Saturday 21 July 2018

சிகப்பி

காலை மணி 9 ஆடி வெள்ளி என்பதால் நான் சாமி படங்களை துடைத்துக்கொண்டு இருந்தேன் வெளியே ஏதோ சத்தம் கேட்டது படங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடிபோய் பார்த்தால். சிகப்பி பாதி தென்னை மரம் உயரத்திற்கு பறந்து போய்கொண்டு இருந்தாள். ஆஹா குஞ்சை பருந்து தூக்கிவிட்டதா என்று என் கண்கள் அங்குமிங்கும் தேடியது ஆனால் ஒன்றும் என் கண்ணில் சிக்கவில்லை.. சிறிது நேரத்தில் கலவரமுகத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் சிகப்பி. சிகப்பி நான் வளர்க்கும் கோழி, அவள் நாலு குஞ்சுகளுக்கு தாய் ஏழு குஞ்சுகளை பொரித்தாள் மூன்று இறந்து போனது. தற்போது நாலு குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள். அவள் பெரும் கோவக்காரி முட்டை அடை வைக்கும் வரை என்னை சுத்தி வருவாள் அடைகாத்து குஞ்சு பொரித்துவிட்டால் பத்திரகாளியாக மாறி கொத்தி விடுவாள் வளர்க்கும் என்னையே அவள் விட்டு வைப்பத்தில் என்றால் கூட வளரும் கோழி, நாய்களை சும்மா விடுவாளா ராட்ஷியாக பிடிங்கி எடுத்துவிடுவாள்.



அந்த கோபத்தால் இன்று  ஒரு அசம்பாவிதம் நடந்து போன்து. மற்ற பறவைகள் போல் கோழி பறக்காது ஆனால் தன் குஞ்சுக்கு ஒரு ஆபத்து என்றால் அதனைக்கு தாக்க வருகின்ற பறவையோடு  சேர்ந்து பறக்கும் அப்போது எப்படிதான் சக்தி வருமோ தெரியாது அது கடவுளுக்கே வெளிச்சம். ஏதோ ஒரு காகம் அந்த வழியாக பறந்து போக அதை விரட்டிக்கொண்டு போன வேகத்தில் சிகப்பிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலே பறந்து சென்றவள் முள்கம்பியில் விழுந்து ஒரு பக்கம் தோலோடு சதை கிழிந்து கொட்டிவிட்டது. ஆனால் அவள் அதைக்காட்டிக்கொள்ளாமல் சத்தம் போட்டுக்கொண்டே கம்பீரமாக வந்தாள் அவள் குரல் கேட்டதும். இலங்கை இராணுவம் குண்டு போடும் போது பதுங்கு குழியில் ஒழிந்த குழந்தைகள் அந்த போர் விமானம் சென்றவுடன் குழந்தைகள் வெளியே வருவது போல் ஒவ்வொன்றாக கத்திக்கொண்டு ஓடிவந்தது. என் கண்கள் ஒவ்வொன்றாக எண்ணத்தொடங்கியது. ம்... அப்பாடா எல்லாம் நிற்கிறது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைக்கும் போதே சிகப்பி குஞ்சுகளை நோக்கி போகாமல் வேற எங்கோ ஓடினாள். நான் நினைத்தேன் பதட்டத்தில் குஞ்சு நிற்கின்ற இடத்தை மறந்துவிட்டாளோ என்று நான் சட்டென்று சற்று உற்று  கவனித்தேன் அவள் கால்களின் வழி சிகப்பாக ஏதோ மின்ன ஆ... அது இரத்தம் மாதிரி இருக்கே என்னாச்சு என்று அதன் அருகே ஓடினேன். சிகப்பி ஒரு இடத்திலும் நிற்காமல் அங்குமிங்கும் ஓடினாள் ஒருபக்கம் குஞ்சு தாயை காணாமல் கத்துகிறது. குஞ்சை பார்ப்பதா கோழியை பார்ப்பதா.. குஞ்சை பார்ப்பதா கோழியை பார்ப்பதா... ? ஒன்று புரியவில்லை எனக்கு. கோழியை பிடிக்க ஓடினால் தனியாக நிற்கும் குஞ்சை காக்கா தூக்கிவிடும் என்ன செய்வதென்று புரியாமல் குஞ்சுகளை கண் பார்வையில் வைத்துக்கொண்டேன் நான் கோழியை மெதுவாக பிடித்தேன்.

இறக்கை இரண்டையும் தூக்கிப் பார்த்தால் ஒரு பக்கம் அப்படியே சதை சரிந்து கொட்டி விட்டது. அந்த சூழ்நிலையிலும் அவள் தைரியமாக நடந்து வந்தது எனக்கு வியப்பை தந்தது. அதன் பிறகு அவளை ஒரு கூடையில் அடைத்துவிட்டு குஞ்சுகளை விரட்டி பிடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது ஒரு வழியாக அதை அதன் தாயோடு சேர்த்துவிட்டாலும் சிகப்பி பிழைப்பாளா என்று கவலை என்னை சோகத்தில் ஆழ்த்தியது. முதலில் அவளுக்கு பர்ஸ்ட் எய்டு செய்வோம் அதன் பிறகு ஹாஸ்பிட்டல் கொண்டு செல்லலாம் என நினைத்தப்படி பின்னால் சென்று வேப்ப மரத்தில் இருந்த இலைகளை கொஞ்சம் பறித்து அம்மியில் வைத்து அரைத்து அதோடு கொஞ்சம் மஞ்சளையும் சேர்த்து அவளின் காயத்திற்கு மறந்து போட்டேன். என்ன ஆச்சரியம் எப்போதும் என்னை வெறித்தனமாக. என்னை கொத்த வருபவள் இப்போது அமைதியாக இருந்தாள் அவளுக்கு தெரிகிறது நமக்கு காயப்பட்டு இருக்கிறது அதற்காகதான் மருந்து இடுகிறார்கள் என்று புரிகிறது. இதே காயம் நமக்கு பட்டு இருந்தால் தாம் தூம் என்று குதிப்போம் கத்துவோம் கதறுவோம் அவள் ட்ர்ர்ர்ர...ட்ர்ர்ர்ரர.....ட்ர்ர்ர்ர்ர..ட்று... என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.  நான் அவளிடம் பேச்சுக்கொடுக்க அதற்கு அவள் பதில் சொல்வது போல் இருந்தது அவளின் செய்கை. அந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் கவனித்தேன் எப்போதும் குஞ்சுகளை திறக்காமல் அடைத்து போட்டிருந்தால் குய்யோ முய்யோ என்று கத்தி எடுத்துவிடும் ஆனால் இப்போது அதன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை அந்த குஞ்சுகள் புரிந்து கொண்டது. கத்தாமல் சமத்தாக இருந்தது நான் அதை வியந்து பார்த்தபடி மருந்து போட்டுக்கொண்டு இருந்தேன். சிகப்பி டிர்ர்ர்...டிர்ர்ர்...டிர்ர்ரர்.. என்று முனங்கும் போது அந்த குஞ்சுகள் தாயின் முகத்தில் முத்தம் கொடுப்பது போல் வந்து செல்லமாக கொஞ்சிய காட்சி இப்பவும் மனதை அறுக்கிறது.

ஒருவழியாக மருந்தை பற்று போட்டுவிட்டு அவளை தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் போனேன். அவள் தொல்லை ஏதும் செய்ய வில்லை அமைதியாக இருந்தாள். அவளுக்கு தெரிகிறது நமக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது அவர்களை துன்புறுத்த கூடாதென்று ஹாஸ்பிட்டல் சென்றதும்.  டாக்டர் முதலில் சொன்ன வார்த்தை "இது தேறாது.."

"என்ன சார் சொல்றீங்க இது குஞ்சு கோழி என்றேன் பதட்டதோடு.."

"அவர் சிரித்துக்கொண்டே குஞ்சு கோழின்னா சாகாதா? கோழிக்கு தோல் உறிஞ்சு போச்சே அதுக்கு தோல்தான் பாதுகாப்பு அது போயிடுச்சின்னா புண் ஆறாது உடனே புழு வைச்சிரும்  என்றார்.

"இதோட குஞ்சுக்காக இது உயிரோடு இருந்தாகனுமே " என்றேன் நான்.

"அவ்வளவுதான் இப்போது இரண்டு ஊசி போடுறேன் மருந்து தர்றேன் வாங்கிட்டு போங்க" என்றார்.

பிறகு எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தேன் வந்ததும் அதன் குஞ்சுகளோடு விட்டேன் அந்த குஞ்சுகள் இதை பார்த்ததும் என்னை தனியா விட்டுட்டு எங்கே போனே என்பது போல் செல்லாக வந்து கொத்துகிறது எனக்கோ பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சுகப்பி எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பாள் அதன் பிறகு இந்த குஞ்சுகள் என்ன செய்யும் எப்படி இதை காப்பாற்ற போகிறேன் என்ற கவலை என்னை ஆக்கிரமித்தது. காலையிலையே இரதத்ததை பார்த்ததாலே என்னவோ குளித்த பிறகும் இரத்தவாடை வீசுகிறது சாப்பிட கூட முடியவில்லை. இந்த டாக்டர்ஸ் எல்லாம் எப்படி தினமும் சாப்பிடுகிறார்கள் என்ற கேள்வியும் மனதில் ஓடியது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல் சிகப்பியின் அதிகமான கோபத்தால் வந்த விளைவு தானே இது ஆத்திரம் நம் கண்களை மறைக்கும் என்பார்கள் அது உண்மைதானே தன் கோபத்தால் எங்கோ பறந்து சென்று எதன் மீதோ விழுந்து அடிப்பட்டு இப்ப.உயிர் போகின்ற நிலை இவை எப்படி நடந்தது ஒரு நொடி ஆத்திரத்தில் தானே நாளை இந்த குஞ்சுகளின் நிலை என்ன என என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது. சில நேரங்களில் விலங்களும் பறவைகளும் நமக்கு நிறைய பாடங்கள் சொல்லித்தருகின்றன உண்மையான பாசமும் என்னவென்று  இவைகளிடம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கு ஆபத்து என்றால் நாம் உயிரை கொடுத்து போராடுவோமா என்பது சந்தேகம் தான் ஆனால் பறவைகளும் விலங்குகளும் தன் பிள்ளைக்காக உயிரையும் விடும் என்பது சந்தேகமே இல்லை. மனிதர்களிடம் என்ன பாசம் இருக்கிறது? என்ன அன்பு இருக்கிறது ? இவைகளிடம் அது உண்மையாய் நிறைந்து கிடக்கிறது.

No comments:

Post a Comment