Saturday 18 April 2020

காற்றின் மொழி

        வணக்கம்...நேயர்களே இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது நேயர் விருப்பம்.. நேரம் இப்போது சரியா காலை 9 மணி 55 நிமிடம் ஆகிறது. நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் இப்போது லைன்னில் ஒரு நேயர் காத்திருக்கிறார்... "வணக்கம் .. வணக்கம் .. லைன்ல இருக்குறீங்க பேசுங்க...  யார் எங்கிருந்து பேசுறீங்க..?"

"வணக்கம் ... வணக்கம்... அக்கா..  மருதமுனையில் இருந்து நிஷாந்தன் கந்தையா கதைக்கிறன் ரொம்ப நாளா ட்ரைப் பண்ணிட்டு இருந்தனான் லைன் கிடக்கல இன்றைக்குத்தான்  கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா  உங்கட வாஸ் என்றால்  எனக்கு ரொம்ப இஷ்டம் அக்கா உங்க நீண்ட கால ரசிகன் அக்கா.. "

"அப்படியா... ரொம்ப சந்தோஷம் நிஷாந்தன் சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்..?" என்றாள் சரித்தபடி

"அக்கா... வசீகரா படத்துல இருந்து பூப்போல தீ போல மான் போல மழைப் போல வந்தாள்
சாங் தருவிங்களா?"

"சரி நிஷாந்தன் யார் யாருகெல்லாம் பாடல் வேண்டும்..."

 "எனக்காகவும் எங்கட குடும்பத்தார் நண்பர்கள்,ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கேட்போம் அக்கா உங்க கூட கதைச்சதில் ரொம்ப சந்தோஷம்  அக்கா..நன்றி" எனக்கூறியபடி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

"நிஷாந்தன் நீங்க கேட்டப் பாட்டு இதோ வந்துட்டு இருக்கு இப்போது நான் விடை பெறும் நேரமும் வந்திடுச்சு உங்களிடம் இருந்து விடைப் பெற்றுக்கொள்ளும் நான் கெளரி வணக்கம் நேயர்களே... என்று கூறியபடி ஒலிநாடாவை சுழலவிட்டு ஸ்டியோவை விட்டு வெளியே வந்தாள் கெளரி..



வகிடெக்காத தலையில் ஸ்டைலாக கொனிடையில் போட்டிருந்தாள் கண்ணுக்கு அழகான கண்ணாடி கழுத்தையை சுற்றி ஒரு முத்து மாலை சந்தன நிறச் சேலையில் காற்றின் மொழி ஜோதிகா மாதிரி நல்ல நிறம் நேர்த்தியான முகத்தோடு அழகாக இருந்தாள் கெளரி. நம்ம கதாநாயகிக்கு எத்தனை வயதிருக்குமென்று நினைக்கிறீர்கள்...??? சரி நானே சொல்லிவிடுகிறேன் ஆடி போய் ஆவணி வந்தால் ஐம்பது ஆகப் போகிறது யாரும் பார்த்தால் சரியாக மதிப்பிட முடியாது.. என்ன ஷாக் ஆகிட்டிங்களா சரி அப்படியே வாங்க கதைக்குள்ள போவோம்..  அரசு வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றுகிறாள்.. தொலைகாட்சி ஒன்றிலும் தொகுப்பாளினியாகவும் இருக்கிறாள்.. படித்த இலக்கியமும் இனிய குரல் பலரின் மனதை வெகுவாக கவர்ந்தது. அத்தனை நேயர்களையும் தன் குரல்வளத்தால் வசப்படுத்திக்கொண்டாள் பல திறமைகளுக்கு சொந்தகாரி என்று கூட சொல்லலாம்.

நிகழ்ச்சி முடிந்தாயிற்று வீட்டுக்கு கிளம்புவோம் என்று எழுகையில் அருகாமையில் ஒரு குரல் "என்ன தங்கச்சி கிளம்பியாச்சுப் போல உங்களப் பார்க்கத்தான் வந்தேன்.." என்றார் சிரித்தபடி.. அதே அலுவலகத்தில் அறிவிப்பாளராக பணியாற்றும் ரவீந்தர்.

"வாங்கண்ணா... எப்படி இருக்குறீங்க நல்லா இருக்குறீங்களா? என்ன விஷயம் அண்ணா ஏதாவது முக்கியமான விஷயமா? " நெற்றியை சுருக்கியப்படி கேட்டாள் கெளரி.

"நல்ல விஷயம்தான்" என்றவர் அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார்.. வர்ற இருபதாம் தேதியில் ஏதாவது வேலை இருக்கா.. நீங்க ரொம்ப பிஸி அதான் கேட்கிறேன்..." என்றார்.

"என்ன அண்ணா.. நீங்களே இப்படி கிண்டல் செய்றீங்க என்றவள் அந்த தேதியில் ஒன்னுமில்ல ப்ரிதான் என்ன விஷயம் சொல்லுங்க.."

"நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தான் ஒரு ஸ்டேஜ் புரோக்கிராம் பண்ணனுமாம் நீங்க வருவீங்களான்னு கேட்டார் உங்களுக்கு கூட அவரை தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் இந்தா கால் பண்ணித் தர்றேன் பேசுங்க.." என்றவர் டயல் செய்து போனை கெளரியிடம் கொடுத்தார்..

போனை வாங்கி துடைத்துவிட்டு காதுக்கு வைத்து "ஹலோ...." என்றாள் கெளரி. எதிர்முனையில் "ஹலோ.... கெளரி நான் விஜயேந்திர பாலன் பேசுறேன் என்னை உங்களுக்கு நினைவிருக்கா...? "

"ஸாரி... எனக்கு நினைவில்லையே ஒருவேளை நேரில் கண்டால் ஞாபகம் வரலாம்... " என்றாள் சற்றே குரலை இழுத்தப்படி..

"ஞாபகம் இல்லையா.. சரி பரவாயில்லை ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும் ரேடியோவில் உங்கள் குரலை எப்போது கேட்டுட்டே இருப்பேன் சரி மற்றதை நாம் நேரில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். வருகிற 20,21 ல் ஒரு புரோகிராம் இருக்கு நான் சிங்களத்தில் நீங்கள் தமிழிலும் தொகுத்த வழங்க வேண்டும் அதற்கான டீட்டயலை நான் உங்க வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கிறேன் நிகழ்ச்சிக்கு போகும் போது என்னோட காரிலே பிக்கப் பண்ணிக்கிறேன்.. ஒகே என்றபடி போனை துண்டித்துவிட்டார்.

கெளரி போனை ரவீந்தரிடம் கொடுத்துவிட்டு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா நான் கிளம்புறேன் என்றவள் யாரா இருக்கும் என யோசித்தப்படி சென்றாள்.

இரண்டு நாளைக்குப் பிறகு ப்ரோகிராமிற்கு கிளம்பி கொண்டு இருந்தாள் கெளரி அப்போது வெளியே ஹாரன் சத்தம் கேட்டது. ஓடிவந்து எட்டிப்பார்த்துவிட்டு வந்துட்டார் போல ஹேண்பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் கெளரி.

காரின் முன் சீட்டில் நல்ல உயரத்துடன் நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான் அவன் முகத்தில் சிறு புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது.. ஹலோ... வாங்க மேடம் என்றபடி முன்கதவை திறந்துவிட்டான்.

"ஸாரி...  நான் பின்னாடியே உட்கார்றேன் அதான் எனக்கு கம்பர்டபுள்ளா இருக்கும்.." என்றாவள் பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள்.

அவள் அப்படி சொன்னதும் விஜய பாலனுக்கு முகம் சற்று மாறித்தான் போனது. அதை வெளியே காட்டில்கொள்ளாமல் "சரி...ஏன் முன்னாடி உட்கார பயமா? என்றான் கொஞ்சம் நக்கலாக..

"இல்ல முன்னாடி உட்கார்ந்தா சீட்பெல்ட் போடனும் அது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும் அதான்" என்றாள்.

"சரி அது போகட்டும் விடுங்க என்னைய ஞாபகம் இல்லன்னு சொன்னிங்களே.. இப்பாவது என் மூஞ்சு ஞாபகத்துக்கு வந்துச்சா...?"

"ம்... பார்த்த மாதிரி தான் இருக்கு ஆனா சரியா ஞாபகம் இல்ல"

"சரியா போச்சு போங்க இந்த பெண்களே இப்படித்தான்.. இருபது வருசத்துக்கு முன்னாடி நான் உங்க தீவிரமான ரசிகன் தெரியுமா..? பஸ்ல போகும் போதும் வரும் போது உங்களையே தான் பார்த்துட்டு இருப்பேன் நீங்க கண்டுக்கவே இல்ல.. அப்ப செம்ம அழகா இருப்பிங்க பார்த்துகிட்டே இருக்கலாம் நிறைய தடவை உங்க கிட்ட பேச ட்ரைப் பண்ணியிருக்கேன் தெரியுமா? ஆனால் பேச முடியாம போச்சு..சொல்லிவிட்டு ஏக்க பெருமூச்சை ஒன்றை விட்டான்..

அய்யய்யயோ.... இந்த ஆள் என்ன இப்படி பேசுறார் சரி பேச்சை மாத்துவோம்.. என நினைத்தவள் ஓ... அப்படியா..ஸாரி அப்ப நான் ரொம்ப பிஸி வேலை அதிகம் அதான் கவனிச்சிருக்க மாட்டேன். ஒரு வழியாக சமாளித்தாள்.

"சரி விடுங்க பொண்ணுங்க சும்மாவே கண்டுக்க மாட்டாங்க இதுல  நீங்க ரொம்ப அழகு  அதுலயும் நீங்க பிஸி வேற...என்ன பண்றது என்றவன் உங்ககிட்ட  என்னனவோ... சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியல ஏன்னு தெரியல.. நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க என்ன..." என்றான்.

இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் சிரித்து மழுப்பினாள் அதே நேரம் புரோகிராம் செய்ய வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது. ஒருவழியா தப்பிச்சோம் பிழைச்சோம் என்று கார் கதவை திறந்துகொண்டு வேகமாக கடந்து சென்றாள் கெளரி.

மாலை நிகழ்ச்சி முடிந்ததும் காற்றோட்டமாக வெளியே வந்து நின்றாள்.. அப்போது காலையில் அவன் பேசிய நினைவுக்கு வந்தது இப்போதும்
 அவனோடுதான் செல்ல வேண்டும் இன்னும் என்னெல்லாம் சொல்லப் போகிறானோ தெரியல இந்த வயசுல என்ன பிதற்றுகிறான் இப்பதான் வாலிபம் திரும்புதா இவனுக்கு இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா வராமலே இருந்திருக்கலாமோ... ஆளைப் பார்த்தால் டீசன்டா தான் தெரியுறான் ஆனா பேச்சு சரியில்லையே... என யோசித்துக்கொண்டிருந்தவளை அந்த குரல் உசுப்பிற்று..

"ஹலோ...மேடம் போலாமா...? என்றபடி கார் கதவை திறந்து உட்காந்தான். சுயநினைவு வந்தவளாய் ஓடிபோய் கார் கதவை திறந்து உட்கார்ந்ததும் போலாம் விஜயபாலன் என்றாள்..

"ஆமா..என்ன பலத்த யோசனையில் இருக்குறீங்க? என் கிட்ட சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன் இல்ல...  பை த பை  நிகழ்ச்சிய அருமையா தொகுத்து வழங்குனீங்க உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல அதான் நான் உங்களை இன்வைட் பண்ணினேன்... "என்றான்.

"தேங்க்ஸ்.. நீங்களும் நல்லாதான் செய்திங்க.."

"அப்படியா... சொல்றீங்க இது ஒன்னும் கனவில்லையே.. இருங்க கிள்ளிப் பார்த்துக்கிறேன்... என்றவன் தனது கைகளை கிள்ளிப் பார்த்து விட்டு ஸ்...ஆ... என்று கத்திவிட்டு ஆமா..  வலிக்குது நிஜம் தான்" என்றான் சிரித்தப்படி.

"நான் ஏன் பொய் சொல்லப் போறேன் உண்மையாதான் சொல்றேன் " என்றாள் காற்றில் பறந்த  தனது கேசத்தை ஒதுக்கியபடி.

"என்னால நம்பவே முடியல போங்க...சரி நீங்க பேசவே மாட்டிங்களா ரொம்ப ரிசர்வ் டைப்போ.. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றீங்க ..ஆனா ரேடியோவில் ரொம்ப அழகா பேசுறீங்கத் தெரியுமா? சான்ஸே இல்ல அம்மீஸிங் வாய்ஸ் உங்களுக்கு. என்றவன் காரில் இருந்த ரேடியோவை ஆன் செய்தான் அந்த நேரத்தில் கெளரியின் விளம்பரம் போய் கொண்டு இருந்தது. அட.. பார்த்திங்களா .. இப்பக் கூட உங்க வாய்ஸ்தான் போகுது... அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் ரேடியோ வைச்சாளும் உங்க வாய்ஸ்தாங்க கேட்குது....  அப்புறம் காலையில உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் சொன்னேன் இல்ல.. அது என்னத் தெரியுமா??

"ம்.... என்ன சொல்ல வந்திங்க..." என்றாள் சற்றே அசடுவழிய சிரித்தபடி...

இருபது வருஷத்துக்கு முன்னாடி நீங்க அப்படி ஒரு அழகா இருந்திங்க அப்ப உங்க மேல ஒரு இது இருந்தது.. ஆனால் சொல்ல முடியல அப்புறம் சில வருடங்களுக்குப் பிறகு உங்களைத் தேடி வந்தேன்  உங்க கூட ரேடியோவில வேலை பார்க்கிற ஒருத்தரைப் புடிச்சு விசாரிச்சேன்.. அப்பத்தான் தெரிஞ்சுது உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு உங்க கூட வேலைப் பார்க்கிற ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணியிருக்குறீங்கன்னு தெரிஞ்சுது அப்பவே எனக்கு மனசு உடைஞ்சுப் போச்சு... எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல எப்படி உங்களை மறக்குறதுன்னு தெரியாம தவிச்சேன்.  நான் ஒரு முட்டாள் அப்பவே உங்ககிட்ட சொல்லியிருக்கனும் ஆனால் சொல்லாம விட்டது  என் தப்புதானே..? என்னடா இவன் இத்தனை வருஷத்துக்குப் பிறகு இப்படி பேசுறானேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க.. இப்ப உங்களை நேரில் பார்த்ததும் சொல்லனும் போல தோணுச்சு அதான் சொல்லிட்டேன்... மனசல உள்ளதை இப்பவாது இறக்கி வைக்க முடிஞ்சுதே...   உங்ககிட்ட எனக்குப் பிடிச்சதே உங்க சிரிப்புத்தான் கடைசி வரைக்கும் என்னைப் பார்த்து சிரிக்காமலே போய்ட்டிங்க என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு..

"ஸாரி... உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தெரியாது அவ்வளவா பழக்கமும் இல்ல என்ன பண்றது யார் யாருக்கு என்ன எழுதியிருக்கோ அதான் நடக்கும்.. அதனால் என்ன இனிமே நாம நல்ல ஒரு ப்ரண்ஸா இருப்போம்..? என்று சமாளிப்பை பதிலாக தந்தாள் கெளரி.

"சரி கெளரி வீடு வந்தாச்சு  நீங்க போங்க வேற புரோக்கிராம் இருந்தால் கூப்பிடுறேன்.." என்றான்.

"ஒகே... பை டேக் ஹேர் என்றபடி கார் கதவை திறந்து கொண்டு இறங்கி நடந்துப் போனாள் கெளரி.. அப்போது ரேடியோவில் அவன் மனநிலைக்கு ஏற்றார் போல் இந்த பாடல் ஒலித்தது

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா...
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா ....
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ..
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ..
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா..

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவனின்  கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல கசிந்துக்கொண்டிருந்தது.. காலங்கள் கடந்து போனாலும் காதலின் வலிகள் மட்டும் கடந்து போய் விடுவதில்லை ஏதோ ஒரு ஒரத்தில் மறைவாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

                         *************







No comments:

Post a Comment