Wednesday 7 March 2018

பள்ளிப்பருவத்திலே 4

       

            நட்பென்று வந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய தூண்டு் இல்லையா என்னதான் நம் உறவுகள் இருந்தாலும் நண்பர்கள் கூட பேசுவது, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது, அவர்களுக்காக காத்திருப்பது வரவில்லை என்றால் கோபப்படுவது, சண்டை போடுவது, கொஞ்ச நேரம் பேசாமல் இருப்பது பிறகு எதுவுமே நடக்காதது போல் பேசுவது இது எல்லாமே நட்பில் மட்டும்தான் முடியும். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எல்லா உறவுமே நட்பில் மொத்தமாக ஒருவரிடம் அடங்கிவிடுகிறது அதனால்தான் ஒவ்வொருக்கும் நட்பென்றால் ஒரு தனி பிரியம் ஏற்படுகிறதோ என்னவோ. கலா சுதாவை விட்டு பிரிந்த பிறகு வள்ளி மட்டுமே சுதாவின் இதயத்தில் முழுமையாக இடம் பிடித்திருந்தாள். வள்ளிக்கா என்ன வேண்டுமென்றாலும் செய்ய காத்திருந்தாள். சமையலில் தொடங்கி டிரெஸ் வரை அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்தாள் சுதா.



             இவையெல்லாம் வள்ளி எப்படி உணர்வாளோ தெரியாது ஆனால் சாதரணமாகவே இருப்பாள். ஆனால் சுதாவோ வள்ளி  எப்போ வீட்டுக்கு வருவாள் என எதிர்பார்க்கும் அளவிற்கு வந்துவிட்டாள். கல்லூரி விடுமுறை நாட்கள் சுதாவுக்கு செம்ம போரிங்கா இருக்கும் இன்றும் கல்லூரி விடுமுறை நாட்கள்தான் வள்ளி வருமா.. வருமா என்று வாசலையே எட்டி.. எட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள் சுதா.. வள்ளி வருவது போல் தெரியவில்லை சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என நினைத்தப்படி போய் படுத்தாள்.. சிறிது நேரத்திலே சுதாவின் மனதின் எதிர்பார்ப்போ என்னவோ இவள் நினைத்தபடியே வள்ளி வந்தாள் தூரத்தில் வரும் போதே அவளின் குரல் கேட்டது. சுதா தூங்குவது போல் கண்ணை மூடிக்கொண்டு படித்திருந்தாள். வள்ளி வீட்டுக்குள் வந்ததும் "என்னடி தூக்கமா.. எப்பா பார்த்தாலும் தூங்கிட்டே இரு வர வர நீ ரொம்ப மோசமாயிட்டே அம்மா...எங்க காணும் அவங்கிட்ட சொல்லி உன்னைய நல்லா மிதிக்க சொல்லனும் அப்பதான் நீ சரிப்பட்டு வருவே... "என்றபடி தான் கொண்டு வந்த ஒரு பேக்கை டக்கென்று தரையில் போட்டாள்..

             சுதா இப்பதான் கண்விழித்தது போல் சீன் போட்டபடி எழுந்தாள்.. "இப்ப என்னாச்சு.. நான் இப்பதான் படுத்தேன் அது பொறுக்காதே உங்களுக்கு நீங்க மட்டும் என்ன ஹாஸ்பிட்டலில் ஒரு வேலை கூட வர்றதே இரண்டு மூனு பேருதான் தான் அதுக்கு ஒரு டாக்டர் ஒரு நர்ஸ் நீங்கள் என்னவோ எனக்கு நர்ஸ் மாதிரி தெரியலை ரெகுலர் பேஷண்ட் மாதிரிதான் தெரியுது..." என்று சிரித்தாள்.

             "நீ... இப்படி சொல்லிட்டு இரு..உனக்கு வாய் மட்டும் இல்லன்னா உன்னால பொழைக்க முடியாது. இந்த வாய வைச்சுகிட்டுதானே எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கே உனக்கு இருக்கு வா.. " என்று சிரித்தபடியே அங்கே சமைத்து வைத்ததை எல்லாம் திறந்து பார்த்து ஆராய்ந்து விட்டாள் வள்ளி.

               "சரி..சரி.. நீங்க சாப்பிடுங்க நீங்க வருவிங்கன்னுதான் மீன் குழம்பு வைச்சேன். அதிலே வறுத்த மீனும் முட்டையும் இருக்கு பாருங்க.."

              "பார்த்தேன்.. பார்த்தேன்... நீ ஒன்னும் கவலைப்படாதே நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன்.. என்றபடி தட்டை எடுத்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள். ஆயி மொட்டை அம்மா இதெல்லாம் காலையிலையே வாங்கி கொடுத்திருச்சா... என்றாள்.

           "ஆமா.. "

             "சரி அந்த பேக்கை எடுத்துப் பாரு.."

           "என்ன இருக்கு... என்றபடி எடுத்தாள்  உள்ளே வெறும் போஸ்ட் கார்டு சுதாவுக்கு கண்கள் ஆச்சரியத்தில்  விரிந்தது. அந்த கூடையை அப்படியே கொட்டினாள் ஐம்பதுக்கு மேற்பட்ட கடிதங்கள் சிதறி விழுந்தன. அதை அவள் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தாள் தனக்கு தானே சிரித்துக்கொண்டாள்.. சில கடிதங்கள் பாராட்டி எழுதப்பட்டு இருந்தது சிலது தங்கை, மகள், ப்ரண்டு என்று உறவுகள் முறைகளில் சில கடிதங்கள் ஒரு இரண்டு கடிதம் மட்டும் லவ் லெட்டர் போல இருந்தது. கவிதை வடிவில் ஒருவன் தன் காதலை சொல்லியிருந்தான் சுதா படித்துவிட்டு ஹா..ஹா.. என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

             "என்னடி சிரிக்கிறே... அதுல ஒருத்தன் பாரு என்ன எழுதியிருக்கான்னு என்னனவோ எழுதியிருக்காண்டி.. அதில் வேதாரண்யத்தில் இருந்து ஒருத்தர் எழுதியிருக்கிறார் பார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஊருக்குள்ள நமக்கு பெரிய பேரா போச்சு.. போஸ்ட் மேன் டெய்லி கட்டு கட்டா லெட்டர் கொண்டு வர்றார். அவர் வேற கிண்டல் பண்றார் வள்ளி எழுத்தாளராயிட்டு ரேடியோவில் அது எழுதுதுன்னு ஒரே பாராட்டு மழை தான். நீ இதை எப்ப எழுதினேன் என் கிட்ட சொல்லி ஒரு வார்த்தை இருக்கலாம் இல்ல எல்லாரும் என்கிட்ட கேட்டாங்க எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, ஒருவழியா பேசி சமாளிச்சேன். இங்க பாரு இதுக்கெல்லாம் நீயே பதில் கடிதம் எழுதிப்போட்டுரு அதிலே போஸ்ட் கார்டு வாங்கிட்டு வந்திருக்கேன் எனக்கு ஒன்னும் தெரியாது சொல்லிட்டேன். ஏய்.. நீ எழுதன வைச்சு நான் யாரையோ காதலிக்கிறேன்னு நினைக்கப்போறாங்க. என்றாள் சிரித்தபடி.

           " உங்களுக்கு சப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன் அதான் சொல்லல. நான் எழுதினேன்னு சொல்லாதீங்க நீங்க எழுதியதாவே இருக்கட்டும். சரி.. சரி.. அதையும் நாங்களே எழுதி பதில் கடிதமும் நாங்களே எழுதனுமா இது ரொம்ப நல்லா இருக்கே .. என்றாள் சுதா.

           " நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் எழுதினேன்னு தான் சொல்லியிருக்கேன் எனக்கு மட்டும்தானே தெரியும் நீ எழுதினதுன்னு அம்மா நினைச்சிட்டு இருக்கு நான் தான் எழுதினேன்னு ஹா..ஹா. என்று சிரித்தவள் அப்புறம் நல்லா சூப்பரா உனக்கு என்ன தோணுதோ எழுதிப்போட்டுரு. நீதானே அதை எழுதினே அப்ப உனக்குதானே அதுக்கு சரியா பதில் எழுத முடியும். நான் ஸ்கூல்ல படிக்கும் போது கவிதை எழுத சொன்னாங்க நான் என்ன எழுதினேன் தெரியுமா? "தென்னம் ஓலையை போல் நீண்டு இருக்கிறது அவளின் கூந்தல் " என்று எழுதினேன் எல்லோரும் விழுந்து.. விழுந்து சிரிஞ்சாங்க நீயும்...சிரிக்காத மொட்டை என்று தலையை கோணி வெட்கப்பட்டு  சிரித்தாள் வள்ளி.

             "சுதாவோ... கெக்கேபிக்கே... என்று நிறுத்தாமல் சிரித்துக்கொண்டு இருந்தாள். என்னது தென்னம் ஓலையை போல் நீண்டு இருக்கா கூந்தல் எப்படி பச்சை கலரா மாறினுச்சு... நல்ல வேளை நீங்க வேற எதையும் ஒப்புமை படுத்தி எழுதல என்று மீண்டும் சிரித்தாள்.

             "போ... மொட்டை நீ ரொம்ப கிண்டல் பண்ணாதே..உனக்கு தான் எழுத வருதுன்னு என்றாள் தலை சாய்த்து.

            "சரி நான் கிண்டல் பண்ணல நீங்க சாப்பிடுங்க உங்களோடது அனுப்பும் போது என்னோடதும் அனுப்பி வைச்சேன் ஆனால் உங்கள் பெயரில் உள்ளதுதான் முதலில் வந்திருக்கு என்னோடது எப்போ வருமோ தெரியல இந்த வாரம் வருமென்று நினைக்கிறேன். எனக்கு பிடிச்ச அறிவிப்பாளர் கையில் கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல தெரியுமா? நான் நினைச்சமாதிரியே அவங்க வாசித்தது எனக்கு அவ்வளவு சந்தோஷம் நான் எழுதியதைவிட அவங்க அந்த பிரதிக்கு உயிர் கொடுத்ததுதான் சிறப்பு.. என்றாள் பெருமையாக.

          "என்னடி நீ என்னனவோ சொல்றே எனக்கு ஒன்னுமே புரியல நாம எங்க ரேடியோ கேட்கிறோம் அன்னைக்கு நான் வீட்டில் இருந்ததால கேட்டேன். அதுவும் என் அண்ணன் பொண்ணு ஓடிவந்து அத்தை நீ ரேடியோவுக்கு ஏதாவது எழுதினியா உன்னோடது ரேடியோவில் வருது வையின்னு சொன்னா அதன் பிறகுதான் வைச்சேன் நீ சொல்ற மாதிரி எனக்கு ஒன்னும் தெரியல யார் அந்த அறிவிப்பாளர் குரல் நல்லாதான் இருந்துச்சு ஆனால் உன்னை மாதிரி எனக்கு ரசிக்க தெரியல, அப்ப அவங்களுக்கு நன்றி சொல்லி ஒரு லெட்டர் போடு.."

         "அதெல்லாம் எப்பவோ போட்டாச்சு.. அவங்களுக்கு கிடைச்சுதா,  கிடைக்கலையா, பதில் வருமா வராதான்னு ஒன்னும் தெரியல, நம்மள மாதிரி அவங்களுக்கு எத்தனை பேரோ .. ம்.. சரி அப்புறம்.." என்றாள் பெரும்மூச்சு விட்டபடி.

          "அப்புறம் என்ன எல்லாத்தையும் எழுதி போட்டுறு அப்படியே அக்கா பேரூல இன்னொரு ஸ்கிரிப் ரெடி பண்ணிரு ஊருக்குள்ள இப்பவே கேட்க ஆரம்பிச்சுட்டாங்க"

          "அட நீங்க வேற அதெல்லாம் டக்குனு எழுத முடியாது மூடு வரணும்"

          "சரி.. சரி.. யோசிச்சு பொறுமையா எழுது ஒன்னும் அவசரம் இல்ல, சரி நான் போறேன் கலா ஏவாது லெட்டர் போட்டுச்சா?"

           "ம்.. லெட்டர் வந்துச்சு... வளைகாப்பு செய்ய போறாங்களாம் சொன்னுச்சு உங்களையும் கேட்டு எழுதியிருக்கு"

          "சரி நான் போறேன்  பீரோவை திற இந்த ஜாக்கெட்டுக்கு மேட்சா ஒரு புடவை எடு என்றாள். வள்ளி எப்ப வீட்டுக்கு வந்தாலும் இவளிடம் இருந்து ஏதாவது ஒரு புடவை வாங்கி செல்வாள். சுதாவும் கேட்டவுடனே எடுத்து கொடுத்துவிடுவாள். இவள் அவ்வளவாக புடவை கட்டுவது கிடையாது கட்டத்தெரியாது என்பதால் வள்ளியே எல்லா புடவையையும் கட்டி கட்டி வைப்பாள். இப்போதும் அப்படிதான் புடவை கட்டிக்கொண்டு பத்திரமா இரு என்றபடி சென்றாள் வள்ளி.
அதன் பிறகு சுதாவின் நேயர் அரங்கமும் ஒலிபரப்பானது அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வானொலியில் சுதாவின் நேயர் அரங்கம், கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரைகள் என வரிசைதாக வந்து கொண்டே இருந்தது. அதே நேரத்தில் வள்ளியும் தன் பெயரிலும் எழுதி தான்னு சொல்லி கேட்கவும் தொடங்கியிருந்தாள். நேயர்களின் பாராட்டு கடிதம் ஒரு போதையை உண்டு பண்ணியிருந்தது வள்ளிக்கு. இப்படி ஒவ்வொரு நாளும் நாட்களை சந்தோஷமகா கழித்தார்கள். அப்படி இப்படி என்று பத்து வருடங்களை கடந்து விட்டது. ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தூங்கி ஒன்றாக சுற்றி உன் பணம் என் பணம் என்று பிரி்த்து பார்க்காமல் செலவு செய்து, ஒன்றாக சாகவும் முடிவெடுத்தவர்கள். இன்று எங்கோ தூரத்தில் தனித் தனியாக இருக்கிறார்கள்.  வள்ளி வேலையின் காரணமாக வெளிநாடு சென்றாள். சில வருடம் அங்கிருந்துவிட்டு வேலை கஷ்டமென்று மீண்டும் இந்தியாவிற்கு வந்த வள்ளி அவள் வீட்டுக்கூட போகாமல் சுதாவின் வீட்டிற்குதான் வந்தாள். அதன் பிறகு இப்போது வேற ஊரில்  ஹாஸ்பிட்டலில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள் வள்ளி. இப்போது அவ்வளவாக சுதா வீட்டுக்கு வருவதில்லை நட்புதான் பெரிதென்று நினைத்தாள் சுதா சில நேரம் அம்மா, உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்ய வர்புறுத்தும் போது.. சுதாவுக்கு எப்போதும் வள்ளியின் நினைவே வந்தது. தான் போய் விட்டால் வள்ளியின் நிலை என்னாகும் என நினைத்து அடிக்கடி கவலைப்பட்டாள். சுதாவுக்கு ஏற்கனவே திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றாலும் இப்போது புதிதாக ஒரு காரணம் கிடைத்தது வள்ளியை நாம் தான் பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு தனக்கு இருக்கு என்று நினைத்தாள் நம்பினாள். இப்போது சுதா திருமணம் வேண்டாம் என்று மறுப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. சுதாவுக்கு எப்போதும் தன்னிடம் யாரும் நெருக்கமாக பழகிவிட்டால், அவர்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் எந்த தியாகத்தையும் செய்வாள் சிறுவயதில் இருந்தே நட்புக்கு முக்கியத்துவும் கொடுப்பாள் உறவுகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

           நட்பு நட்பு என்று உயிரா இருந்தவர்கள் இன்று இருவரும் எங்கோ ஒரு மூலையில் பேசிக்கொள்வது கூட கிடையாது. நாட்கள் செல்ல.. செல்ல மனமும் இடைவெளி விட்டே கடந்து வந்துவிட்டது போலும்.  ஆரம்பத்தில் சுதாவுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது மனிதர்கள் எப்படி வேண்டுமென்றாலும் நிறம் மாறலாம் நாம் தான் கவனமாக இருக்க வேண்டுமென்று புரிந்து கொண்டாள். இப்போது கலா அடிக்கடி சொன்ன வாசகம் நினைவு வந்தது 'நீ ரொம்ப நம்பிக்கை வைக்கிற ஒரு நாள் நீ மனம் நொந்து அழுவ அப்ப நான் சொன்னதை நினைச்சு பார்ப்பேன்னு' சொன்ன அந்த வார்த்தை எத்தனை நிஜம் அதுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நினைச்சோம் ஆனால் நம்மை விட கலா புத்திசாலி நமக்கு தெரியாதது அதுக்கு தெரிஞ்சு இருக்கே என நினைத்து மனசுக்குள் பாராட்டவும் செய்தாள். சுதா பள்ளியில் படிக்கும் போதே ஹாஸ்டலில் தங்கியதால் சுதாவுக்கு நட்பு மட்டுமே முக்கியமாக பட்டது உறவினர்களை விட தன்னிடம் பழகுபவர்களையே உயிராக நினைத்தாள் இது சுதாவின் சுபாவம் இரக்க குணம் அப்படி நினைக்க வைத்தது. ஆனால் கலா போல் ஒரு  உண்மையான தோழி சுதாவுக்கு இனிமே கிடைப்பது கஷ்டம் அதை தான் எப்பவும் மறக்க கூடாது என மனதிற்கு நினைத்துக்கொண்டாள் . கலா சுதா மீது பாசமாகதான் இருந்தாள் சுதாதான் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடமிருந்து விலகி வந்தாள். கலாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் சுதாவால் பழையபடி அவளிடம் பேச முடியவில்லை ஏதோ ஒரு திரை விழுந்தது. இரண்டு தோழிகளுக்குள் எப்போதும் திருமணம் ஒரு பிரிவை ஏற்படுத்திவிடுகிறது என்பது உண்மை. சுதாவுக்கு அப்படிதான் ஒரு இடைவெளியை உண்டு பண்ணியது அது ஒரு குடும்பம் ஆகிவிட்டது இனிமே நாம் விலகி இருக்க வேண்டியதுதான் என்று இவளாகவே ஒரு முடிவு எடுத்துக்கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்துக்கொண்டால். ஆனால் வள்ளியிடம் இவளாகதானே நட்பு கொண்டாள் கலாவின் சாபமோ இது இத்தனை வருட நினைவுகளை அசை போட்டபடி கண்களில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல்  துடைத்தாள் இதழின் ஓரம் ஒரு சிறு புன்னகை அரும்பியது நாம அப்படி இருப்போம் இப்படி இருப்போம், நான் அந்த வேலை செய்வேன் நீ இந்த வேலை செய்யனும் யாரும் நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு நாம வாழ்ந்து காட்டணும் என்று சிநேகிதி படத்தில் வர்ற ஜோதிகா மாதிரி  அன்று பேசிய வார்த்தைகள் காற்றை கிழித்து காதுக்குள் வந்து கிசுகிசுத்தது. அதுதான் அவளின் இந்த குறுநகைக்கு காரணம் எத்தனை கற்பனை உலகத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன்  வெறும் வார்த்தைகள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா?  என்னை போன்று ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இனி யாரும் பிறக்க முடியுமா? எல்லாம் தெரிந்தது போல் பேசி என்ன பயன் துணிச்சலாக முடிவெடுக்க தெரிந்தவளுக்கு சரியான வழியை கண்டு பிடிக்க முடியவில்லையே என மனம் நொந்தபடி  பயணித்தாள் சுதா.

               சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து மன்னார்குடியை தாண்டி  பட்டுக்கோட்டையை நோக்கி விரைந்தது. சுதா பின்னால் திரும்பி பார்த்தாள் பஸ்சில் ஆங்காங்கே சில இடம் காலியாக இருந்தது, தன் அருகே அமா்ந்து பயணித்தவரின் இடமும் காலியாக இருந்தது. தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவரவர் இறங்கி சென்று விட்டார்கள். இவளின் வாழ்க்கையில் வந்த நண்பிகள் போல ஆனால் இவள் மட்டும் இன்னும் பயணித்துக் கொண்டே இருக்கிறாள் தனியாக. இந்த நெடுந்தூர பயணத்தில் அடுத்து இவளோடு யார் பயணிப்பார்களோ....???


                      * முற்றும் *

No comments:

Post a Comment