்க... என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிப்பாங்க... பொய் சொல்லி உங்க மானத்தை அப்பவும் காப்பாத்த நினைப்பாங்க... அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தால் அதோட வலியை நீங்க உணருவீங்க. அவங்க இடத்துடல ஒரு நிமிஷம் நீங்க வாழ்ந்து பாருங்க உங்களுக்குப் புரியும். எனத் தொண்டை அடைக்க சொல்லிமுடித்தாள்.

                அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த இருவரும் "சாரி... மேடம்! நாங்க தெரியாமல் தப்பு பண்ண இருந்தோம். எங்கள அதிலிருந்து மீட்டுடிங்க ரொம்ப தேங்கஸ் மேடம் நாங்க சேர்ந்து வாழுறோம். எங்க மனுவை கேன்சல் பண்ணிருங்க மேடம்!"

                "அப்புறம்.. நாங்க வர்றோம் மேடம்" சிரித்தப்படி இருவரும் அறையைவிட்டு வெளியேறினார்கள். சுவாதி மெல்ல சிரித்தபடி நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டாள். மனசுக்கு நிறைவாக இருந்தது. அடுத்த பைலை புரட்டத் தொடங்கினாள் சுவாதி.
இதுபோன்ற பெற்றோர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளைகள்தான் எப்போது தண்டனை அனுபவிக்கிறார்கள் இந்த சுவாதியை போல்.

                                                                       //முற்றும்//
துவரங்குறிச்சி வீ. சந்திரா.

No comments:

Post a Comment