Sunday 20 June 2021

ஞாயிற்றுக்கிழமையும் மீன் குழம்பும்

 வாரத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மீன் குழம்பு வைக்கும் சம்பவம் இருக்கே...



"ஸ்ரீ... என்ன மீனு வாங்கிட்டு வந்தே.." லெட்சுமி அம்மா.


"ம்... கெண்டை மீன் தான் இருந்துச்சு உயிர் மீன் .."


"குளத்துக்கெண்டையா? வளர்ப்பு கெண்டையா? "


"குளத்துக்கெண்டை தான் நான் பார்த்துதான் வாங்கிட்டு வந்திருக்கேன்"


"ஆமா... வளர்ப்பு கெண்டையாதான் இருக்கும் உன்னைய ஏமாத்தி இருப்பாய்ங்க.."


"நானே பார்த்தேன்னு சொல்றேன் இல்ல குளத்துக்கெண்டைதான் வளர்ப்பு மீனுன்னா வயித்து பகுதி ஒரேதா கசக்கும் திண்ணு பார்த்துட்டு சொல்லு.."


ஸ்ரீ கடகடன்னு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொஞ்சம் உரித்து பொடியா நறுக்கி தட்டில் வைத்துவிட்டு கொஞ்சம் கறிவேப்பிலையை உருவி தண்ணியில் அலசிவிட்டு அதையும் தட்டில் வைத்தாள். ஒரு எலுமிச்சை அளவு புளியை எடுத்து ஒரு சட்டியில் தண்ணியில் ஊற வைத்தாள். பிறகு அடுப்பை பற்ற வைத்து சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் வெந்தயம், கொஞ்சம் சீரகம், சேர்த்து வதக்கிட்டு அப்படியே வெங்காயத்தை பொன்னிறமா வதங்கியதும் தக்காளி பச்சை மிளகாய் போட்டு நல்லா வதங்கியதும் சிறிது மஞ்சள் தூள், கொஞ்சம் மசலா போட்டு அதையும் லேசா வதக்கினால்... வதங்கியதும் அதில் கரைச்சு வைச்ச புளிகரைசலை ஊற்றி கொஞ்சம் உப்பையும் சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு சுத்தம் பண்ணி வைச்சிருக்கிற மீனை போட்டு அதோட நறுக்கி வைச்சிருக்கிற மாங்காயை போட்டு இறக்கினாள் ஸ்ரீ.. 


"வாம்மா... சாப்பிடுவோம் அழைத்தாள் ஸ்ரீ"


"பசிக்கல கொஞ்சமா போடு என்றார் லெட்சுமி அம்மா"


ஸ்ரீ தட்டில் கொஞ்சம் சோறும் சில மீன் துண்டுகளையும் போட்டு தட்டை நகர்த்தி வைத்தாள். 


"லெட்சுமி அம்மா சாப்பிட்டுக்கொண்டே "என்ன இந்த மீன்ல இவ்வளவு முள் இருக்கு..."


"கெண்டை மீன்ல இப்படித்தான் முள் இருக்கும்னு உனக்குத் தெரியாதா? மூஞ்சை சுழித்தபடி ஸ்ரீ.


"இருக்கும் தான் ஆனா இந்தளவுக்கு முள் இருந்து பார்த்தது இல்ல" 


"ஏம்மா.. எப்பவும் ஏதாவது சொல்லிகிட்டே இருக்குறீயே ஏன்...? கோபம் தலைக்கேறியது ஸ்ரீ க்கு.


"ஏன்டி இப்ப நான் என்ன சொல்லிட்டேன் இப்படி எரிஞ்சு விழுறே..." பதிலுக்கு லெட்சுமி அம்மாளும் கத்த தொடங்கினார்.


"ஆமா நீ டெய்லி இப்படிதான் ஏதாவது குறை சொல்லாம சாப்பிட்டு இருக்கியா? உப்பு இல்லங்கிற, சில நேரம் உரப்பு இல்லங்கிற எல்லாம் சரியா இருந்தால் மீனு நல்லா இல்லங்கிற எல்லாமே நல்லா இருந்தா மீனு அலச பத்தலன்னு சொல்றே..  எல்லாரும் நம்ம வீட்டுல வந்து சாப்பிட்டு நல்லா இருக்குன்னு பாராட்டதான் செய்றாங்க ஆனால் நீ மட்டும் தான் ஏதாவது சொல்லிகிட்டே இருக்கே ச்சை... "


"அம்மா தாயே... என்னை வுட்டுரு மீனு முள்ளா இருக்குன்னு நான் ஒரு வார்த்தைதான் சொன்னேன் அதுக்கு இப்படி கரண்டு மாதிரி புடிச்சுகிட்டே இனிமே நான் ஏதாவது சொன்னா கேளு" 


"ஆமா... இதையேதான் ஒவ்வொரு தடவையும் சொல்லுறே இவ்வளவு பேசுறீயே உனக்கு நல்லா சமைக்கத் தெரியுமா? "


"நான் சமைச்சா தான் உனக்குல் பிடிக்காதே அப்புறம் எங்க செய்யுறது.." கழுத்தை வெடுக்கென்று திரும்பினார்.தட்டில் இருந்த சோறு காலியா இருந்தது.


" மறு சோறு வேணுமா" கேட்டாள் ஸ்ரீ

"எனக்கு வேண்டாம் இதுவே போதும் னு கடுப்போடு தட்டை கழுவ எடுத்துச் சென்றார் லெட்சுமி அம்மா.


இந்த மீன் குழம்பு வைச்சு சாப்பிடுறதுக்குள்ள ஒரு போர்களமே நடந்து முடிஞ்சிடுத்து..


"ஏங்க .. வாங்க மீன் குழம்பு சாப்பிடலாம் அட என்ன படிச்சுகிட்டே முழுங்கிறீங்க உங்களைத்தான் கூப்பிடுறேன் சாப்பிட்டு பார்த்து டேஸ்ட் எப்படின்னு சொல்லுங்க... அட உங்களை எல்லாம் திட்ட மாட்டேன் வாங்க... 😂 😂 😂 

1 comment:

  1. this is the one i am searching in google to read, if you wish to luxury perfumes online check our website. we are the best perfume manufacturing company.

    ReplyDelete